நல்ல தமிழ்ப் பெயரை… ஈரோடு சோபிகா ‘அன்பெழில்’ ஆனது எப்படி?
பழகு முகாமின் இறுதி நாளில் (2.5.2024) ஈரோட்டிலிருந்து வந்து கலந்து கொண்ட ‘சோபிகா’ என்ற பெரியார் பிஞ்சு, பழகு முகாம் பற்றி பங்கேற்றோர் சார்பில் பேசினார்.
“நான் ஈரோட்டிலிருந்து வருகிறேன். பழகு முகாமில் எல்லோரும் அன்பாகப் பழகினார்கள். அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேடையில் பேச எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டிருந்தேன். கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி. நான் பெரியாரைப் பற்றி இரண்டு செய்திகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஒன்று, பெரியார் எம்.எல்.ஏ.அல்ல, முதல்வர் அல்ல; பெரியார் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியின் பிரதிநிதி கிடையாது. ஆனால், முதன் முதலில் (1951) இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்த வைத்திருக்கிறார் என்றால், அது பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் பெருமை தரக்கூடிய சாதனை அல்லவா!
இரண்டாவது, “எங்கு சமத்துவம் மறுக்கப் படுகின்றதோ அங்கு நாத்திகம் பிறக்கும். நீயும் நானும் சமம். உனக்குள்ள உரிமை அனைத்தும் எனக்கும் வேண்டும். எனக்குள்ள உரிமை எல்லோருக்கும் வேண்டும். இதை எதிர்ப்பது சாஸ்திரமாக இருந்தால் அதை எதிர்ப்பேன். சாஸ்திரத்தை வலியுறுத்தும் மதமாக இருந்தால் அதையும் எதிர்ப்பேன். மதத்தை உருவாக்கியவன் கடவுளென்றால் அவனையும் நான் எதிர்ப்பேன் என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார். வாய்ப்புக்கு நன்றி அய்யா, வணக்கம்!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே இடியென முழங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார். மேடையிலிருந்த கவிஞர் கலி.பூங்குன்றன் சோபிகாவை அருகில் அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தார்.
இதற்குப் பிறகு நடந்தது தான் சுவையானது. என்பது போல சோபிகா, சோபிகா தந்தையுடன் சேர்ந்து தெரிந்தவர்களிடம் சென்று, ‘விடுதலை’ ஏட்டைப் பற்றிச் சொல்லி ‘விடுதலை’ சந்தா சேகரிப்பில் அப்பாவுக்கு உதவி செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல; அந்தச் சந்தாக்களை ஆசிரியர் தாத்தாவிடம் ஒப்படைக்க, அவரின் தந்தை அன்பரசு, திராவிடர் கழகத் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு சண்முகம் ஆகியோருடன் 31.5.2024 அன்று சென்னைக்கு வந்த போது சோபிகாவும் அவர்களுடன் வந்திருந்தார்! ஆசிரியர் தாத்தா எழுதிய, ”கற்போம் பெரியாரியம்” எனும் புத்தகத்துடன் ஆசிரியரைச் சந்தித்திருக்கிறார்! ‘விடுதலை’ 14 ஆண்டு சந்தாக்களை ஆசிரியரிடம் வழங்கினார்.
நடந்ததைக் கேள்விப்பட்ட ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சி! அப்போது அன்பரசுவும் ஈரோடு சண்முகமும், ‘சோபிகா என்ற பெயரை அன்பெழில் என்று மாற்றி நீங்கள் பெயர் சூட்ட வேண்டும்’ என்று ஆசிரியரிடம் கூறினர். உடனடியாக சோபிகா வாங்கி வந்த “கற்போம் பெரியாரியம்” புத்தகத்தில், “14 விடுதலை சந்தா சேர்த்து, வழங்கிய சோபிகா என்ற மாணவச் செல்வத்திற்கு – குழந்தைகள் பழகு முகாமில் பங்கேற்ற மாணவி பெரியார் பிஞ்சுக்கு – இன்று (31.5.2024) முதல் ‘அன்பெழில்’ என்று அழைக்கப்படும் வகையில், பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.” என்றெழுதி, “கி.வீரமணி, பெரியார் திடல், சென்னை” என்று ஒப்பமிட்டார்.
அந்த வேகத்திலேயே, அண்ணா சாலையிலுள்ள எழுதுபொருள் அச்சக அலுவலகம் சென்று, அரசுப் பதிவேட்டில் (Govt Gazette) அன்றே பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் சோபிகா.- இல்லையில்லை… ‘அன்பெழில்!’
நல்ல தமிழில் பெயர் சூட்டிக் கொண்ட அவருக்கு ‘பெரியார் பிஞ்சு’ இதழின் வாழ்த்துகள்!