இப்ப நான் என்ன சொல்றது? – மீண்டும் மதில்மேல் பூனையா?
அம்மாவின் மூக்கு உடைந்ததால் எனக்கு, ‘கடவுள் உண்டா?’ ‘இல்லையா?’ என்ற தடுமாற்றம் உண்டானதல்லவா? அதனால், மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் தாவலாம் என்று தவித்துக் கொண்டிருந்தேனல்லவா? ஒருவழியாக… “கடவுள் இல்லை” என்ற பக்கத்திற்குத் தாவிவிட்டேன்! அதற்குப் பிறகும் ஒரு கடுமையான சிக்கல் வந்து, மீண்டும் மதில் மேல் பூனையானேன்!
எப்படி?
அப்போது நான் 11 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்தேன்.
எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பே பெரிய படிப்புதான். 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அடுத்த வகுப்பிலும் தேர்வானால், அந்த ஊரிலேயே கல்லூரிக்கு முதன்முதலில் செல்லும் வாய்ப்பு எனக்கு இருந்தது.
அப்போது ஊரில் இதுவே ஓரளவுக்குப் பேசு பொருளாக இருந்தது. எப்படியும் 12 ஆம் வகுப்பில் தேர்வாகி முதன்முதலாகக் கல்லூரிக்குச் சென்றுவிடுவேன் என்று எனது பெற்றோருக்கு நெருக்கமானவர்கள் எண்ணினார்கள். இதுதொடர்பாக என்னிடம் பேசவும் தொடங்கிவிட்டனர்.
அதற்கு முதலில் 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டுமே?
இதிலென்ன சிக்கல் என்கிறீர்களா?
இங்கிலீஷ் தான்!
இங்கிலீஷ் பாடத்தில் 40 மதிப்பெண்ணுக்கு மேல், நான் வாங்கியதேயில்லை. இப்படியிருக்கும் போதுதான் அந்த ஆண்டின் அரை இறுதித் தேர்வும் வந்தது. என்னைப்பற்றி ஊரார் யாராரோ எதையெதையோ கற்பனை செய்து கொண்டிருக்கையில், ஒருவேளை… அரையாண்டுத் தேர்வில் இங்கிலீஷ் தேர்வில் தோற்றுவிட்டால்? என் மீது நம்பிக்கை வைத்த உற்றார், உறவினர் என்னென்ன சொல்வார்களோ என்பதுதான் எனது கவலையாக இருந்தது.
நானும் முயன்றுதான் பார்த்தேன். ஆனாலும், இங்கிலீஷ் வசப்படவேயில்லை. எனக்கு மட்டுமல்ல! ஒருமுறை வகுப்பாசிரியர், ‘பிமீணீக்ஷீt’ என்ற சொல்லை, புத்தகத்தைப் பார்த்துப் படிக்கச் சொன்னார். என் நண்பன் ’ஹியர்ட்’ என்று உச்சரித்துவிட்டான். மாணவர்கள் சிலர் வாயைப் பொத்திக்கொண்டு நக்கலாகச் சிரித்ததும், நண்பன் தலைகுனிந்து அழுததும் மறக்கவே முடியாது. இதற்குக் காரணம், 1980 களில் நாங்கள் முதல் தலைமுறையாக உயர்நிலைக் கல்விக்காகப் பள்ளிக் கூடத்திற்குச் சென்றவர்கள். அதுமட்டுமல்ல, அன்றைக்கு ஒரு பாடத்தில் தோற்றுவிட்டால் வீட்டோடு கிடக்க வேண்டியதுதான். இதுதான் கவலையின் உச்சம். பிறகு அப்பாவைப் போல் நானும் ஒரு கூலியாள்தான்.
இப்படிப்பட்ட சூழல்களால் தான், ‘எதற்கும் ஏதாவதொரு கடவுளைக் கும்பிட்டு வைப்போமா?’ என்று மறுபடியும் மதில்மேல் பூனையாகிவிட்டேன்.
ஒருபக்கம் இப்படியிருக்க, இன்னொரு பக்கம் முடிந்தவரை ஆங்கிலப் பாடங்களை மனப்பாடம் செய்யும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டுதானிருந்தேன். ஆனாலும்… இங்கிலீசில் கட்டாயம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் வரவே…யில்லை.
காலம் நமக்காகக் காத்திருக்குமா என்ன?
இதோ! தேர்வுப் பட்டியலையும் அறிவித்து விட்டார்கள்…
முதலில் தமிழ்த் தேர்வுக்கான பாடங்களை யெல்லாம் படித்து நன்றாகவே தேர்வு எழுதிவிட்டேன்.
அன்று… இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படித்திருந்தேன்.
ஏனெனில், அடுத்தநாள்… ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு…
அன்றைக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தைப் போல், என் வாழ்நாளில் வேறு என்றைக்குமே நான் சந்தித்ததில்லை.
ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக் கூடத்திற்குப் புறப்பட்டுவிட்டேன். நீ…ண்ட நேரம் கழித்துதான் வழக்கமான சாலையில் நான் செல்லவில்லை என்பதே எனக்குப் புலப்பட்டது.
ஏன் பாதை மாறி வந்தேன்?
நான் செல்லவேண்டியது திருமூர்த்தி மலைக்குச் செல்லும் தளி சாலையில். ஆனால், சென்றிருந்ததோ காளியம்மாள் கோயில் உள்ள கல்பனா திரையரங்க சாலையில்…
தூ…ரத்தில் காளியம்மாள் கோயில்…
அதைக் கண்டதும் எனக்கிருந்த தடுமாற்றம் இன்னமும் கூடிவிட்டது.
‘இப்படியே திரும்பி தளி சாலைக்குச் சென்று விடலாமா?’ என்றும், ‘சரி, வந்தது வந்துவிட்டோம்; இப்படியே செல்லலாம்’ என்றும் இருவேறு எண்ணங்கள் ஒருசேரத் தோன்றின. இறுதியில், என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று நடையைத் தொடர்ந்தேன்.
இதோ! கல்பனா திரையரங்கைத் தாண்டியாயிற்று…
காளியம்மாள் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தேன்…
பக்கத்திலும் வந்துவிட்டேன்…
கோயிலை நெருங்க, நெருங்க… அப்படியே உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விடலாமா? என்ற எண்ணம், அடங்காத ஊறல் போல் ஊற்றெடுத்தது. ’இல்லையில்லை… பல்லைக் கடித்துக் கொண்டு கடந்து சென்று விடலாம்’ என்றொரு எண்ணம் அதற்கு அணை போட முயன்றது.
இன்னமும் கொஞ்சம் பக்கம் நெருங்கி விட்டேன்…
நெருங்க, நெருங்க எங்கே என்னையும் அறியாமல், எங்கே வலது கை தானாகவே கன்னத்தில் போட்டுக் கொண்டுவிடுமோ என்ற அச்சத்தில், அப்படி நடந்துவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் இரண்டு கை விரல்களையுமே இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தேன்.
கோயிலை அடைந்துவிட்டேன்…
வியர்த்துவிட்டது…
இதயம் படக், படக்கென்று தாறுமாறாகத் துடித்தது.
கோயிலைத் தாண்டிக்கொண்டிருந்தேன்…
தாண்டிவிட்டேன்…
அதுவரையிலும் இறுகிய கை விரல்கள் விடுபடவே இல்லை.
அப்பாடி… தாண்டிவிட்டேன்!
பெருத்த நிம்மதி… பெருமூச்சொன்று தானாக வெளிப்பட்டது.
பதட்டம் குறைந்த பிறகு, கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்க முடிந்தது. சரி, நமக்குத் தெரிந்த வரைக்கும் எழுதுவோம் என்ற எண்ணம் மெதுவாகத் தலைதூக்கியது. அதன்பிறகு தலைபாரம் ‘விசுக்’கென்று குறைந்துவிட்டது.
மற்ற பாடங்களையும் படித்து ஒருவாறு தேர்வும் எழுதிவிட்டேன். 35 மதிப்பெண்ணுக்கு மேல் வரலாம் என்ற எண்ணத்துடன் வீட்டுக்கும் வந்துவிட்டேன். தேர்வு முடிவுகளும் வந்தன.
அனுஷம் திரையரங்கத்துக்கு அருகிலிருக்கும் கடையில் தினத்தந்தி நாளிதழை வாங்கி, எனது தேர்வு எண்ணை, அந்தப் பட்டியலில் கவனமாகத் தேடினேன்.
மண்டைக்குள் மத்தாப்புச் சிதறல்கள் வெடித்துச் சிதறின!
எண் இருந்தது!
நான் வெற்றி பெற்றுவிட்டேன்…! இப்படியே படித்தால் போதுமானது, 12 ஆம் வகுப்பிலும் தேர்வாகிவிடலாம் என்று புத்தி குதூகலிக்க வைத்தது.
அதற்கு மேல் அதைப் பெரிதாகக் கொண்டாடவில்லை. காரணம், ‘நான் ஒரு கடவுள் மறுப்பாளன் ஆகிவிட்டேன்’ என்பதுதான் _ அன்றைக்கு எனக்குத் தேர்ச்சி பெற்றதைவிட அளவற்ற ஆனந்தத்தைக் கொடுத்தது. இனிமேல் மதில்மேல் பூனைக்கு என்னிடம் வேலை இல்லை! இது தொடர்பான தடுமாற்றங்கள் இல்லை! அச்சங்கள் இல்லை!
எத்தனையெத்தனை ‘இல்லை’கள்!!!
அதனால்தான் எவ்வளவு எவ்வளவு நிம்மதிகள்!!!
இந்த நிம்மதியையும், அச்சமின்மையையும் உறுதி செய்தது இன்னொரு தரமான சம்பவம்!
அது என்ன தெரியுமா?
(அடுத்த இதழில்…)