மானமும் அறிவும் – கயிறு கட்டாதீர்! கயிறும் திரிக்காதீர்!
அண்மைக் காலத்தில் மாணவர்களும், மற்றவர்களும் கைகளில் கயிறு கட்டுவதைப் பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில் நிலவும் ஜாதி பிரச்சினைகள் தமிழ்நாடு அரசு அமைத்த மேனாள் நீதி அரசர் சந்துரு குழு அளித்த பரிந்துரைகளைக் கூட சிலர் மதக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஜாதி, மத அடையாளமா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது? என்று உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் முனைவர் எஸ்.குமரனை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் சொன்னதாவது:-
1. மாணவர்கள் கைகளில் கட்டும் வண்ணக் கயிறுகள் மலிவாகவே கிடைப்பதால், இதில் பயன்படுத்தும் `டை’ (வண்ணம் பீஹ்மீ) தரம் குறைந்ததாகவே இருக்கும். இதுவே பெரிய ஆபத்து.
2. இந்தக்கயிற்றை தொடர்ந்துக் கட்டினால் கட்டியிருக்கும் போது, நாளடைவில் தோலில் நிச்சயம் அலர்ஜி வரும்.
3. இதிலுள்ள கிருமிகள் தோலில் உள்ள புண்ணில் படும்போது நமது DNA வே Mutation ஆகலாம். எப்படி சிலருக்கு மட்டும் அல்சர் கேன்சராக மாறுகிறதோ அதுபோல கயிறு மூலமும் சிலருக்குக் கேன்சர் வரலாம்.
4. இந்தக்கயிற்றை நாள்தோறும் சோப்பு போட்டு அலசுவதில்லை. ஆகவே, அதன் மேல் சோப்பு, வியர்வை, அழுக்கு ஆகியவை படுகிறது. இதுவும் உண்ணும் உணவுடன் வயிற்றினுள் சென்று நோய்களை உருவாக்கும்.
5. மாணவர்கள் கட்டியிருந்த கயிற்றை அவர்கள் சம்மதத்துடன் பெற்று, ஆய்வகத்தில் (Lab) PETRI PLATE இல் மூன்று நாட்கள் வைத்து பரிசோதித்தோம். அதில் அந்தக் கயிறு தொடும் இடங்களிலெல்லாம் கிருமிகள் (Microorganisms) ஏராளமாக வளர்ந்திருந்தன.
இதையே வேறொரு கோணத்தில் நமது ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள், கையில் கயிற்றுடன் குழந்தைகளைக் காணும் போது, ஏன் கயிறு கட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சக்தி இருப்பதாகப் பெரியவர்கள் கட்டிவிட்டார்கள் என்று தான் பதில் வரும் “இந்தக் கயிற்றுக்கு கடவுள் சக்தி இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதனை செய்து பார்க்கலாமா?” என்று அவர்களின் சம்மதத்தை கேட்டுப் பெறுவார்.
ஆசிரியர் தாத்தா தோழர்களிடம் பெற்ற ஒரு சின்னக் கத்திரியைத் தனது கையில் வைத்துக்கொண்டே அந்தக் குழந்தையிடம், ”இந்தக் கத்திரியால் உங்கள் கையில் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துப் பார்க்கலாம். கத்தி உடைந்துவிட்டால், கடவுளுக்குச் சக்தி உண்டென்று நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
மாறாக கயிறு அறுபட்டுவிட்டால், கடவுளுக்கு சக்தி இல்லையென்று நீங்கள் ஏற்றுக்கொண்டு இதை இனிமேல் கட்டிக் கொள்ளக் கூடாது, சரியா?” என்று கேட்பார். சம்மதம் கிடைத்தவுடன் மிகவும் கவனமாக, அந்தக் கத்தியால் கயிற்றை அறுப்பார். அதென்ன இரும்பா? கத்தி உடைவதற்கு! சுலபமாக கயிறு அறுபட்டுவிடும். அந்தக் குழந்தை வியப்படைந்து “இனிமேல் நான் கயிற்றைக் கட்டிக்கொள்ள மாட்டேன் தாத்தா” என்று உறுதி கூறிய நிகழ்வுகளும் ஏராளம் உண்டு.
ஆசிரியர் தாத்தா, சுற்றி இருப்பவர்களைப் பார்த்து, “ஆகவே, கயிறு கட்டாதீர்கள்! கயிறும் திரிக்காதீர்கள்!” என்று கூறுவார்.
பெரியவர்கள் மட்டும் தான் கைகளில் கயிறு கட்டக்கூடாது என்று பேச வேண்டுமா? பெரியார் பிஞ்சுகளும் உங்கள் நண்பர்களிடம் பேசலாமே! பேசுவீர்களா?