இதுதான் பழகுமுகாமின் சிறப்பு!
பங்கு கொள்ளும் ஒவ்வொரு குழந்தையுமே வெவ்வேறு சூழலில் வளர்ந்து, ஒரே இடத்தில் பழகு முகாமுக்கு வந்து அனைவரிடமும் பழகி, அதுவரையிலும் பார்க்காத கோணத்திலெல்லாம் சிந்திக்கவும், செயல்படவும் கற்றுக் கொள்வதுதான் பழகு முகாமின் தனித்த சிறப்பு.
சில சமயம், தான் மற்ற குழந்தைகள் போல் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டால் என்ன செய்வது? என்று பெற்றோர் சிலர் அஞ்சுவதுண்டு. எனக்கும் இப்படித்தான் இருந்தது, இப்போது சரியாகிவிட்டது என்று சொல்கிற குழந்தைகளும் அங்கே இருப்பர்! அவர்களோடு பழகினால், அதுவும் சரியாகிவிடும். இப்படித்தான் ஏராளமான நண்பர்களைப் பெற்று, அடுத்த ஆண்டு எப்போது வரும் என்றும், பழகு முகாமில் கலந்து கொண்டு பழைய, புதிய நண்பர்களையும் பார்ப்பது எப்போது என்றும் பிஞ்சுகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குண்டுச்சட்டிக்குள் ஓடுகிற குதிரை கூட, வெவ்வேறு பாதைகளை, சிந்தனைத் திறப்புகளை, நட்பை வாரி வழங்குகிற பழகு முகாம் குழந்தைகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
அதிகாலை 5:30 மணிக்கு நடைப் பயிற்சியுடன் பழகு முகாமின் முதல் வகுப்பு தொடங்கிவிடுகிறது. அடுத்து கராத்தே, சிலம்பம், யோகா போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்கவேண்டும். பிறகென்ன? நன்றாகப் பசிக்கும்! உணவுக்குப் பின்னர், கோடைக்கேற்ப, குளுமையான அய்ஸ்ன்டீன் அரங்கில் பேராசிரியர் முருகன் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து, நாம் பயன்படுத்திய பொருட்களில் கலைப்பொருள்கள் செய்வதைக் கற்றுக்கொண்டனர். மதிய உணவுக்குப்பிறகு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் கற்றல், ”பெரியார்” திரைப்படம் திரையிடல், இரவு உணவு என்று அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதுமட்டுமா? விடுதலை நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் விடுகதை மூலம் விழிப்புணர்வு பெறுதல், பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் அவர்களின் கலகலப்பான கதை சொல்லல் வகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு, சுற்றுலா சென்று கழிவுப்பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், உணவு அருங்காட்சியகம் சென்று உணவின் பரிணாம வளர்ச்சியைக் கற்றனர். நாள்தோறும் மாலையில் விளையாடினர் என்று பிஞ்சுகளின் உற்சாகத்திற்கும், அறிவுத்திறனுக்கும் தீனி போடும் வகையில் தொடர் வகுப்புகள் நடைபெற்றன. அய்ந்தாம் நாளில் பெரியார் பிஞ்சுகள் 80 தேக்கு மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் மாசுறுவதைத் தடுக்கும் பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
இப்படிப்பட்ட அறிவார்ந்த பிஞ்சுகள் அனைவரும் எளிய முறையில் ஆங்கிலம் கற்க, “ஆங்கில ஆசான்” புத்தகத்தை (11 தொகுதிகள் அடங்கியது) 76 பெரியார் பிஞ்சுகளுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் சோம.இளங்கோவன் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.
இதனால் தான் அய்ந்தாம் நாளில் பழகு முகாம் வளாகத்தைவிட்டு வெளியேறச் சொன்னால் பிஞ்சுகள் வருந்துகின்றனர். இந்தப் பின்னணியில் அவர்களிடம் பேசியபோது அவர்கள் எங்களிடம் பேசியதை நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள்.
சாரல் இன்பன், சென்னை
“பழகு முகாம் பற்றி முழுமையாகச் சொல்லவேண்டுமென்றால் அதற்கு நேரம் போதாது. நான் இரண்டாம் ஆண்டு வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு நண்பர்களைப் பார்த்தேன். இந்த ஆண்டும் நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். சென்னையை விட இங்கே இந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ஆண்டும் வாய்ப்புக் கிடைத்தால் வருவேன். வீட்டில் கூட உணவு இப்படிச் செய்வார்களா என்பது தெரியாது. அம்மாவை விட அருமையாக இங்கே இருக்கிற அக்காக்கள் எங்களைப் பார்த்துக்கொண்டார்கள். காலை முதல் தூங்கும் வரையிலும் ஒரு சின்னக் குறை சொன்னால்கூட சரியாகச் செய்து முடிப்பார்கள்.
நவிலன் வெண்பா, சென்னை (வயது 9)
இங்கே புதிது புதிதாக நிறையவே கற்றுக்கொண்டோம். வெளியில் சென்றோம். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள்.
திரிசுல், சென்னை (7 ஆம் வகுப்பு)
என் நண்பரின் அம்மா இந்த முகாம் பற்றி எனக்குப் பரிந்துரை செய்தார். இங்கே நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். இப்போது நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள் மிகவும் ஜாலியாக எங்களுடன் பழகினார்கள். அய்ந்து நாட்கள் என்பது இரண்டு நாட்களில் முடிந்தது போல் இருக்கிறது. இந்த முகாம் நாள்தோறும் வைத்தால் நன்றாக இருக்கும்.
இளம் சேகுவேரா, ஆவடி (7 ஆம் வகுப்பு)
பழகு முகாம் பற்றி நீண்டநேரம் பேசலாம். தஞ்சை சரஸ்வதி மகால் போனோம். அய்ன்ஸ்டீன் அரங்கில் நிறைய கற்றுக்கொண்டோம். கைவினைப் பொருட்கள் செய்தோம். கரிகால் சோழன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அணை இன்றைக்கும் பயன்பட்டு வருகிறது என்று தெரிந்துகொண்டேன். அது செமையா இருந்துச்சு!
நபன்யா, புதுக்கோட்டை, (6 ஆம் வகுப்பு)
கேமராவுக்கான மைக்கை நீட்டியவுடன் நாம் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, “மைக்கில் சவுண்டே வரவில்லையே. எதற்கு இது?” என்று நம்மிடம் எதிர்க்கேள்வி கேட்டுவிட்டு, நாம் சமாதானம் சொன்ன பிறகு, நமது கேள்வியை அனுமதித்தார். அதிகமாகப் பேசும் இவருடைய பதில், “பழகு முகாம் மிகவும் பிடித்திருக்கிறது” என்று ரத்தினச் சுருக்கமாக இருந்தது.
சிபிராஜ், (6 ஆம் வகுப்பு)
இவரிடம் பழகு முகாம் பற்றிக் கேட்டதற்கு, “மூன்றாம் முறையாக பழகு முகாம் வந்திருக்கிறேன். சிக்கன் பிரியாணிக்காக வந்திருக்கிறேன்” என்று சொல்லி, நம்மையும், உடன் இருந்த நண்பர்களையும் சிரியோ, சிரி யென்று சிரிக்கச் செய்துவிட்டார்.
ஜே.அகரா, திண்டுக்கல்
இவர், பழகு முகாமில் பழைய, புதிய நண்பர்களிடம் தன்னுடைய வலது கை முஷ்டியைப் பிடித்துக் காட்டியபடியே இருந்தார். நாம் அவரை அணுகி பழகு முகாமில் தங்களுக்குப் பிடித்ததைக் கூறமுடியுமா? என்று கேட்டபோது, “சிலம்பம்” என்று ஒற்றைச் சொல்லில் பதிலை முடித்துக்கொண்டார். “ஓஞ் அதனால்தான், அனைவரிடமும் முஷ்டியைக் காட்டிக் கொண்டிருக்கிறீர்களா? என்று தப்பித்துச் செல்வது போல் நாம் ஓடஞ் அகரா வெடித்துச் சிரித்துவிட்டார்.
யாழினி, ஆத்தூர், (6 ஆம் வகுப்பு)
பழகு முகாமில் மிகவும் உற்சாகமாக உலாவிக்கொண்டிருந்த குட்டிப்பெண் யாழினியை அணுகி, “பழகு முகாம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டதும், முகம் மலர’ “நான் முதல் முறையாகத்தான் வந்திருக்கிறேன். மிகவும் பிடித்திருக்கிறது” என்றார். அவரைப் பார்த்து உற்சாகமடைந்த நாம், “எவ்வளவு பிடித்திருக்கிறது?” என்று மறுபடியும் கேட்டவுடன், “யுனிவர்ஸ் அளவுக்கு” என்று கூறி, நம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.
நிரல்யா, மதுரை
பழகு முகாமில் உற்சாகமான உருவமாக உலவிக்கொண்டிருந்த இன்னொரு பெரியார் பிஞ்சு இவர். இவரை அணுகிக் கேட்டபோது, “நான் இரண்டாம் முறையாக வந்திருக்கிறேன் என்றார். ”பழகு முகாம் எவ்வளவு பிடித்திருக்கிறது” என்று கேட்டதற்கு, கைகள் இரண்டையும் முடிந்த அளவுக்கு அகலமாக விரித்து, “இவ்வளவு” என்று சிரித்தபடியே கூறி, நம்மையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்தார்.
இலக்கியா, திண்டுக்கல், (4 ஆம் வகுப்பு)
இரண்டாம் முறை வந்திருந்த பெரியார் பிஞ்சு அறிவுக்கரசுவின் தங்கை இவர். அவரைச் சந்தித்து, “அண்ணன் என்ன சொல்லி உங்களை அழைத்து வந்திருக்கிறார்?” என்று கேட்டதும், “அண்ணன் சொல்லவில்லை, அம்மாதான் பழகு முகாம் ஜாலியாக இருக்கும் என்று சொன்னாங்க. ஜாலியாகத்தான் இருக்கிறது. அடுத்த ஆண்டும் கண்டிப்பாக வருவேன்” என்று நமது கேள்விகளுக்கு இடமின்றி மூச்சுவிடாமல் அவராகவே சொல்லிவிட்டு, விறுவிறுவென்று ஓடிவிட்டார்.
ஆனந்த பிரபாகரன் (9 ஆம் வகுப்பு, மதுரை)
எப்போதுமே சிரித்த முகத்துடன் வலம் வரும் இவரிடம் பேசியபோது, ”நான் மூன்றாம் முறையாக வருகிறேன். இங்கே பிரின்சு, உடுமலை உட்பட எல்லோரும் நன்றாகப் பழகுகிறார்கள். அதனாலேயே திரும்பத் திரும்ப வருகிறேன்” என்று கூறி ஒருங்கிணைப்பாளர்களையே வெட்கப்பட வைத்துவிட்டார்.
முனைவர் எஸ்.குமரன் (பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர்)
ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) இரண்டு குழந்தைகள் அவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகளைக் கொடுத்தனர். அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பரிசோதனைக் கூடத்தில் வைத்தோம். அந்த கயிறு படும் இடத்திலெல்லாம் ஏராளமான கிருமிகள் வளர்ந்திருக்கிறது. அதை அனைவரும் பார்க்கும் வண்ணம் காட்டியிருக்கிறோம். இது வியர்வை வழியாக உண்ணும் உணவுடன் வயிற்றினுள் செல்லும். அது தொடர்பான நோய்கள் வரும். ஆகவே, கைகளில் கயிறு கட்டுவதை குழந்தைகள் தவிர்ப்பது நல்லது.
முனைவர் ரமேஷ் (உடல்கல்வி இயக்குநர், ஒருங்கிணைப்பாளர்)
பழகு முகாம் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு, புதுவை மாநிலங்களிலிருந்து பெரியார் பிஞ்சுகள் வந்திருக்கிறார்கள். நல்ல கருத்துகளையும், செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டு செல்கிறார்கள். எங்கள் துறையின் சார்பில் சிலம்பம், கராத்தே, யோகா கற்றுக்கொடுக்கிறோம். அதோடு வாக்கிங், ஜாக்கிங் அழைத்துச் செல்கிறோம். நீச்சல், விளையாட்டுகள் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து வருகிறோம். பிஞ்சுகளும் சிறப்பாகப் பங்கேற்றுக் கற்றுக் கொள்கிறார்கள்.
துணைப் பேராசிரியர் அலமேலு
(பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்)
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் குழந்தைகள் இங்கே வந்திருக்கிறார்கள். நாள்தோறும் திறன் மேம்பாடு, தொடர்புத் திறன் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து வருகிறோம். குதூகலத்துக்காக குதிரை வண்டி, இரட்டை மாட்டு வண்டிச் சவாரி செய்ய ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொடுக்கிறோம். குழந்தைகளும் நன்றாக அனுபவித்துக் கற்றுக்கொள்கிறார்கள்.
புதுவை சிவ.வீரமணி (ஒருங்கிணைப்பாளர்)
பழகு முகாமில் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை முடிவு செய்து குழந்தைகளுக்குச் சொல்கிறோம். மாலையில் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளும் உண்டு. இரவில் தங்களிடம் இருக்கும் திறமைகளைக் காட்டும் விதமாகவும், அவர்களின் அறிவுக்குத் தீனி கொடுக்கும் விதமாகவும் வகுப்புகளை அமைத்திருக்கிறோம். குழந்தைகள் இந்த 5 நாளில் கைப்பேசி இல்லாமல் சக மாணவர்களுடன் பழகி, விளையாடிக் களித்திருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோருடனும் நன்றாகப் பழகவேண்டும். அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறவேண்டும் என்கின்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ் உட்பட 50 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இதன் பின்னணியில் இருக்கின்றனர்.
கல்வியியல் துறை பேராசிரியர் அனுசுயா (ஒருங்கிணைப்பாளர்)
பழகுமுகாமின் ஒரு நாள் என்பது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. குழந்தைகளை அய்ந்து குழுக்களாகப் பிரித்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அய்ந்து திணைகளை நினைவுபடுத்தும் விதமாகப் பெயர் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பாளராக ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் இருப்பார்கள். இரவில் குழந்தைகளுடன் ஒவ்வோர் அறையிலும் ஒரு பயிற்சி ஆசிரியர் உடன் உறங்குவார். இந்த அய்ந்து நாளில் அவர்கள் உணவை வீணாக்காமல் உண்ணப் பழகி விடுகிறார்கள். ஒருங்கிணைப்பாளர்களாக பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் என்று ஏராளாமானோர் இதன் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆ.சு.ஆனந்தினி, ஏழாம் வகுப்பு. சென்னை
நான் தஞ்சாவூர் பழகு முகாம் சென்றேன். புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். போகப் போக என்னுடைய ஆர்வம் மிகவும் தூண்டப்பட்டது. எனது அப்பா, அம்மா கூட இவ்வளவு கவனிப்புக் கொடுத்ததில்லை. சாப்பாடு மிக மிக அருமை. வெளியில் அழைத்துச் சென்று வேஸ்ட் பொருள்களை ரீசைக்கிள் பண்ணுவது பற்றிச் சொல்லிக் கொடுத்தார்கள். எங்களைக் கவனித்துக் கொண்ட அக்காக்களும் நண்பர்கள் போலவே இருந்தார்கள். நாங்கள் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையை எங்கள் கைகளால் செய்தோம். நான் அடுத்த ஆண்டும் செல்வேன்.