கதை கேளு… கதை கேளு…இந்த மலைக்கே
மூன்று நாட்களாகவே விட்டுவிட்டுத் தூறல். சத்துணவு சமைக்கும் தாயம்மா நனைந்தபடியே பள்ளிக்குள் வந்தார். அடுப்பினைக் கொஞ்சம் தாமதமாகவே பற்ற வைத்தார். ஆசிரியர் உமா மட்டுமே பள்ளியில் இருந்தார். தலைமை ஆசிரியர் ஏதோ ஒரு வேலையாக விடுப்பு எடுத்திருந்தார். மொத்தமாக அந்தப் பள்ளியில் முப்பத்தைந்து குழந்தைகள். உமாவை எல்லோருமே அக்கா என்றே அழைப்பார்கள். உமா நிரந்தர ஆசிரியர் அல்ல. தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இங்கே பணிபுரிகின்றார். அது மலைகளுக்கு நடுவே இருக்கும் கிராமம். கிராமம்கூட அல்ல, கிராமத்திற்கு வெளியே. அந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதிகள்கூட இல்லை.
“உமாம்மா… இன்னும் அரை மணி நேரத்தில சத்துணவு தயாராகிடும்.
கொஞ்சம் பசங்கள பார்த்துக்கங்க” என்றார் தாயம்மா. அய்ந்து வகுப்புகள் என்று இருந்தாலும் பள்ளியில் மொத்தமே இரண்டு அறைகள்தான். இரண்டாம் அறையின் சன்னல் உடைந்திருந்ததால் அங்கே சாரல் அடித்து, மழை நீர் உள்ளே வந்தது. ஒரே அறையில் அனைவரும் அமர்ந்து இருந்தனர். மழைப் பாடல்கள் அய்ந்து பாடினார்கள். மின்சாரம் ஏற்கனவே அது நினைத்த நேரத்திற்கு வரும் – போகும். மழை என்றால் வரலாமா, வேண்டாமா என்று யோசிக்கும்.
தமயந்தியின் முகம் வாட்டமாக இருந்தது. உமா கவனித்துவிட்டு, “என்னாச்சு தம்மு? பசிக்குதா? வா, தாயம்மா தயார் செய்துட்டாங்களான்னு பார்ப்போமா?” என உற்சாகமூட்டியபடி சமையலறைக்கு அழைத்துச் சென்றார். பிஸ்கெட் பாக்கெட்டுகள்கூட காணவில்லை. இவர்கள் கூடவே நான்கு அய்ந்து வாண்டுகளும் சேர்ந்துகொண்டனர். தமயந்தி இப்போது நான்காம் வகுப்பில் படிக்கின்றாள். உமாவிற்குத் தமயந்தி மீது தனிப் பிரியம் உண்டு. தமயந்திக்கும்தான்.
ஒரு நாள் காலை உணவினைப் பள்ளியில் வழங்காதபோது ஒரு நிகழ்வு. அன்று வெயில் கடுமையாக இருந்தது. காலையில் பள்ளிக்கு வந்தபோது எல்லாக் குழந்தைகளின் முகங்களும் வாட்டமாகக் காணப்பட்டன. “எல்லோரும் காலையில சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார் உமா. ஒரே அமைதி. “சரி, சாப்பிடாதவங்க கைகளை தூக்குங்க” என்றதும் நான்கு அய்ந்து கைகள் உயரும் என்று நினைத்தார் உமா. ஆனால், இருவரைத் தவிர எல்லோரும் கை உயர்த்தினர். உமாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வேலைக்குச் சேர்ந்த புதிது அப்போது. கையில் காசு அவ்வளவாக இல்லை. ஏதாவது சாப்பிட வாங்கி வரவும் போக முடியாது. பள்ளியில் பெரியவர்கள் என்று யாருமில்லை.
“அக்கா, நான் போய் பாபு மாமா கடையில் ஏதாவது வாங்கி வரவா?”
தமயந்தியின் முகத்தை அப்போதுதான் உமா முதன்முதலாகப் பார்க்கின்றார். ரொம்ப குட்டியாக இருந்தாள். சோர்வாகவும் இருந்தாள். அய்ந்தாம் வகுப்பு அஜித் குமாரும் உடன் போவதாகச் சொன்னான். கையில் இருந்த காசைக் கொடுத்து, “என்ன டிபன் இருக்கோ வாங்கிட்டு வா” என்று சொன்னார். இருவரும் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என எண்ணிவிட்டுக் கிளம்பினர். பத்து நிமிடம்… கால்மணி நேரம்… இருபது நிமிடமானது. குழந்தைகள் எல்லோரும் ஆவலாகக் காத்திருந்தனர். தமயந்தி மட்டும் தூரத்தில் வருவது தெரிந்தது. அவள் கைகளில் எதுவும் இல்லை. உடன் அஜித்குமாரும் இல்லை. வேகமாகவே வந்தாள்.
“என்னம்மா, என்னாச்சு? டிபன் எதுவும் இல்லையா?”
“இருக்குக்கா. ரெண்டு ரூபாய் குறையுது” என்றாள்.
“ரெண்டு இட்லி குறைச்சு வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்ல” என்றார் உமா.
“இல்லைக்கா, ஆளுக்கு ஒரு இட்லின்னு கணக்குப் போட்டேன். ரெண்டு இட்லி
குறைஞ்சா யாருக்குன்னு தராம இருக்குறது?” என்றாள். உண்மையான அக்கறை. ஆனால், உமாவிடம் ஒரு ரூபாய்கூட இல்லை. பதறினாள். அதுவும் குழந்தை மீண்டும் அவ்வளவு தூரம் நடக்க வேண்டுமே. என்ன செய்வது?
“அக்கா, என் சேமிப்பு இரண்டு ரூபாய் இருக்கு, நான் தர்ரேன். என் பையில வெச்சிருக்கேன்” என்றாள் தமயந்தி. அப்போதே உமா அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
அதன் பின்னர் காலைச் சிற்றுண்டி வந்தது. மறுநாளே பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதே எல்லோருக்கும் காலை உணவினை வீட்டில் கொடுத்துவிடவேண்டும் எனக் குரல் கொடுத்தார் உமா. தலைமை ஆசிரியர் முறைத்தார். சில வீடுகளில் தர ஆரம்பித்து இருந்தனர். உமா அன்றைய தினம் முதலே, தினமும் சில பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பள்ளியில் அடுக்கி வைத்திருப்பார், பசி என்றால் பசங்க எடுத்துச் சாப்பிடுவார்கள் என்று.
கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பில் இருந்தாள். அன்றைய மறுநாள், “பசங்கள பள்ளி நேரத்தில் வெளியே அனுப்பக்கூடாதுன்னு தெரியாதா?” என்று தலைமை ஆசிரியர் கடுமையாகக் கடிந்துகொண்டார். பசங்க எல்லோரும் உமாவிற்கு சப்போர்ட். “அக்கா, அவங்க மட்டும் பள்ளி நேரத்தில் இங்க வர்ரதே இல்லை” என்றார்கள். “உஷ்ஷ்… அப்படிச் சொல்லக்கூடாது” என்பார் உமா. ஒருநாளும் எதிர்த்துப் பேசியதில்லை. நிறுவனம் அப்படிச் சொல்லி அனுப்பியுள்ளது. ஓர் ஆண்டில் எல்லாப் பசங்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர்.
அதே தமயந்தி இப்போது நான்காம் வகுப்பில் இருந்தாள். இந்த ஆண்டு பள்ளியில் காலை உணவுத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசே ஏற்பாடு செய்துவிட்டது. இப்போதெல்லாம் வீட்டிலிருந்து காலை உணவு எடுத்துவர வேண்டியதில்லை. சுவையான உணவு பள்ளியிலேயே காலையிலும் வழங்கப்படுகிறது. உமாவுக்கும் மகிழ்ச்சி! ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர், யார் யாருக்கு அப்பா இல்லை, என்ன வேலை செய்கின்றார்கள் என்பது உட்பட அனைத்தும் உமாவிற்குத் தெரியும்.
தாயம்மா மதிய சத்துணவைச் சமைத்துவிட்டார். எல்லோரும் வட்டமாக அமர்ந்து உண்டனர். தட்டுகளைச் சன்னல் வழியே நீட்டி மழை நீரில் கழுவினர். “எவ்ளோ வசதியா இருக்கு” எனச் சொல்லி தங்களுக்குள் சிரித்தனர். மழை என்றாலும் தண்ணீரை அருகே இருக்கும் கிணற்றிலிருந்து தான் சேந்த (மொள்ள) வேண்டும். மோட்டார் வேலை செய்தால் தண்ணீர்த் தொட்டியை நிரப்பி வைத்திருப்பார்கள். இல்லையெனில் கொஞ்ச தூரம் சென்று கழுவிவிட்டு வர வேண்டும். அதனால்தான் இந்த மகிழ்ச்சி.
மழைபெய்து கொண்டே இருந்தது. அன்றைய நாளில் எந்தப் பாடப் புத்தகத்தையும் திறக்கவில்லை. ஆனால், காலை முதலே பேச்சு பேச்சு பேச்சு.
“உங்களுக்கு எல்லாம் என்னப்பா, பக்கத்திலயே வீடு. நான்தான் 20 கிலோமீட்டர் வண்டியில நனஞ்சிட்டே போகணும்” என்றார் உமா.
“அக்கா, எங்க வீட்ல தங்கிக்கோங்க”
“என் வீட்டுக்கு வந்துடுக்கா”
“என் போர்வையைத் தரேன்க்கா. வந்துடுங்க.”
கிட்டத்தட்ட எல்லோரும் அழைத்துவிட்டனர். அம்மாவை இட்லி சுட்டுத் தரச் சொல்றேன் என்பதுவரை சொல்லிவிட்டார்கள். தமயந்தி மட்டும் மவுனமாகவும் இறுக்கமாகவும் இருந்தாள். சில பெற்றோர்கள், அண்ணன்கள் குடையுடன் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்றனர். மற்ற நாட்களில் இப்படி ஒரு பழக்கமே இல்லை. அவர்களாகக் கூட்டமாக நடந்துவருவார்கள், அவர்களாகப் போய்விடுவார்கள். தமயந்தி வீடுமட்டும் எதிர்த் திசையில் இருந்தது.
தனியாகச் செல்ல வேண்டும். அழைத்துப்போக யாருமில்லை. மழை நிற்கட்டும் எனக் காத்திருந்தாள். கடைசியாக ஆசிரியர் உமாவும் தமயந்தியும் மட்டுமே இருந்தார்கள்.
“தம்மு, அந்தப் புண் ஆறிடுச்சா?” என்றார் உமா. இரண்டு வாரங்களுக்கு முன் தமயந்தி பள்ளிக்கு வரும் வழியில் காட்டுப்பன்றி ஒன்று தமயந்தியின் தொடையில் கடித்துவிட்டது. எதிர்பாராத விபத்து. ரத்தக் காயத்துடன் பள்ளிக்கு வந்தாள். நல்லவேளை உமா பள்ளியில் இருந்தார், தலைமை ஆசிரியரும் இருந்தார். உடனே இருசக்கர வாகனத்தில் அய்ந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பள்ளியில் குறைந்தபட்ச முதலுதவியே கிடைத்தது.
“ஆறிட்டு வருதுக்கா. நடந்தா உரசுது” என்றாள் தமயந்தி.
“சரி, எல்லோரும் அவங்க வீட்டுக்கு வா வான்னு கூப்பிட்டாங்க, நீ மட்டும் ஏன் மழைக்கு எங்க வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடல?”
“……………”
“சரி விடுடா”
“எங்க வீட்ல நாங்க படுக்கவே இடம் இருக்காதுக்கா. மழைக்கு முழுக்க ஒழுகும். ராவெல்லாம் வெறிக்க வெறிக்க உட்கார்ந்துட்டுத்தான் இருப்போம். அதான் உங்கள…” என்று தழுதழுத்த போது.
இறுக்கமாகத் தமயந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டார் உமா. கண்களில் வழிந்த கண்ணீரைத் தமயந்தி பார்க்காதவண்ணம் துடைத்துக்கொண்டார்.
“சரி, தம்மு பெரியவளானதும் என்ன செய்யப்போற?” – ஆர்வமாகக் கேட்டார் உமா.
“ஒழுகாத வீடு… எங்களுக்கு மட்டுமல்ல; இந்த மலைக்கே…”