வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்
சில ஆண்டுகளுக்கு நமது பெரியார் பிஞ்சு இதழில், கம்பி இல்லா மின்சாரம் (witricity) என்ற புதிய மின்சார உற்பத்தி பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.அதைப் போலவே இன்னொரு புதிய முறையிலான மின்சார உற்பத்தி பற்றிய செய்தி இது.மின்சாரத்திற்காக இனி அணுவைத்தேடியும் அலையவேண்டாம்; அனலைத் தேடியும் அலையவேண்டாம். ஆக்சிஜன் போதும் என்கிறார் அறிவியலாளர் கே.ஆர்.ஸ்ரீதர் தமிழகத்தில் பிறந்து திருச்சியில் படித்த இவர் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவில் பணியாற்றியவர். செவ்வாய்க் கோளில் மனிதன் வாழ முடியுமா என்ற ஆய்வு நடந்தபோது, அங்கு ஆக்சிஜனைத் (உயிர்வாயு)தயார் செய்ய முடியுமா? என்பது பற்றி ஆய்வு செய்யுமாறு நாசா இவரைப் பணித்தது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருந்தபோது, திடீரென அந்த ஆய்வை நிறுத்திவிட்டது நாசா.
ஆனாலும், ஸ்ரீதர் அதனைத் தொடர்ந்துள்ளார். ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார்.அதனுள் ஆக்சிஜனையும் இயற்கை எரிவாயுவையும் உள்ளே செலுத்தினார்.அது வினை புரிந்து வெளியே மின்சாரமாக வந்தது. இந்த இயந்திரம் ஒரு பெட்டி போன்ற வடிவமுடையது. வந்தாச்சு புது தொழில்நுட்பம் இதற்கு BLOOMBOX என்று பெயரிட்டுள்ளார்.
12 அடி உயரம் உள்ள இந்த ப்ளூம் பாக்ஸ் பெட்டியைத் தயாரிக்க தற்போது பெரும் பொருட்செலவு பிடிக்கிறது. அதனால், பெரும் நிறுவனங்கள் மட்டுமே இந்த மின்சாரப்பெட்டியை வாங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுள்ளன. உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதளக் கணினி நிறுவனம் ஒரு பெட்டியை வாங்கி மின்சாரம் உற்பத்தி செய்து தனது மின் தேவையைத் தீர்த்துக் கொள்கிறது. நடுத்தர அளவிலான ஒரு ப்ளூம் பாக்ஸ் இருந்தால் இரண்டு அல்லது மூன்று வீடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆக்சிஜனுடன் இயற்கை வாயு அல்லது மாட்டுச் சாண வாயு அல்லது சூரிய ஒளியைச் செலுத்தியும் மின்சார உற்பத்தியைச் செய்யலாமாம். இன்னும் சில ஆண்டுகளில் சாதாரணமானவர்களும் இந்த மின்சாரப் பெட்டியை வாங்கிப் பயன்படுத்தும் காலம் வரும் என்கிறார் ஸ்ரீதர். அதாவது 1.5 இலட்சம் ரூபாயில் ஒரு வீட்டுக்குத்தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யும் ப்ளூம் பாக்ஸை தயாரிக்கும் காலம் வரும் என்பது இவரது நம்பிக்கை.