உயிரினம் அறிவோமா?
பீவர் (Beaver)
அணை கட்டும் திறமையுள்ள பீவர் கொறித்து உண்ணும் பிராணிகளில் பெரியதாகும்.
தன்னுடைய கூர்மையான பற்களினால் மரங்களின் அடிப்பகுதியைக் கொறித்து அறுத்து மரங்களைக் கீழே சாய்க்கும். பின்னர், மரத்தைத் துண்டு துண்டாகச் செய்து ஆறுகளின் குறுக்கே அணையினைக் கட்டுகிறது.
அணை கட்டி நீரைத் தேக்கும் குளங்களில் தம் வீடுகளை அமைக்கின்றன. மரத்துண்டுகள், கிளைகள், பாறைகள், மண் முதலியவற்றைக் கொண்டு ஒரே அறையுள்ள சிறு வீடுகளைக் கட்டிக் கொள்கின்றன. இந்த வீடுகள் கூண்டு வடிவில் இருக்கும்.
வீட்டின் தரைமட்டம் குளத்திலிருந்து சிறிது உயர்ந்திருக்கும். நீரில் இருந்தபடியே வீட்டினுள் செல்வதற்கு இரண்டு குடைவு வழிகள் அடியில் செல்லும். குளங்களிலிருந்து வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்கு வசதியாகவும், கோடைக்காலத்தில் வேண்டிய அளவு நீர் தேங்கி நிற்பதற்கு ஏற்றவாறும் அணைகளைக் கட்டுகின்றன. இதனால் மழைக் காலத்தில் வீடுகளில் நீர் புகுந்து விடாமலும் கோடைக் காலத்தில் நீர் குறைந்துவிடாமலும் குளத்தின் நீர்மட்டம் ஒரே சீராக இருக்கும்.
பீவர்கள் ஒரு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. வாலின் நீளம் மட்டும் 30 செ.மீ. ஆகும். இதன் முன்கால்கள் குட்டையானவை. பின்கால்களின் விரல்களிடையே சவ்வு போன்ற தோல் உள்ளது. பீவரின் நிறம் சிவப்பு கலந்த பழுப்பாக உள்ளது. இதன் முடி அடர்த்தியாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இதற்காக பெருமளவில் வேட்டையாடப்படுகிறது. நன்கு நீந்துவதற்கேற்ற உடல் அமைப்பினை உடையது. இதன் வால் தட்டையாக இருப்பதுடன் அதன் மேல் பகுதியில் செதில்கள் காணப்படுகின்றன. இது துடுப்பு போன்று பயன்படுகிறது. நீரில் மூழ்கும்போது தனது காது, மூக்கின் துளைகளை மூடிக்கொள்ளும்.
மரப்பட்டைகள், வேர்த்துண்டு, தளிர்கள் போன்றவற்றைச் சாப்பிடுகின்றன. 2 வகையான பீவர்கள் காணப்படுகின்றன. ஒரு வகை வட அமெரிக்காவிலும், இன்னொரு வகை அய்ரோப்பாவிலும், வட ஆசியாவிலும் காணப்படுகின்றன.
– கு.மீனா, விளாத்திகுளம்