கதையைத் திருத்துங்கள் : டூம்ஸ்டே கடிகாரம்
டூம்ஸ்டே கடிகாரத்தைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் வெற்றி பள்ளியில் பேசியதை வைத்து கதை ஒன்றை எழுதுமாறு அறிவியல் ஆசிரியர் மயில்சாமி மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்திருந்தார். அதற்காக கதை எழுதி வந்த வெண்பா, தன்னையும் தன் தோழியையும், ஆசிரியரையுமே கதாபாத்திரங்களாக்கிக் கதை எழுதி வந்தாள்.
இதுதான் அந்தக் கதை: வெண்பாவும், மகிழினியும் உற்ற தோழிகள், இருவரும் முதுகலை வேதியியல் துறை மாணவிகள். ஆரம்பக் கல்வி முதல் முதுகலை வரை ஒன்றாகவே படித்து வருகிறார்கள். இருவருக்கும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என்றால் ரொம்பப் பிடிக்கும்.
பெண்கள் அதிகம் இல்லாத ஆராய்ச்சித் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது இருவரின் ஆசை. அதற்காகவே வெகு சிலர் மட்டும் படிக்கும் வேதியியல் பிரிவில் விரும்பிச் சேர்ந்து படிக்கிறார்கள்.
கல்லூரி முடிந்ததும் பெரும்பாலும் இருவரும் ஆய்வகத்தில் தான் இருப்பார்கள். தனிமங்களின் சேர்க்கை, மூலக்கூறு, வேதியியல் மாற்றம் என்று ஏதாவது ஒன்றைப் பற்றி ஆய்வு செய்து அதன் பண்புகளை அறிந்து கொண்டே இருப்பார்கள்.
ஒரு முறை பழங்காலப் பொருள்களின் கண்காட்சி ஒன்று பக்கத்து ஊரில் ஏற்பாடாயிருந்தது. வெண்பாவும், மகிழினியும் தங்களது இருசக்கர வாகனத்தில் கண்காட்சியைப் பார்க்கச் சென்றனர்.
பழைய பொருள்களைச் சேகரிக்கும் ஆர்வமுடைய மகிழினி, அங்குள்ள பழைய காசுகள், பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்கள், அஞ்சல் தலைகள் எனப் பலவற்றை வாங்கிக் கொண்டாள்.
அங்கே பழைய பொருள்களுக்கிடையில் கடிகாரம் போன்று ஒரு பொருள் இருந்தது. அது வெண்பாவின் கண்ணில் பட்டது. முதலில் பார்த்ததும் கடந்து சென்று விட்ட அவளால் அதை வாங்காமல் இருக்க முடியவில்லை.
இரண்டு கடைகள் தாண்டிச் சென்றவள் மீண்டும் வந்து, கடைக்காரர் கேட்ட தொகையைக் கொடுத்துப் பெற்றுக் கொண்டாள். அக் கடிகாரம் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. நல்ல வேலைப்பாடுகளுடன் புதுமையான வடிவமைப்போடு இருந்தது.
இப்போது மாலை நன்கு மணி, ஆனால் கடிகாரம் காலை 11:05 மணியைக் காட்டியது. எவ்வளவு முயற்சித்தும் கடிகாரத்தில் மணியை மாற்ற முடியவில்லை, எப்படி மாற்றுவது எனத் தெரியாது என்று கடைக்காரரும் சொல்லிவிட, பணம் கொடுத்தாச்சே… வேறு என்ன செய்வதென்று வாங்கி வந்து விட்டாள் வெண்பா.
கடைக்காரருக்கும் வெண்பாவுக்கும் அந்தக் கடிகாரத்தின் மர்மம் தெரிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தால் கடைக்காரர் சொற்ப விலைக்கு விற்றிருக்கமாட்டார்.
வெண்பாவும், மகிழினியும் அந்தக் கடிகாரத்தை எப்படியாவது திறக்க முடியுமா என திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். மணியை மாற்ற உதவும் ஒரு சிறிய பட்டன் கூட அக் கடிகாரத்தில் இல்லை.
நீண்ட நேரம் முயற்சி செய்தவர்கள் எதுவும் பயனளிக்காததால் அப்படியே பையில் போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றனர். முதல் வகுப்பே துறைத் தலைவர் பேராசிரியர் மயில்சாமி அவர்களுடையது. பல புதிய ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் செய்துள்ள இவர், நிறைய ஆய்வுக் கட்டுரைகளை உலக அரங்கில் சமர்ப்பித்துள்ளார்.
பாடப் பகுதி முடிந்ததும் பொதுவான செய்திகள், கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கலந்துரையாடினார்கள். அப்போது எதேச்சையாக வெண்பா தன் பையில் இருந்த அந்தக் கடிகாரத்தை எடுத்துக் காண்பித்தாள்.
அந்தக் கடிகாரத்தைப் பார்த்ததும் பேராசிரியர் ஒரு நிமிடம் உறைந்து போனார்.
“இதெப்படி உனக்குக் கிடைத்தது” என வியப்பாகக் கேட்டார்.
பழைய பொருள்கள் விற்கும் கண்காட்சியில் வாங்கியதாக வெண்பா கூறினாள்.
“இது என்ன கடிகாரம் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார் பேராசிரியர்.
அனைவரும் ‘தெரியாது’ என்பது போல தலையாட்டினர். மேலும் இந்தக் கடிகாரத்தின் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதையும் பேராசிரியரின் முக பாவனையை வைத்து உணர்ந்து கொண்டனர்.
அணுசக்தி மற்றும் உலக வெப்பமயமாதலைப் பற்றி ஆய்வு செய்து வரும் அவர், இந்தக் கடிகாரம் காட்டும் மணியின் அபாயம் பற்றி அறிந்திருந்தார்.
“இதுதான் டூம்ஸ்டே கடிகாரம்” என்றார்.
அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அணுசக்தி அழிவு எப்போது நிகழப் போகிறது? உலகம் இன்னும் அதற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டுவது தான் இந்த டூம்ஸ்ட்டே கடிகாரம்“ என்று விளக்கினார்.
பையில் தான் வைத்திருந்த கடிகாரத்தின் சிறப்பு இப்போது தான் வெண்பாவிற்குப் புரிந்தது.
“நான் கூட இதைப் பற்றி பன்னாட்டு ஆய்வுக் கட்டுரையில் படித்திருக்கிறேன் சார். ‘டூம்ஸ்டே’ னா உலக அழிவு ஏற்படும் நாள்” என்றாள், “இதுதான் அந்தக் கடிக்காரமா சார், அப்போது எனக்குத் தெரியவில்லை”.
வகுப்பில் இருந்த எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள்.
“யாரும் பயப்பட வேண்டாம். இது அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான்” என்று கூறி மேலும் தொடர்ந்தார் பேராசிரியர்.
“செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது இக் கடிகாரம். உலகில் ஏற்படும் காலநிலை மாற்றம், அணுசக்திக் கழிவுகள், வெப்பநிலை உயர்வு போன்றவற்றால் இந்தக் கடிகாரத்தின் நேரம் தானாகவே மாறும்“ என்றார்.
“அப்படியென்றால் இக் கடிகாரம் காட்டும் நேரம் எதைக் குறிக்கிறது?” என்றான் சலீம்.
“12 மணியை நெருங்கிவிட்டால் உலகில் அதிக அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதைக் குறிக்கும்” என்றார்.
“இவ்வளவு தொழில்நுட்பமுள்ள இக்கடிகாரத்தை யார் கண்டுபிடித்தார்கள் சார்“ என்றான் பாபு.
“இக்கடிகாரம் 1947இ-ல் ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மர் மற்றும் அணுகுண்டை உருவாக்கிய அவரது சக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது” என்றார்.
எவ்வளவு முக்கியமான கடிகாரம் எப்படி நம்ம ஊருக்கு வந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
கடிகாரம் பற்றிய தகவலை உடனே இந்திய ஆராய்ச்சித் துறைக்கு மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் தெரியப்படுத்தினார். அதுவரை டூம்ஸ்டே கடிகாரம் பற்றித் தெரியாத பலரும் அதுகுறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.
இந்தக் கடிகாரத்தின் உதவியால் வெண்பாவும், மகிழினியும் இன்னும் நிறைய நிறையத் தெரிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் அணியமானார்கள்.
கதையை மிகவும் ரசித்துப் படித்த ஆசிரியர் மயில்சாமி “எனக்கு பேராசிரியராகப் பதவி உயர்வு தந்து விட்டாயே வெண்பா! கதை சுவாரசியம் தான். ஆனால், கதையில் அதன் மையப்பொருளில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது சரியாக இருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும்” என்று சொன்னார்.
அவர் சொல்ல வந்தது என்ன? கதையின் மையப் பொருளில் என்ன பிரச்சனை?
பிஞ்சு வாசகர்களே, கண்டுபிடித்து எழுதுங்கள்!