கதையைத் திருத்திய மாணவர்கள் – டூம்ஸ்டே கடிகாரம்
(நிறைவுப் பகுதி)
மறுநாள் வழக்கம் போல் வகுப்புத் தொடங்கியது, வெண்பாவின் கதையின் அடுத்த பகுதியைத் தெரிந்துகொள்ள மாணவர்கள் ஆவலாக இருந்தனர். வேகமாக வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியர் மயில்சாமி மாணவர்களின் முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டார்.
“என்ன மாணவர்களே, டூம்ஸ்டே கடிகாரம் பற்றி ஏதேனும் கூடுதலாகத் தெரிந்து கொண்டு வந்தீர்களா” என்றார்.
“டூம்ஸ்டே கடிகாரத்தை தமிழில் ‘ஊழிநாள் கடிகாரம்’ என்பார்கள் அய்யா” என்றான் முரளி.
“அட! இது புதிதாக இருக்கிறதே” என்ற ஆசிரியர், அப்பறம் வேறு பதில்கள்?” என்றார்.
“இக்கடிகாரம் 8 முறை பின்னோக்கியும், 17 முறை முன்னோக்கியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” என்றாள் மகிழினி.
“இக்கடிகாரத்தில் நான்கு புள்ளிகள் மட்டுமே இருக்கும், இதில் மேலே இருக்கும் புள்ளி நடு இரவைக் குறிக்கும்” என்றான் சலீம்.
இந்தப் பதில் அவரது கேள்விக்கு நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தார் ஆசிரியர். இருப்பினும் வேறு பதில்களை எதிர்நோக்கினார்.
பாடங்களைக் கடந்து இது போன்ற கேள்விகளால் வகுப்பு உற்சாகத்தோடு இருப்பதை ஆசிரியர் உள்பட அங்கிருந்த மாணவர்களும் உணர்ந்திருந்தனர்.
‘கூடுதலாகச் சிந்திப்பதற்கும், மாணவர்களின் தேடலை ஆக்கப்பூர்வமானதாக மாற்றவும் இது போன்ற உரையாடல் அவசியம் உதவும்’ என்கிற ஆசிரியரின் நம்பிக்கை வீண்போகவில்லை.
“அணு ஆயுதங்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மனிதகுலம் சுய அழிவுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் குறிக்கும் ஒரு உருவகம் தான் டூம்ஸ்டே கடிகாரம்” என்றாள் வெண்பா.
“மிகச் சரியாக சொன்னாய் வெண்பா, இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கடிகாரம் அல்ல, உருவகம் அல்லது குறியீடு” என்றார்.
மாணவர்கள் அனைவரும் பலமாகக் கைதட்டினர். வெண்பாவிற்கு இது கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்தது.
அந்தப் பாடவேளை முழுக்க மாணவர்கள் முழு ஈடுபாட்டோடு இருந்தனர். மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பதில் சொல்லியது, ‘இனிவரும் அனைத்து பாடங்களையும் இதே முறையில் நடத்த வேண்டும்’ என்கிற சிந்தனையை ஆசிரியர் மயில்சாமிக்கு உண்டாக்கியது.
“கதையைத் திருத்தி விட்டீர்கள். இந்த டூம்ஸ்டே கடிகாரம் விரைந்து ஓடாமல் அதைத் திருத்துவது நம் அனைவர் கையில் தான் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது.
பாடவேளை முடிந்ததைக் குறிக்கும் மணி அடிக்கும் சத்தம் கேட்க ஆசிரியர் நிறைவான மனதோடு சென்றார். மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தயாரானார்கள்.