அறிவின் விரிவு – 1: விலங்குகளுடன் பேசலாம்…
வினோத் ஆறுமுகம்
பிஞ்சுகளே, நீங்கள் எப்போதாவது உங்கள் நாய்க்குட்டி உங்களிடம் என்ன சொல்ல வருகிறது என யோசித்து இருக்கிறீர்களா? உங்களுடைய அழகான பூனைக்குட்டி உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிளி மட்டுமல்ல, உங்களைச் சுற்றி உள்ள பறவைகள் கீச்சு மொழியில் என்ன சொல்கின்றன என்பனவெல்லாம் உங்களுக்குப் புரிந்தால் எப்படி இருக்கும்?
மாயமோ மந்திரமோ அல்ல. இவை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சாத்தியமாக்கிவிடும். அதைப்பற்றிப் பார்ப்போமா?
சிறு கற்பனை செய்து பாருங்கள். உங்கள் பூனைக்குட்டி உங்களிடம் ‘மியாவ் மியாவ்’ என்று கத்துகிறது. அது உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று மட்டும் உங்களுக்குப் புரிந்து விட்டது. ஆனால், அது சரியாக என்ன சொல்கிறது என்பதுதான் புரியவில்லை. உடனே உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலியைத் திறக்கிறீர்கள். அந்தச் செயலி உங்கள் பூனைக் குட்டியின் ‘மியாவ்’ சத்தத்தை உள்வாங்கிக் கொள்கிறது. அந்தச் சத்தத்திற்கான சரியான அர்த்தத்தை இப்போது உங்களுக்குக் காட்டுகிறது. “உங்கள் பூனைக் குட்டிக்குப் பசி; பால் கொடுங்கள்” என்பதைத்தான் அது ‘மியாவ்’ என்று சொல்லுகிறது. உங்கள் செல்லக் குட்டியைப் புரிந்து கொள்வது இப்போது சுலமாகிவிடும் அல்லவா?
இன்றைய தொழில்நுட்ப உலகில் இத்தகைய ஓர் ஆப் மூலம் அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் வியப்புக்குரியது தானே!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள் முதல் கடலில் துள்ளிக் குதித்து விளையாடும் டால்பின்கள் வரை அதன் மொழிகளை மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் வகையிலான செயலிகள் தற்போது உருவாக்கத்தில் உள்ளன. இவை தொடர்பான ஆய்வுகள் பல நம்பகத் தகுந்த வெற்றியை ஈட்டித் தந்துள்ளன.
உண்மையில் அந்தச் செயற்கை நுண்ணறிவு எப்படி வேலை செய்கிறது?
விலங்குகளும் பறவைகளும் வெறுமனே சத்தம் மாத்திரம் எழுப்புவதில்லை அவை மனிதர்களுக்கு நிகராக தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறித் தொடர்பு கொள்கின்றன. மனிதர்களுக்கு அவை இயல்பாகவே அவற்றுக்குரிய சத்தங்களாகத் தெரியும். அந்த ஒலிகளுள் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
விலங்குகள் எழுப்பும் சத்தங்களை முதலில் பதிவு செய்து அதை செயற்கை நுண்ணறிவுக் கணினிக்குத் தகவல்களாகப் புகட்டுவார்கள் (Input Data).
செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அந்தச் சத்தங்களில் உள்ள ஒற்றுமை, பாங்கு, அளவுகள் எனப் பல்வேறு மாதிரிகளாகப் பிரித்தெடுக்கும்.
கிடைத்த மாதிரிகளைக் கொண்டு அதற்கான அர்த்தங்கள் என்னவாக இருக்கலாம் என்பதைக் கணிக்க முயலும்.
கணித்தவற்றை மனிதர்களிடம் காட்டி அதன் தரவுத் தளத்தை மேம்படுத்திக் கொள்ளும். இறுதியாக இந்த முறையைத் திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம் விலங்குகளின் ஒலிகளுக்கான அர்த்தங்கள் தொடர்பான தரவுத் தளத்தை உருவாக்கி விடும்.
டால்பின்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள விசில் அடிக்கும். விசிலடிக்கும் மாதிரிகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் அதற்கான அர்த்தங்களை உருவாக்கியுள்ளார்கள். எந்த விசில் சத்தம் மனிதர்களுக்கு வணக்கம் சொல்ல முயல்கிறது, எந்த விசில் சத்தம் மூலம் ஆபத்தை உணர்த்துகின்றன என செயற்கை நுண்ணறிவு அழகாகப் பிரித்தெடுத்துள்ளது.
இந்த ஆய்வுகளின் மூலம் யானை, டால்ஃபின், நாய்க்குட்டி, பூனை மற்றும் பறவைகளின் சத்தங்களை ஓரளவு செயற்கை நுண்ணறிவால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வுகளில் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் இயற்கை உடனான நம்முடைய உறவை நிச்சயம் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
வருங்காலத்தில் நாம் எல்லாம் நம் செல்லப் பிராணிகளுடன் பேசி விளையாடி மகிழலாம். அது நிச்சயம் கைகூடும் என்பது உண்மை.<
(விரியும்)