சூழல் காப்போம்! கான் உலா போறீங்களா…? கொஞ்சம் கவனிங்க!
பிஞ்சண்ணா
மகாராஷ்டிரா மாநிலத்தின் தடோபா அந்தாரி புலிகள் சரணாலயத்தில் கானுயிர்* ஒளிப்படக் கலைஞர் (Wildlife Photographer) தீப் கதிகர் எடுத்த ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை ஒரு புலி கவ்விச் செல்லும் ஒளிப்படம் அது.
இன்னொரு சமயம், கார்பெட் புலிகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் பையில் இருந்த உணவுப்பொருளைத் தூக்கிச் சென்று தின்னும் சிறுத்தையின் படமும் வெளியானது.
சுற்றுலா என்கிற பெயரில் வன விலங்குச் சரணாலயங்களுக்குச் சென்று, அங்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைப் போடுவதன் மூலம் கானுயிர்களின் வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1. மீண்டும் மீண்டும் நீர் நிரப்பிப் பயன்படுத்தும் வகையிலான தண்ணீர்ப் புட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
2. உணவுப் பொட்டலத் தாள்கள் உள்ளிட்ட பிற குப்பைகளை ஒரு பையில் சேகரித்து வெளியில் கொண்டு வந்து உரிய இடத்தில் போட வேண்டும்.
*கானுயிர் -Wild life
*கானுலா – Jungle Safari
3. நாம் கடந்து வரும் வழியில் கிடக்கும் பிற குப்பைகளையும் அகற்றித் தூய்மை செய்யலாம்.
கானுயிர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டால், அவற்றின் உயிர் பறிபோகும் நிலையும் ஏற்படலாம். அழிந்து வரும் உயிரினங்களாயினும் சரி, அதிகம் இருக்கும் உயிரினங்கள் ஆயினும் சரி, நம்மால் அவை அழியலாமா?