வேண்டும்! வேண்டாம்!
சொல்லிலும், உன் செயலிலுமே உண்மை வேண்டும்!
சோம்பலையே நீக்கிவிட்டு உழைக்க வேண்டும்!
நல்லவற்றை மனந்திறந்தே போற்ற வேண்டும்!
நமைக்கெடுக்கும் தீயவற்றை மாற்ற வேண்டும்!
இல்லையெனக் கூறாமல் கொடுக்க வேண்டும்!
இன்னலுறு ஏழைகட்கே உதவ வேண்டும்!
தொல்லைதரும் பழக்கமெல்லாம் விடவே வேண்டும்!
தோல்வியிலும் முயற்சிதனைத் தொடர வேண்டும்!
யாரிடமும் போய்நின்றே கெஞ்ச வேண்டாம்!
யார்மனமும் நோகும்படிப் பேச வேண்டாம்!
பேரிடர்தான் வந்தாலும் கலங்க வேண்டாம்!
பொய்புரட்டு வேலைகளைச் செய்ய வேண்டாம்!
ஏரிகுளம் பாதையினை அடைக்க வேண்டாம்!
‘ஈரோட்டுப் பெரியாரை’ மறக்க வேண்டாம்!
வாரிநீயும் கண்டவர்க்கும் வழங்க வேண்டாம்!
வறியவர்க்கே ஈவதையும் நிறுத்த வேண்டாம்!
– பாவலர் அழகு நிலவன், புதுக்கோட்டை