அறிவியல் – கரையான் புற்று கோவிலாகுமா?
இந்த உலகம் உருவான காலம் முதல் இன்று வரை அறிவியல் அனைத்தையும் விளங்க வைத்திருக்கிறது. சூரியனிலிருந்து உலகம் பிறந்தது முதல், இவ்வுலகம் குளிர்ந்து அமினோ அமிலம் முதல் அமீபா உருவானது வரை – ஒருசெல் உயிரியிலிருந்து பலசெல் உயிரிகள் உருவானது வரை – அனைத்திற்குமான விடைகளை அறிவியலே அளித்திருக்கிறது. எனினும், இந்த அறிவியலுக்கும், அறியாமைக்கும் இருக்கும் போட்டா போட்டி காலம் தோறும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கேள்விகள் கேட்காமல் கடவுள் சொன்னது, ரிஷிகள் சொன்னது, தேவதுதர்கள் சொன்னது, முன்னோர் சொன்னது என்று கட்டாயப்படுத்தி அவற்றை நம்பு என்கிறது ஆன்மீகம், வேறெதுவும் கேள்விகள் இருக்கிறதா என்று கேட்கிறது அறிவியல்.
இந்த முரண்பாடுகள் இன்றளவும் தொடரத்தான் செய்கின்றன. நம் அனைவருக்குமே உலகில் உயிர்கள் உருவானது குறித்தும் சார்லஸ் டார்வினின் ஆய்வுகள் குறித்தும் சிறிதாவது தெரிந்திருக்கும். பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இந்த உலகின் உயிர்த்தோற்றம், அவற்றின் பரிணாமம் குறித்து அளிக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே. தாவரங்கள், விலங்குகள் என்று அனைத்து உயிர்களும் ஒரு சேர வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதனைப் போலவே அவை யாவும் தங்களின் உணவு, உறையுள், இனப்பெருக்கம் ஆகியவற்றில் முக்கியக் கவனம் செலுத்துகின்றன.
அனைத்து உயிர்களின் இன்றியமையாத கடமையாக இனப்பெருக்கம் இயற்கையாகவே இருக்கிறது. அதனால் தான் எறும்புகள் முதல் மனிதன் வரையில் இது ஓர் இயற்கைச் சுழற்சியாக நடந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு உயிரினமும் பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறு தோன்றிய ஓர் உயிரினமே கரையான்கள். சுமார் 251 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மரம் தின்னும் கரப்பான் பூச்சியிலிருந்து பரிணமித்தவை தான் இந்தக் கரையான்கள். முதன்முதலில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் தோன்றிய கரையான்கள் கடல் வழியாக மரக்கட்டைகள் மூலமாக பல்வேறு இடங்களுக்குச் சென்று அவற்றுக்கான குடியிருப்புகளை அமைத்துக்கொண்டன. ஒவ்வோர் இடத்திற்கும் காலச் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப கரையான்கள் பரிணமித்துக்கொண்டு இன்றளவும் நீடித்து வருகின்றன. இதுவரையில் சுமார் மூவாயிரம் கரையான் வகைகளைக் கண்டறிந்து வரிசைப்படுத்தியுள்ளனர் விலங்கியலாளர்கள்.
கரையான் குடியிருப்புகள்
தேனீக்களைப் போன்று கரையான்களிலும் ராணிகள் உண்டு, ஓரிரு ஆண் கரையான்கள்-தவிர மற்றவை அனைத்தும் பணியாளர்களைப் போல செயல்படுகின்றன. ஒரு கரையான் குழுவிற்கு ஒரு ராணி இருக்கும். ராணிகள் மற்றும் இந்த ஒரு சில ஆண் கரையான்களின் வேலையே இனப்பெருக்கம் செய்வது மட்டுமே! இனப்பெருக்கத்தில் ராணிக் கரையான்கள் நாள் ஒன்றுக்குச் சுமார் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடக்கூடிய திறன் கொண்டவை. பூச்சி இனங்களிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டதும் ராணிக் கரையான்கள் மட்டுமே! ராணிக் கரையான்கள் சராசரியாக 30 முதல் 50 ஆண்டுகள் வரையிலும் வாழ்கின்றன. கரையான்கள் எச்சிலையும் மண்ணையும் கொண்டு தங்களின் புற்றுகளைக் காட்டுகின்றன. ஒரு புற்றில் சுமார் 10 லட்சம் கரையான்கள் வசிக்கும். அனைத்து கரையான்களும் ஒன்றிணைந்து ஒரே குடியிருப்பில் தங்கி இயங்கும் தன்மை உடையன. நன்கு வளர்ச்சியடைந்த ஒரு புற்றில் ஒரே ஒரு ராணி மட்டுமே இருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபடப்போகும் ஆண் மற்றும் ராணிக் கரையான் சுரக்கும் பிரமோன் (Pheromone) என்னும் திரவம் மற்ற கரையான்கள் இனப்பெருக்கத் தன்மையை அடையவிடாமல் தடுக்கிறது.
வேலைக்காரக் கரையான்கள் குடியிருப்பில் கூடு கட்டுதல், பராமரித்தல், உணவு சேகரிப்பது, பிற கரையான்களுக்கு உணவளிப்பது உள்ளிட்ட முக்கியப் பணிகளைச் செய்கின்றன. அவை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். பார்வையற்றவையாகவும், இறக்கையற்றவையாகவும், இனப்பெருக்கச் சக்தி இல்லாமலும் இருக்கலாம். வேலைக்காரக் கரையான்களைப் போலவே சிப்பாய்க் கரையான்களிலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, பார்வையற்றவையாகவோ, இறக்கையற்றவையாகவோ, இனப்பெருக்கச் சக்தி இல்லாமலோ இருக்கலாம். ஆனால் தங்களின் பெரிய, சக்திவாய்ந்த தாடைகளின் உதவியுடன் குடியிருப்பைப் பாதுகாப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன.
உலகில் மிகப் பழமையான கரையான் புற்றுகள் பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கோடிக்கணக்-கான கரையான்கள் இணைந்து சேகரித்த மண் குவியல்களே நாலாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கரையான் புற்றுகள். சுமார் 30 அடி அகலமும், 15 அடி வரை உயரமும் கொண்ட லட்சக்கணக்கான புற்றுகள் இருப்பதைச் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் உறுதி செய்கின்றன. இந்த நிலத்தின் பரப்பளவு இங்கிலாந்து நாட்டைப் போல பெரியது என்று கணித்துள்ளனர் விலங்கியலாளர்கள்.
கரையான்கள் எனும் கட்டடக்கலை வல்லுநர்கள்கரையான் புற்றுகளின் கட்டுமானம் மற்றும் கரையான்கள் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளின் முடிவுகள் இப்பொழுது ஜெர்னல் ஆப் எக்ஸ்பிரிமெண்டல் பயாலஜி (Journal of Experimental Biology) என்னும் அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர் அறிவியலாளர்கள். கரையான் புற்றுகள் வியப்புக்குரிய வலிமையான மண்கட்டுமான அமைப்புகளாகும். அவை வியக்கத்தக்க நுண்துளைகளைக் கொண்டவை. இந்த நுண்துளைகள் (Micropores) கரையான் புற்றுகளின் காற்றோட்டத்திற்கும், கூட்டின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.
கரையான்கள் தங்கள் புற்றுகளில் தகுந்த வெளிச்சம் (Light), காற்றோட்டம் (Ventilation), குளிரூட்டும் முறைகள் (Cooling Systems), வெப்பநிலை மாறுதல்கள் (Temperature Gradients), உணவு சேகரிப்பு வங்கி (Food Storage Banks), முட்டைகளுக்கான இடம் (Eggs Place) போன்றவற்றைத் தனித்தனியாக வடிவமைத்துக்கொள்ளும் திறமை உடையவை. இந்தப் புற்றுகளில் சிறு சிறு துளைகள் இருக்கும். அவை சூரிய ஒளி ஊடுருவ உதவுகின்றன. கரையான் புற்றின் நடுவில் ஒரு சிம்னி (Chimney) போன்ற அமைப்பைக் கரையான்கள் உருவாக்குகின்றன. சிம்னியைச் சுற்றிச் சில புனல்களையும் (Funnels) வடிவமைக்கின்றன. இந்தச் சிம்னி மற்றும் புனல்களின் உதவியோடுதான் புற்றுக்குள் ஆக்சிஜன் செல்கிறது, கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியேறுகிறது.
புற்றுகளின் அடிப்பகுதியில் வீடுகள் போன்ற அமைப்புகளைக் கரையான்கள் உருவாக்குகின்றன. முட்டைகளைப் பாதுகாக்கவும், அவை பொரிந்து வளருவதற்கேற்றவாறும் சிறப்பாக இந்த வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முட்டைகளை இடுவது முதல் அவற்றைப் பராமரிப்பது வரையிலான வேலைகளை ராணிக் கரையான்கள் செய்கின்றன. உணவு சேகரிப்பு, புற்றுப் பாதுகாப்பு மற்றும் இன்னபிற பணிகளை வேலைக்காரக் கரையான்கள் செய்கின்றன. இந்தக் குழுக்கள் பல ஆண்டுகளுக்குத் தாங்கள் வடிவமைத்த புற்றினுள் எந்தக் காலநிலை மாறுதலுக்கும் ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொண்டு வாழும் தன்மையுடையவை. கரையான் புற்றுகளின் வடிவமைப்பு, சூரிய ஒளியின் உதவியோடு அவை இயங்கும் முறை, கரையான்களின் செயல்பாடுகள் போன்றவற்றை அறிவியலாளர்கள் பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்தச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் கரையான்கள் அதிகம் காணப்படுகின்றன. இதில் இந்தியா, வடக்கு ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவை அடங்கும். ஒரு சில கரையான் இனங்கள் மட்டுமே குளிர்ப் பிரதேசங்களில் வாழ்கின்றன. கரையான்கள் பல சுற்றுச்சூழல் தகவமைப்புகளின் முக்கியப் பகுதிகளாகும். அவை மண்ணை ஊட்டச்சத்துக்களால் வளப்படுத்துகின்றன, மண் அரிப்பைக் குறைக்கின்றன. அவற்றின் காற்றோட்டத் தன்மையை அதிகரிப்பதுடன் மழைநீரை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கின்றன. உலகெங்கிலும் 2972 கரையான் இனங்கள் உள்ளன. அவற்றில் 10% க்கும் குறைவானவை மட்டுமே மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.
நம் நாட்டில், ஏன் நம் தமிழகத்தில் கூட இந்தக் கரையான் புற்றுகளுக்கடியில் இருக்கும் கரையான்களை உண்ண வரும் பாம்பை நாகாத்தாள், நாகராசா என்று சொல்லிக்கொண்டு, புற்றுகளில் பால் ஊற்றியும், மஞ்சள், குங்குமம் தெளித்து, கரையான் புற்றுகளையும், எறும்புப் புற்றுகளையும் புற்றுக்கோவிலாக மாற்றி வழிபட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். காலம் காலமாக இந்த மூடத்தன வழிபாடு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மண் புற்று ஏன், எதற்கு, எப்படி கோவிலாயிற்று? யாரும் கேள்வியே கேட்பதில்லை. கேள்வி கேட்டிருந்தால் இந்த மூட நம்பிக்கைகள் என்றைக்கோ ஒழிந்து போய் இந்தியாவிலும் புற்றுகளைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கி இருக்கும். இந்தியாவில் அனைத்தையும் ஆன்மிகமாகவும், புனிதமாகவும் மாற்றிவிடுகிறார்கள்.
கரையான் புற்றின் வாயிலாக ஓர் அழகான, ஆழமான அறிவியலைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. புற்றுகளையும் கோவில்களாக மாற்றி நம் அடுத்த தலைமுறையையும் அறிவியல் பின்புலமற்று வளர்த்தெடுக்கிறோம். இது சரியானதா? நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் அறிவியல் உண்மைகளை நாம் அறிய வேண்டாமா? அதற்கெல்லாம் கடவுள் என்னும் அரிதாரம் பூசி வெற்றுக் கதைகளாக்கி நமது மனித ஆற்றலையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பதா?
நாம் பார்ப்பதை எல்லாம் குருட்டு நம்பிக்கைக்குள் திணிக்கின்றோம். இயற்கையை, இயல்பை, யதார்த்தத்தை எந்த மாற்றுப் பெயராலும் போர்த்திவைக்க முடியாது. இயற்கையை அதன் இயல்பிலேயே புரிந்துக் கொள்ள முற்படுவோம். இயற்கையை இயற்கையாக மட்டுமே பார்த்தல் போதுமானது, அதனைப் புனிதமாகவோ, கடவுளாகவோ பார்ப்பதற்கு எந்த அவசியமுமில்லை. அதனால் மனித சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை.
தரவுகள்:
[Ocko, S. A., Heyde, A., & Mahadevan, L. (2019). Morphogenesis of termite mounds. Proceedings of the National Academy of Sciences of the United States of America, 116(9), 3379–3384. https://doi.org/10.1073/pnas.1818759116].
[Wei, Y.; Lin, Z.; Wang, Y.; Wang, X. Simulation and Optimization Study on the Ventilation Performance of High-Rise Buildings Inspired by the White Termite Mound Chamber Structure. Biomimetics 2023, 8, 607. https://doi.org/10.3390/biomimetics8080607.]