துணுக்குச் சீட்டு – மழை தருவது மந்திரமா?
“மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.” இந்த வரியை, நமக்கு எழுதப் படிக்க தெரிஞ்ச நாளில் இருந்து கேட்டுக்கிட்டும் படிச்சிக்கிட்டும் இருக்கோம் அல்லவா? ஆனா, எப்படி மரம், மழை வர உதவுது? அதுக்கு மந்திரம் தந்திரம்ன்னு ஏதாச்சும் தெரியுமோ?
மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை, எல்லாம் அறிவியல் தான்.
தாவரங்களின் இலைகளில் இலைத்துளைகள் (Stomata) உள்ளன. இந்த இலைத்துளைகள் மூலமாகத் தான் தாவரங்கள்ல சுவாசித்தலும் உணவு தயாரித்தலும் நடைபெறுகின்றன. பகலில் மட்டும் உணவு தயாரிக்கும் வேலை நடைபெறும். அப்போ CO2 வை எடுத்துக்கிட்டு O2 வை வெளிவிடும்.
இரவுல O2 வை மட்டும் சுவாசிச்சி எடுத்துக்கிட்டு CO2 வை வெளிவிடும் இப்படி மாறி மாறி நடந்துகிட்டே இருக்கும். அதே நேரத்துல இந்த இலைத் துளைகள் மூலமாதான் தண்ணீரும் வெளியே வரும். ஆமா, நம்மளுக்கு வேர்ப்பதுபோல செடிகளுக்கும் வேர்க்கும். இந்தத் தண்ணீர் வெளிய வருவது மூலமா, செடியோட வெப்ப நிலை குறையும். இப்படி வேர்த்து வெளிய வரும் தண்ணீர், நம்ம நண்பர் சூரியன் உதவியோடு ஆவியாய் மாறும். இந்த நீராவி, மேகமா மாறி நமக்கு மாரியாய் வரும். எப்படி, மாறி மாரி Rhyming நல்லா இருக்கா? (சரி சரி எதுன்னாலும் மனசுக்குள்ளையே திட்டுங்க…)
இலைத்துளைகளில் இருந்து தண்ணீர் வெளிய வருவதை Transpirationன்னு சொல்லுவாங்க. இந்த Transpiration தாவரங்களில நடக்குறதால தான், அடர்ந்த பெரிய காட்டுப்பகுதியில இருக்கற மரம், செடி, கொடிகள் எல்லாம், அதிகப்படியா நீராவியை வெளியேத்தி காட்டுப்பகுதிகள்ல அடிக்கடி மழை வர உதவுது. அது சரி, புவியீர்ப்பு விசை இருந்தாலும், எப்படி மர உச்சி வரைக்கும் தண்ணீர் போகுது? இப்பவும் சொல்றேன், மாயமும் இல்லை மந்திரமும் இல்லை, எல்லாம் அறிவியல் தான்.. நீங்க எப்படி தண்ணீர் மேல போகுதுன்னு யோசிட்டே இருங்க, நான் என் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் போறேன்… சந்திப்போம்.