ஊருக்குப் போய் வந்த கரடி – 10 : காட்டைக் காப்பது நம் கடமை
“பாராட்டெல்லாம் இருக்கட்டும். கரும்புத் தோட்டத்துக்குள்ள ஒளிஞ்சிருந்த நீ எப்படி மறுபடி இங்கே வந்தே?”… ஆவலோடு கேட்டது காட்டுப்பன்றி.
எப்ப என்னை பள்ளிக்கூடத்திலே குழந்தைங்க பாத்தாங்களோ அப்பவே என்னைப் புடிக்க வனத்துறை ஆளுங்க ஊர் முழுக்க சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அது தெரியாத நான், கரும்புத் தோட்டத்திலே பதுங்கிட்டேன். நல்லா விளைஞ்ச கரும்பைப் பாத்த எனக்கு வாயிலெ எச்சி ஊறுச்சு. என்னைப் பாத்தாலே பயந்து ஓடுற மனிதர்களை நினைச்சா எனக்கு வயித்தைப் புரட்டுச்சு.
ஒண்ணும் புரியலே… சரியான தூக்கமில்லே… சரியான சாப்பாடு இல்லே… உடம்பு ரொம்ப சோர்வாயிடுச்சு. நான் ஒளிஞ்சிருந்த கரும்புத் தோட்டத்தைச் சுத்தி வலையெல்லாம் கட்டி வச்சிட்டு ஒரு இரும்புக் கூண்டையும் கொண்டு வந்து வச்சாங்க, வனத்துறை ஆளுங்க.
“இரும்புக் கூண்டா?” என வாயைப் பிளந்தது முயல்.
“ஓ… பறவை கட்டுனா கூடு… மனிதன் கட்டுனா வீடுன்னு சொன்னியே அது மாதிரியா?” என்று முன்பு பேசியதை நினைத்துச் சொன்னது ஆந்தை.
“கூடு, குகை, வீடு எல்லாம் நம்ம விருப்பப்படி வாழக் கிடைத்த விடுதலை எண்ணம். கூண்டுங்கிறது… அப்படியில்லே… அது அடிமையின் சின்னம்.” என்றது கரடி.
“அடடே ஊருக்குள்ள போயி வந்ததும் பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசுறே” எனத் தும்பிக்கையத் தூக்கிச் சொன்னது குட்டியானை.
“நான் உணர்ந்ததைச் சொன்னேன்…
கரும்புத் தோட்டத்தில இருந்த எனக்கு ரொம்பப் பசிச்சுது. அந்த இடத்தை விட்டு வெளியே வர முடியல.
‘அதோ! அங்கே இருக்கு… இதோ இங்கே இருக்கு’ன்னு தோட்டத்தைச் சுத்தி நின்னு ஆளுங்க எல்லாம் கத்துறாங்க. பொழுது அடங்குற வரைக்கும் அப்படி இப்படின்னு உலாத்துன என்னாலே பசி தாங்க முடியல…
வனத்துறை வச்ச கூண்டுக்குள்ள நிறைய பழங்கள் இருக்கிறதைப் பாத்தேன். கொஞ்சம் இருட்டுனதும் மெதுவா கூண்டுக்குள்ள போயி பழத்தை எடுத்தேன். டமால்னு ஒரு சத்தம்… கூண்டுக் கதவு மூடிக்கிச்சு.
அவ்வளவுதான்! நம்ம கதை முடிஞ்சுதுன்னு பயந்து போயிட்டேன். பசி வந்தா பத்தும் பறந்து போகும்னு சொல்லுவாங்க. பயம் வந்ததும் அந்த பசியே பறந்து போயிடுச்சு.
நிறைய ஆளுங்க வந்து கூண்டைத் தூக்கி ஒரு பெரிய வாகனத்துல ஏத்தி எங்கேயோ கொண்டு போனாங்க.
அதுவரைக்கும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்குப் பிறகு என்ன நடந்ததுன்னு தெரியல. முழிச்சுப் பாத்தா… கூண்டைச் சுத்தி நிறைய பேரு நின்னுக்கிட்டு என்னைக் காட்டிக் காட்டிப் பேசிக்கிட்டிருந்தாங்க. பசி மயக்கத்துல ஒன்னும் புரியல.
ரெண்டு நாள் கழிச்சு யாரோ ஒரு பெரிய அதிகாரி வந்தாரு… என்னைப் பாத்தாரு… போயி மத்தவங்ககிட்டே ஏதோ பேசினாரு…
மறுபடி கூண்டை அந்த பெரிய வாகனத்துல ஏத்துனாங்க. கூட நாலுபேரு அந்த வாகனத்துல ஏறிக்கிட்டாங்க. வாகனம் புறப்பட்டது.
எனக்கு அம்மாவை, விட்டுட்டு தன்னந்தனியா வந்து இப்படி மாட்டிக்கிட்டமேன்னு ஒரு பக்கம் கவலை. எங்கே கூட்டிப் போவாங்க, என்ன செய்வாங்கன்னு இன்னொரு பக்கம் மன உளைச்சல்.
வாகனம் நம்ம காட்டுக்குள்ளவே வந்து நின்ன பிறகும் எனக்கு பயம் போகல. கூண்டைத் திறந்து என்னை வெளியே விரட்டுன பிறகுதான் ஓர் உண்மை புரிஞ்சுது.”
“அது என்ன உண்மை?” என்று கேட்டது அம்மா கரடி.
“வனத்துறை ஆட்கள் என்னை மக்கள் கிட்டேயிருந்து காப்பாத்திக் கூட்டி வந்து மறுபடி காட்டுலேயே விட்டுட்டுப்போறாங்கன்னா அதுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கணுமில்லே… ” என்றது கரடி.
“ஆமாமா! நம்மளை வேட்டையாடி, யாருக்கும் தெரியாம வலை விரிச்சுப் புடிக்கிறவங்க எல்லாரும் நம்மளை வச்சு பணம் சம்பாதிக்க நினைக்கிறவங்க அப்படிங்கிற உண்மை இப்ப தெளிவாயிடுச்சு.” என்றது கழுதைப்புலி.
“ஆனா ஊருக்குள்ள போன உன்னை கவனமாப் புடிச்சுக் கொண்டு வந்து வாழ்வு தந்திருக்காங்கன்னா நம்ம மாதிரி மிருகங்களாலும், இந்த காடுகளாலும் மனிதர்களுக்கு நிறைய பலன் இருக்குன்னு தானே பொருள்.” என்றது அம்மா கரடி.
“சரி… ஊருக்குப் போயி வந்த கரடி மூலமா நமக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது.
மிருகமோ, மனிதனோ யாரா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் தொல்லை கொடுக்காம தங்களோட வாழ்க்கையை வாழ்ந்தா எல்லாரும் நல்லாயிருக்கலாம். இந்தக் காடு, ஊரு எல்லாமே நல்லாயிருக்கும்” என்றது குரங்கு.
“சரி… இனி யாரும் ஊருக்குள்ள போறேன்னு அடம் புடிக்கக்கூடாது.
என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அது மனிதர்கள் வாழுற இடம். நமக்குச் சரிப்படாது.
எந்த வசதி வாய்ப்பும் இல்லேன்னாலும் இந்தக் காடுதான் நாம வாழ ஏத்த இடம்.” என்றது குட்டியானை.
“இந்த காட்டை அழியாமக் காப்பாத்தி வச்சுக்க வேண்டியது நம்மளோட கடமை.
காட்டை அழிச்சு வாழலாம்னு யாரு நினைச்சாலும் அது மடமை.” என்றது காட்டுப்பன்றி.
“ஊருக்குப் போயி வந்த கரடி…” என்று ஓங்கிக் குரல் எழுப்பியது குரங்கு.
“வாழ்க! வாழ்க!” என எல்லா விலங்குகளும் முழக்கமிட்டன.
அந்த வாழ்த்தொலி இரவு முடிந்து விடியல் வரும் வேளையில் காடு முழுக்க எதிரொலித்தது.
(பயணம் முற்றுப்பெற்றது…)