சின்னகதை
முதல் மரியாதை
தனது தந்திரத்தால் ஏமாந்தவர்களை – தான் திறமையாக ஏமாற்றியவர்களை நினைத்துப் பார்த்துக் கொண்டு மனதினுள் மகிழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது நரி. அப்போது வேடன் வேறு விலங்குக்கு விரித்து வைத்திருந்த வலையில் மாட்டிக்கொண்டது.
எதை எதையோ நினைத்துக் கொண்டு நடந்து, இப்போது மாட்டிக் கொண்டோமே என நினைத்து வருந்தியது. வருத்தமடைந்து என்ன செய்வது? வேடன் வருவதற்குள் இந்த வலையிலிருந்து விடுபட்டாக வேண்டுமே. எத்தனையோ தந்திரங்களுக்குப் பயன்பட்ட என் மூளை இப்போது செயல்படவில்லையே என சுற்றுமுற்றும் பார்த்தது.
அப்போது அருகிலிருந்த குளத்தை நோக்கி கொக்கு ஒன்று சிறிது உயரத்தில் பறந்து வந்து கொண்டிருந்தது. நரியின் மூளை செயல்புரிய ஆரம்பித்தது. கொக்கு நண்பரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டது. நரியின் இக்கட்டான நிலைமையைப் பார்த்ததும் புரிந்து கொண்ட கொக்கு தரையில் இறங்கியது. நண்பரே, வேடன் வந்துவிட்டால்… என் நிலைமையை நினைத்தே பார்க்க முடியவில்லை. இந்த வலையிலிருந்து என்னை விடுவிக்க உங்களால் நிச்சயம் முடியும். தயவு செய்து உங்கள் அழகான -_ கூர்மையான அலகினால் கிழித்து இந்த வலையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.
இரக்க குணம் படைத்த கொக்கும், நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழ்வதில்தான் வாழ்வின் இன்பமே அடங்கியுள்ளது. நண்பர் என்றும் சொல்லிவிட்டீர். கவலைப்பட வேண்டாம் நரியாரே. எனது அலகினால் இந்த வலையைக் கிழித்து உங்களைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை என்று கூறி செயலில் இறங்கியது.
சீக்கிரம் ஆகட்டும் நண்பா, வேடன் வந்துவிட்டால் இருவரின் நிலையையும் யோசித்துப் பாருங்கள் என்றது நரி. இதனைக் கேட்ட கொக்கு, நண்பரே, நான் எனது வேலையை என்னால் முடிந்தவரை விரைந்து செய்து கொண்டிருக்கிறேன். வேடன் வருவதற்கு முன் வலையிலிருந்து உங்களை மீட்டு இருவரும் தப்பிச் சென்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். அந்த நம்பிக்கை நம்மைக் காப்பாற்றும். அதை விட்டுவிட்டு, நீங்களும் உணர்ச்சிவசப்பட்டு, என் வேலையை விரைந்து செய்யும்போது இடையிடையே பேச வைத்து நேரத்தை வீணாக்குகிறீர்களே என்றது. ஆம், நீங்கள் சொல்வது சரிதான். உங்களைத் தொந்தரவு செய்யவில்லை. உங்கள் வேலையைக் கவனத்துடன் செய்யுங்கள் என்றது நரி. சிறிது நேரத்தில் நரியினை வலையிலிருந்து விடுவித்தது கொக்கு. ஆபத்தில் உதவிய கொக்குக்கு நன்றி சொல்லியது நரி. இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்றது கொக்கு.
நண்பரே, வர இருந்த பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய உங்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என என் மனதில் தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்றது நரி. எதுவும் செய்ய வேண்டாம். உதவி செய்யும்போது பிரதிபலன் எதிர்பார்க்கக் கூடாது. நாம் இருவரும் நல்ல நண்பர்களாக – உண்மையான நண்பர்களாக விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன் என்றது கொக்கு. விடாத நரியோ, அதெல்லாம் முடியாது. தாங்கள் என் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட வேண்டும் என அழைத்தது. என் மன திருப்திக்காகவாவது வந்து சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என வற்புறுத்தியது. நரியின் அன்பினை மதித்து விருந்திற்கு வர கொக்கு சம்மதித்தது.
நரியின் வீட்டிற்குச் சென்றது கொக்கு. பீங்கான் தட்டில் மீன்களை வைத்துக் கொடுத்தது நரி. தான் மட்டும் வெள்ளித் தட்டில் சாப்பிட்டது. கொக்கு, அதன் அலகினால் பீங்கான் தட்டில் கொத்தி உண்ண முடியாமல் தவித்தது. கொக்கு சிரமப்பட்டுத் தவிப்பதைப் பார்த்த நரி மனதினுள் ரசித்துச் சிரித்தது. ஒரு வழியாக விருந்து முடிந்தது. கிளம்பும்போது, நரியாரே தாங்கள் எனக்கு விருந்து கொடுத்தமைக்கு நன்றி. அடுத்த வாரம், என் வீட்டில் உங்களுக்கு விருந்து கொடுக்கப் போகிறேன். கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி விடைபெற்றது கொக்கு.
கொக்கு விருந்து கொடுக்கும் நாளும் வந்தது. நரி கொக்கின் இருப்பிடத்திற்குச் சென்றது. நரியைப் பார்த்த கொக்கு அன்புடன் வரவேற்றது. வேலையெல்லாம் முடிந்துவிட்டதா என்ற நரியிடம், நண்பரே தாங்கள் வந்தபிறகு வேலை செய்து கொண்டிருந்தால் எப்படி நாம் பேசிக் கொண்டிருக்க முடியும்? சிறிது நேரம் என் நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கலாமே என நினைத்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். சிறிது நேரம் பேசிவிட்டுச் சாப்பிடலாம், அமருங்கள் என்றது.
நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிக்கொண்டே அருகிலிருந்த அனைத்தையும் நோட்டம் விட்டது நரி. கீழே உணவு இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லையே. நாம் செய்த செயலுக்குப் பழி வாங்குவதற்காக இந்தக் கொக்கு நம்மை அழைத்துள்ளதோ, விருந்துக்கு வா என்றதும் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாதோ என மனதினுள் நினைத்துக் கொண்டிருந்தது.
நரியின் மனநிலையைப் புரிந்து கொண்ட கொக்கு, என்ன நண்பரே, ரொம்பப் பசிக்கிறதா, உணவைத் தேடுகிறீர்களா என்றது. உடனே இல்லை இல்லை என மறுத்தது நரி. நண்பரே கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள். மேலே தொங்குகிறதே கண்ணாடிக் குடுவை. அதனுள் உங்களுக்குப் பிடித்த பொறித்த மீன் துண்டுகள் தெரிகிறதா, எடுத்துச் சாப்பிடலாம் என்றது.
ஆஹா, நாமாவது பீங்கான் தட்டில் மீன்களைப் போட்டுக் கொடுத்தோம். இந்தக் கொக்கு அந்தரத்தில் தொங்கவிட்டு உணவினைக் காட்சிப் பொருளாக்கிவிட்டதே. இப்படிப் பழிவாங்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே என நரி நினைத்துக் கொண்டிருந்தபோது, கொக்கு கயிற்றின் முடிச்சினை அவிழ்த்து கவனமாக குடுவையைக் கீழே இறக்கியது. உள்ளே இருந்த மீன் துண்டுகளை அழகிய தட்டுகளில் எடுத்து வைத்தது. நரியின் முன் வைத்து, மிகுந்த பசியுடன் இருப்பீர்கள். சாப்பிடுங்கள் நண்பரே, தாங்கள் வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு மீதி இருந்தால் பிறகு நான் சாப்பிடுகிறேன். விருந்தினருக்கு – என் நண்பருக்குத்தான் முதல் மரியாதை என்றது.
– செல்வா