தற்கொலை – தவிர்ப்பது எப்படி?
– சிகரம்
இயற்கையின் பரிணாமத்தில் மனித இனம் வியப்பிற்குரியது. உடல் அமைப்பும், மூளைத் திறனும், பேசும் ஆற்றலும், மனிதர்க்கே உரிய தனிச்சிறப்புகள். ஒரு மனிதனைச் செயற்கையில் எத்தனை கோடி ரூபாய்ச் செலவிட்டாலும் உருவாக்க முடியாது. எனவே, மனித உயிர் விலைமதிப்பற்றது. இப்படியிருக்க அற்பக் காரணங்களுக்காக, உணர்ச்சி வசப்பட்டு, உயிரைப் போக்கும் செயல் கொடியது. அதிலும் தன்னுயிரைத் தானே போக்கிக் கொள்வது இன்னும் கொடுமையானது; கோழைத்தனமானது.
மனித வாழ்வின் நோக்கு: மற்ற மனிதர்களோடு இணங்கி, அவர்களையும் நம்மைப்போலவே எண்ணி, மதித்து, மற்றவர்களையும் வாழ்வித்து நாமும் வாழவேண்டும். வாழ்ந்து சாதிக்க வேண்டும். மற்றவர்களும் சாதிக்க துணை நிற்க வேண்டும். இதை நன்றாகப் புரிந்து கொண்டு வாழத் தலைப்படல், வாழ்வில் சிக்கல், உளக்கொதிப்பு, உதிரக்கொதிப்பு, வேதனை, கோபம், வெறி, சலிப்பு, வெறுப்பு, பகை, பழிதீர்த்தல் போன்றவை எழ வாய்ப்பே இல்லை.
சிக்கல்களுக்கும் வேதனைகளுக்கும் காரணங்கள்: தன் முனைப்பு, ஆதிக்க வேட்கை, அதிகார நாட்டம், பேராசை, சுயநலம், பொறாமை, பொறுமையின்மை, சிந்தித்து, திட்டமிட்டுச் செயல்படாமை, மூடநம்பிக்கை, உணர்ச்சி வசப்பட்டு செயல்படல், கட்டுப்பாடின்மை, தூக்கமின்மை, ஓய்வின்மை, அளவறியாமை, தெளிவின்மை, இலக்கின்மை, வாழ்வின் பொருள் அறியாமை, மரபு வழிவரும் மடமைகள், சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் இன்மை, தன்னம்பிக்கை யின்மை, உள்ள உறுதியின்மை, தோல்வியில் துவளல், சோதனைகளை எதிர்கொள்ளும் திடமின்மை, விடாமுயற்சியின்மை, விமர்சனங் களுக்கு அஞ்சல், இழப்பைத் தாங்கும் உறுதியின்மை போன்றவை.
சிக்கல்களும் தற்கொலைகளும் : தற்கொலைக்கான காரணங்கள் பல, சூழல்களும் பல. ஆனால், எந்தத் தற்கொலைக்கும் மேற்கண்ட இயல்புகளே வழிவகுக்கின்றன. வாழ்க்கை என்பதே சிக்கல்களும், இடர்களும், சோதனைகளும், எதிர்ப்புகளும், இழிவுகளும், இழப்புகளும் நிறைந்தவையே. இவற்றை எந்த மனிதனும் எதிர்கொண்டேயாக வேண்டும். உண்மை இப்படியிருக்க, அற்பக் காரணங்களுக் காகவே தற்கொலைகள் செய்துகொள்ளப்படுகின்றன.
- கணவன் மனைவி சண்டை, மாமியார் மருமகள் சண்டை, பெற்றோர் பிள்ளை சண்டையென்று குடும்பச் சண்டையால் தற்கொலை ஒருவகை.
- கடன் சுமை வாட்டுகிறது, அடைக்க வழியில்லை. குடும்பத்தோடு தற்கொலை இன்னொருவகை.
- காதல் தோல்வியில் முடிந்தது காதலர் தற்கொலை.
- தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை. இப்படி பட்டியல் நீளும். தற்கொலையும் நிகழ்த்தப்படுகிறது நாளும்.
தற்கொலை முனைப்பு: எதிர்பாராத இழப்பு, கோபம், வெறுப்பு ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சிவசப்பட்ட உந்துதல்தான் தற்கொலை முனைப்பு. அந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சட்டென்று நிகழ்த்தப்படுவதே தற்கொலை. தற்கொலை முனைப்பும், உணர்ச்சியும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, திடீரென ஒரு நண்பரோ, உறவினரோ வந்துவிட்டால், அந்த முனைப்பும், உணர்ச்சியும் தணிந்துவிடும். தற்கொலையும் நின்று விடும். நண்பரோ, உறவினரோ சென்றபின் அந்தத் தற்கொலை முனைப்பு மறைந்துவிடும். அவர் நினைத்தால்கூட தற்கொலை முயற்சி வராது. எனவே, தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். தற்கொலை அந்த உணர்ச்சி வேகத்தில் செய்யப்படுவதாகும்.
எனவே, தற்கொலை முனைப்பு வரும்போது தனிமையைத் தவிர்த்து, பலர் மத்தியில் வந்துவிட வேண்டும். தற்கொலையின் விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் அவர்கள் முடிவு அவர்களுக்கே முட்டாள் தனமானதாகப்படும்.
ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்க அவர்கள் பெற்றோர் பட்ட பாட்டை தற்கொலைக்கு முயலும் பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும், தாங்கள் இறந்தபின் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மை வளர்த்த பெற்றவர்களுக்கு இப்படியொரு துன்பத்தை, சோகத்தை, கவலையை, இழப்பைத் தரலாமா? பிள்ளைகள் சிந்திக்க வேண்டும்.
பிள்ளைகளைத் தவிக்கவிட்டு, தற்கொலை செய்துகொள்ளும் பெற்றவர்களும், தங்களுக்குப் பின் அப்பிள்ளைகள் என்னாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அதற்காக பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொள்வது அயோக்கியத்தனமானது. நம் உயிரைப் போக்கவே நமக்கு உரிமையில்லாதபோது, பிற உயிரைப் பறிக்க நமக்கேது உரிமை? எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாணவர்கள் தற்கொலை: மாணவர்களின் தற்கொலை அறியாமையின் விளைவு. அதிகம் மதிப்பெண் வரவில்லையென்றோ, தேர்வில் தோல்வி என்பதற்காகவோ தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது அறியாமை.
வாழ்க்கையென்பது படிப்பு, மதிப்பெண், தேர்வு இவற்றோடு மட்டும் முடிவதில்லை. வாழ்வின் எல்லை பெரியது. எத்தனையோ சாதிக்க முடியும். படிப்பு இல்லை யென்றால் விளையாட்டில் சாதிக்கலாம், நடிப்பில் சாதிக்கலாம், ஓவியராகலாம், ஓட்டுநர் ஆகலாம், தையல் கலைஞர் ஆகலாம் இப்படி எத்தனையோ.
இந்த முறை தேர்வில் தோல்வியடைவதில் அடுத்தமுறை வென்றுவிடலாம். தற்கொலையில் உயிர்விட்டால் மீண்டும் உயிர்வருமா? மாணவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
கலைஞரை எண்ணுங்கள்: தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மூன்றுமுறை எழுதி மூன்று முறையும் தோல்வியடைந்தவர். (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அப்படிப்பட்ட அவர் சாதிக்காத சாதனையா? அவர் வெளிக்காட்டாத ஆற்றலா? அவர் படிக்காத புத்தகங்களா? எழுதாத எழுத்துக்களா? தற்கொலைக்கு முயலும் மாணவர்கள் கலைஞரை எண்ணுங்கள்! மேலும் மேலும் முயன்றால் தேர்வில் வெல்லலாம். அதிக மதிப்பெண் பெறலாம். நினைத்ததைச் சாதிக்கலாம்.
95% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி 97% பெறவில் லையா? ஓராண்டு பாழானால் பரவாயில்லை. அதனால் பெரிதும் இழப்பில்லை. உயிர் போனால் மீண்டும் வருமா? அறுபது ஆண்டு வாழ்வு போய் விடுமே! வாழ்வே இல்லாது போய்விடுமே! சிந்திக்க வேண்டாமா?
நஞ்சிலும்(விஷம்), நாணிலும்(கயிறு) போகும் உயிர், நன்முயற்சியில் போகட்டுமே! தோல்வியென்றவுடன், சிக்கல் என்றவுடன், இழப்பு என்றவுடன் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு மாறாக, அத்தோல்வியை மீண்டும் வெற்றியாக மாற்றுவதிலும், சிக்கலைத் தீர்ப்பதிலும், இழப்பை ஈடுகட்டுவதிலும் முயற்சி மேற்கொண்டு அயராது பாடுபட்டு அம்முயற்சியிலே அவ்வுயிர் போகட்டுமே! அப்படி எண்ணி முயன்றால் உயிர் போகாது, மாறாக அம்முயற்சியில் வெற்றியே கிட்டும்! முயற்சியிலே உயிர் போனாலும் பெருமைதானே! ஆனால், தற்கொலை சிறுமையல்லவா?
பெரியவர்கள், சுற்றத்தார் கடமை : மாணவர்களுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும், நண்பர்களும் ஆலோசனைகள் அடிக்கடி வழங்க வேண்டும். சுயமுன்னேற்ற நூல்களைப் படிக்க செய்யவேண்டும். பெரியவர்களுக்கு சுற்றத்தவர்கள் ஆலோசனை வழங்கவேண்டும். சிறுவயது முதலே தற்கொலை ஒரு கோழைத்தனம் என்பதை மனதில் பதியச் செய்யவேண்டும். சுற்றியுள்ள மக்களோடு மனம் விட்டுப் பழக விடவேண்டும். முதல் மதிப்பெண் என்ற மோகத்தை மாணவர்களுக்குத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். தனக்குத் தேவையான மதிப்பெண்ணைப் பெற மட்டுமே முயலச் செய்ய வேண்டும். ஒரு முறையில் கிடைக்கவில்லையென்றால் அடுத்த முறை முயலும் பக்குவத்தை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
மூன்று ஆயிரம் முறை தோல்விகண்டு, அதன் பின்தான் எரியும் பல்பைக் கண்டுபிடித்தார் எடிசன்.
ஊனமுற்றோரை உள்ளத்தில் உள்ளுங்கள் : கையில்லாமல், கால் இல்லாமல், காதில்லாமல், கண்ணில்லாமல், ஊமையாய், ஊனமாய்ப் பிறந்த எத்தனையோ பேர் எத்தனையோ சாதிக்கும்போது, இரண்டு காலும் இல்லாதவர் நடனத்தில் புகழ்பெற்றபோது, கையில்லாதவர் ஒப்பற்ற ஓவியங்கள் தீட்டும்போது, எல்லா உறுப்புகளும் குறைவில்லாமல் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வது அறிவுடைமையா?
தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. கோழைத்தனமே வெட்கப் படவேண்டியது. தோல்வி கண்டவரை யாரும் பழிப்பதில்லை. தற்கொலை செய்பவரைத்தான் உலகம் பழிக்கும்.
உயிரையும் இழந்து, வாழ்வையும் இழந்து, கேவலத்தையும் அடையலாமா? தற்கொலைக்கு முயல்வோர் தவறாது சிந்திக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும்.
வாழ்ந்து காட்டுபவன் மட்டுமே மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி படைத்தவன். தற்கொலை முயல்வோர் இதைத் தவறாது சிந்திக்க வேண்டும்!