கதை கேளு… கதை கேளு…நிகரிலா Loading…
இரவு பத்துமணி. திருக்குறள் அரசிக்கு நாளை கணிதப் பாடத்தில் தேர்வு. பதினோராம் வகுப்புப் படிக்கின்றாள். புத்தகத்தை மூடிவிட்டு ரகசிய அறைக்குள் நுழைந்தாள். அவள் வீட்டில் இருக்கும் அந்த அறையைப் பற்றி அவளுக்கும் அவளுடைய தாத்தாவிற்கும் மட்டுமே தெரியும். அவளுடைய தாத்தா இறந்து 18 மாதங்கள் கடந்துவிட்டன. அவள் அறைக்குள் சென்றது அவள் தாத்தாவிடம் பேசுவதற்குத்தான்.
இறந்துபோன தாத்தாவிடம் பேசுவாளா? பேய்க் கதையா? அல்லது மாந்திரீகக் கதையா? என்று எண்ணிக் குழப்பம் வேண்டாம். இதோ திருக்குறள் அரசி தன் தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருக்கின்றாள்.
தாத்தா, தான் வாழும்போது எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பார். என்ன தொழில்நுட்பம் வருகின்றது என்றாலும் முதல் ஆளாக அதனைப் பயன்படுத்துவார். ஆராய்ச்சி செய்வார். அப்படித் துவங்கியதுதான் இந்தப் பயணம். “நிகரிலா” என்னும் தொழில்நுட்பத்தை ஒரு கல்லூரி மாணவருடன் இணைந்து உருவாக்கினார். ‘நிகரிலா’ என்பது ஒரு சிறிய கருவி. அதனை முழுமையாக முடிக்கும் முன்னரே இறந்துவிட்டார். நிகரிலா ஒருவரைச் சாகாவரம் பெற்றவராக மாற்றும். உயிர் இருக்காது, உடலும் இருக்காது.
ஒரு கருவியிடம் தன் எண்ணங்களையும், நினைவுகளையும், கருத்துகளையும் பதிவிடத் துவங்கினார். அதனோடு பல வாரங்களாகத் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசினார். தாத்தா எப்படி என்ன நினைப்பாரோ, அந்தக் கருவி அப்படியே சொல்லிவிடும்.
இது அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட், செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் போல அல்ல. இவை எல்லாம் கேட்ட கேள்விக்கு இணையத்திலிருந்து தகவல்களைத் திரட்டி, தகுந்த பதிலையோ தகவலையோ திரும்பித் தரும். இந்தக் கருவி அப்படி அல்ல. தாத்தாவின் சிந்தனையை மட்டும் வெளிப்படுத்தும்.
திருக்குறள் அரசி தினமும் தாத்தாவோடு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் இரவில் பேசுவாள். இப்படி ஒரு கருவி இருப்பதே வீட்டிலுள்ள யாருக்கும் தெரியாது. அதே போலத் தினமும் அரைமணி நேரம் இணையத்தில் செய்தித்தாள்களைப் படிப்பார். அதாவது, கருவி படிக்கும். அவ்வளவுதான். அதன்பின்னர் குறள் கருவியை நிறுத்திவிடுவாள். நிகரிலா, அப்படியே தாத்தாவின் குரலில் பேசும். ஒரு துளியும் அது கருவி என்ற எண்ணம் வராது. தாத்தா பக்கத்திலிருந்து பேசுவது போல இருக்கும். அதுவும் இடையிடையே நீண்ட பெருமூச்சும் அப்படியே அச்சு அசலாக இருக்கும்.
மறுநாள் கணிதத் தேர்வினைச் சிறப்பாக எழுதினாள் குறள். தாத்தா சொன்ன டிப்ஸ் ரொம்பவே உதவியது. ‘எழுதி முடித்துவிட்டு மீண்டும் விடைத் தாளைக் கடைசி அய்ந்து நிமிடம் பார்’ என்பதுதான் அது. ‘முழுசா முடிக்கலைன்னாலும் மீண்டும் பார்க்க 5 நிமிடம் எடுத்துக்கொள்’ என்று முந்தைய இரவு சொல்லி இருந்தார். அது நன்றாகக் கைகொடுத்தது. வீட்டிற்கு கீவந்தபோது வீடே பதற்றத்தில் இருந்தது. வங்கியிலுள்ள பாதுகாப்பு பெட்டக (Safety Locker) சாவியை எங்கே வைத்தனர் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியவில்லை. அதனை எடுத்து 2 ஆண்டுகளாகிவிட்டது. தாத்தா அப்போது உயிரோடு இருந்தார். அவருக்கு மட்டுமே வீட்டில் என்னென்ன எங்கே இருக்கின்றன என்பது எல்லாமே தெரியும்.
“நல்லா யோசிச்சுப் பாருங்க. சாவியை எங்காச்சும் பத்திரமா வெச்சிருப்போம்” – என்றார் அம்மா.
“ஆமா பத்திரமா இருக்கும். ஆனால் எங்க பத்திரமா இருக்கும்னு தெரியல” என அப்பா பதில் கொடுத்தார். ஆனாலும் இரவு 10 மணி வரைக்கும் வீட்டைத் தலைகீழாகப் புரட்டித் தேடியும் சாவி கிடைக்கவில்லை.
இரவு பத்தரை மணிக்கு நிகரிலாவை உயிர்ப்பித்தாள் குறள். “தாத்தா, உங்களுக்கு பேங்க் லாக்கர் சாவி எங்க இருக்குன்னு தெரியுமா?”. அடுத்த விநாடியே “ஓ தெரியுமே, பீரோவில் சிகப்பு கலர் கவரில் இருக்கு. அந்தக் கவரை என்னோட காக்கி நிற சால்வைக்குள்ளே வைத்ததாக நினைவு. அங்க இருந்து உங்க அப்பாவோ அம்மாவோ மாற்றி இருக்கலாம்” என்றார். காலையில் எழுந்ததும் அப்பாவிடம் சொன்னதும் அதே சால்வைக்குள் அதே கவருக்குள் சாவி பத்திரமாக இருந்தது. ஆனால், அப்பாவிற்கு மிகுந்து ஆச்சரியமாக இருந்தது. “குறள், உனக்கு எப்படிடா இங்க இருப்பது தெரியும்?” என்று கேட்க, “தாத்தாதான் சொன்னார்” என்றாள் கிண்டலாகச் சிரித்துக் கொண்டு!
சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் இரவு எல்லோரும் தூங்கியதும் நிகரிலாவை உயிர்ப்பித்தாள் குறள். “நிகரிலா Loading…” என்று வந்தது. தாத்தா சில நிமிடங்கள் இணையச் செய்திகளைப் படித்ததும் பதற்றமான குரலில் “நீங்க எல்லோரும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார். “என்ன தாத்தா சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டாள் தி. அரசி. உடனே அப்பாவிற்கு ‘வாய்ஸ் நோட்ஸ்’ அனுப்ப வேண்டும் என்றார். நிகரிலா இருப்பது தெரிந்துவிடுமே என்று பதறினாள் அரசி. ஆனாலும் ஒரு ‘குரல் செய்தி’யைக் குறள் அலைபேசியிலிருந்து அனுப்பினார் தாத்தா. காலையில் அந்தச் செய்தியைப் பார்த்ததும் அப்பா நடுங்கிவிட்டார். இறந்துபோன ஒருவரின் குரலை அப்படியே கேட்டால் யார்தான் பதறாமல் இருப்பார்கள்? அந்தக் குரல் பதிவில் “மணிகண்டா, நாளையே எல்லோரும் வீட்டில் இருக்கும் எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு முதல் மாடிக்குப் போய்விடுங்கள்” எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அப்போது மழை பெரிதாக இல்லை. எந்த எச்சரிக்கையும்கூட இருக்கவில்லை. தூறிக்கொண்டு மட்டுமே இருந்தது. அப்பா மணிகண்டனுக்கு இன்னும் நடுக்கம் அடங்கவில்லை. தன் அப்பாவின் குரல் வழியே ஒரு பதிவு எப்படி வர முடியும் என்று குழம்பினார். குறளிடம் கேட்டார். அவள் மழுப்பலாகப் பதில் சொல்லிவிட்டாள்.
வழக்கம்போல எல்லோரும் அன்றாடப் பணிகளில் மூழ்கினர். மதியத்திற்கு மேல் கடுமையான மழை. அளவிற்கு அதிகமான மழை. பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து விட்டார்கள். அம்மா வீட்டிற்கு வரும் வழியில் இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்துவிட்டார். மிக கன மழை. ஏரிகள் நிரம்பக் கூடிய அளவிற்கு மழை. இரவு உணவினை முடித்துவிட்டுப் படுத்துவிட்டனர். தாத்தாவுடன் பேசவும் இல்லை. நடு இரவு பன்னிரண்டு மணிக்கு வீட்டிற்குள் தண்ணீர் வர ஆரம்பித்து இருந்தது.
யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை. ரகசிய அறையிலிருந்து சத்தம். நிகரிலா தானாகவே உயிர்ப்பித்துக்கொண்டு “முதல் மாடிக்குப் போங்க. சான்றிதழ்கள், ஆவணங்களை எடுத்துக்கிட்டு போங்க. ஸ்கூல் பேக், புக்ஸ் எல்லாம் மேல இருக்கிற ரேக்கில் போடுங்க” என தாத்தா அலறிக்கொண்டு இருந்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவர் சொன்னதை வீட்டினர் செய்தனர். குபுகுபுவென சாலை முழுக்க நீர். வீட்டிற்குள் மெல்ல மெல்ல நீர் நிரம்பத் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் எல்லாரும் முதல் மாடிக்குச் சென்றுவிட்டனர். முழங்கால் அளவுக்கு நீர் வந்துவிட்டது.
“தாத்தா, காலையிலயே எச்சரித்தார்” என்றாள் குறள்.
“ஆமாம், உண்மைதான் நாம சீரியசா எடுத்துக்கல. அதெப்படி தாத்தா குரல் வந்தது குறள்?” என்று அம்மா ஆச்சரியமாகக் கேட்டார். எல்லாரும் முதல் மாடியில் இருந்த பெரிய அறையில் பத்திரமாக இருந்தனர். மின்சாரம் இல்லை. மழையும் நிற்கவில்லை.
திருக்குறள் அரசி நிகரிலாவின் கதையைக் கூறினாள். தாத்தா இறப்பதற்கு முன்னர் அந்தக் கருவியைக் காட்டி, எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கியது, தாத்தாவும் கருவியும் ஒரே குரலில் பேசியது, தினமும் செய்தித்தாள் படிப்பது, வீட்டில் அவ்வப்போது வழிகாட்டுவது என எல்லாவற்றையும் கூறினாள். தம்பியும் சில சந்தேகங்களைக் கேட்டான். அப்பாவும் அம்மாவும் உறைந்து போய் இருந்தனர்.
“குறள், நிகரிலாவைப் பத்திரப்-படுத்தினாயா?” என்றான் தம்பி.
அப்போதுதான் அவசரத்தில் அதனைக் கண்டுகொள்ளாதது நினைவிற்கு வந்தது. ஒரு மேசைக்கு அடியில்தான் வைத்திருந்தாள். அது கட்டாயம் இந்நேரம் நீரில் மூழ்கி இருக்கும் என்று நினைத்துக் கவலைப் பட்டாள். மழையுடன் சேர்ந்து அவளும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். இரவெல்லாம் நிகரிலா பற்றிப் பேச்சுதான்.
“தொழில்நுட்பம் நமக்கு எப்பவும் துணையாக இருந்தால் போதும். நம்முடைய சமநிலையையும் இயல்பையும் பாதித்துவிடக்கூடாது. நமக்குன்னு அனுபவம் வேண்டும் இல்லையா? உலகம் பெரிசுன்னு சொல்லணும். ஆனால், ஒரு கருவியே உலகம்னு ஆகிடக்கூடாது” என்றார் அப்பா.
அப்பா இப்படிச் சொன்னதும் எல்லோரும் அமைதியாக உறங்கினர்.
விடிந்ததும் தண்ணீர் வடியத் தொடங்கியது. ஆனாலும் வீட்டுக்குள் அரை அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. முதல் வேலையாக நிகரிலா கருவியை உயிர்ப்பிக்க முயன்றனர். அது நீரில் மூழ்கி இருந்தது. குறளின் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் தாத்தாவிடம் இருந்து வந்திருந்தது. “ஆல் த பெஸ்ட்” என்று மட்டும் இருந்தது. நீரில் மூழ்கும் முன்னர் அனுப்பி இருக்க வேண்டும். குறளுக்கு அழுகை அழுகையாக வந்தது. வீட்டிற்கு அருகே சமுதாயச் சமையலறை அமைத்திருந்தார்கள். குறள் வீட்டில் இருந்த அனைவரும் அங்கே உதவச் சென்றுவிட்டனர்.
இரண்டு வாரத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். தன் தம்பியின் நடவடிக்கையில் குறளுக்குச் சந்தேகம் வந்தது. யாருக்கும் தெரியாமல் முதல் மாடிக்கு அடிக்கடி செல்கின்றான். ஒரு நாள் குறள் அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தாள். முதல் மாடியில் அறையின் ஓரத்தில் இருந்த ட்ரங்க் பெட்டியைத் திறந்தான்.
“தாத்தா, தமிழ்த் தேர்வில் என்னென்ன கேள்விகள் வரும் சொல்லுங்க?”
எதிர்பாராத நேரத்தில் “உதை படுவ. ஒழுங்கா போய்ப் படி” என்று தாத்தாவின் குரல். டப்பென மூடிவிட்டுக் கிளம்பிவிட்டான் தம்பி. குறளுக்கு ஒரே ஆச்சரியம். மறைந்துகொண்டாள். தம்பி கீழே சென்றதும் பெட்டியைத் திறந்தாள். பட்டனை அழுத்தினாள்.
“நிகரிலா 2.0 Loading…”
குறள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள்.