நினைவில் நிறுத்துவோம்: கட்டவிழ்த்து விடுங்கள்! கண்காணிப்பில் வளருங்கள்!
இன்றைக்குப் பல குடும்பங்களிலும் பிள்ளைகளை அவர்கள் விருப்பப்படி எதையும் செய்ய அனுமதிப்பதில்லை. தங்கள் விருப்பங்களை எல்லாவற்றிலும் திணிக்கின்றனர். பிள்ளைகளுக்கு முழு உரிமை தர வேண்டும் என்பது கட்டாயம்.
பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? பெரியவர்கள் சொல்வது போலத் தானே நடக்க வேண்டும்? என்ற கேள்விகள் சரியானவை! ஆனால், பிள்ளைகள் பெரியவர்கள் உறவும், வழிகாட்டலும், கட்டுப்படுத்துதலும் எந்த அளவுக்கு, எந்த எல்லைக்குள், எந்த நோக்கில் இருக்க வேண்டும் என்பதும் கவனத்தில், கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கட்டுப்பாடு எப்படியிருக்க வேண்டும்?
ஒரு பெரிய மரக்கன்றை நட்டு வளக்கும் போது அந்த மரக்கன்று நேராக, பாதுகாப்பாக வளர ஒரு குச்சியை நட்டு அதில் மரக்கன்றைக் கட்டி வைப்பர். அந்தக் குச்சி எது வரை?
மரக்கன்று வலுவுடன் தன்னளவில் வளையாமல், முறியாமல் வளரும் வரை. மரக்கன்று முதிர்ந்து நிமிர்ந்து நிற்கும் தகுதிபெற்றதும் அந்தக் குச்சியை எடுத்து விடுவார்கள். பிள்ளைகள் மீதான பெற்றோரின் கட்டுப்பாடு அந்த அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும்.
பிறந்த குழந்தை வளர்ந்து பொதுவெளியில் தனிமையில் கலந்து வாழும் தகுதியைப் பெறும் வரை பெற்றோரின் கட்டுப்பாடும், கண்காணிப்பும், பாதுகாப்பும், வழி நடத்துதலும் கட்டாயம்.
வழிகாட்டலின் எல்லை
பிள்ளை பிறந்ததும் தாயிடம் பால்தானே குடிக்கிறது? அதன் பின் அதற்கான உணவை, தானே அதற்கு உண்ண முடியாது; தெரியாது அப்போது பெரியவர்கள் உணவு ஊட்டுகிறார்கள். தானே உண்ணும் தகுதி வந்ததும் பெற்றோர் வழிகாட்டல்படி அது உண்ணும்; உண்ண வேண்டும். கல்வி கற்க, முதலில் பெரியவர்கள் கற்பிக்க வேண்டும். பின் பிள்ளைகளே கற்கும்படி செய்ய வேண்டும்.
உடல் தூய்மை முதலில் பெரியவர்கள் செய்து பழக்கப்படுத்த வேண்டும். பின்னர் பிள்ளைகளே செய்து பழக வேண்டும். பிறருடன் பேச முதலில் கற்றுத் தர வேண்டும். பிறகு அவர்களே பிறருடன் பழக அனுமதிக்க வேண்டும்.
எந்த ஒன்றையும் செய்ய அவர்களுக்கு வழிகாட்டி, துணை நின்று கற்றுத்தர வேண்டும். நாமே முழுவதும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் செய்யும் போது ஆலோசனைகள், திருத்தங்கள், செய்து காட்டல் ஆகியவற்றைப் பெரியவர்கள் மேற்கொள்வது சரியான அணுகுமுறை.
நீ இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்பதை நாம் முடிவெடுத்து, பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. உனக்கு எது விருப்பம்? ஏன் விரும்புகிறாய்? அதனால் நன்மை என்ன? கேடு என்ன என்பதை அவர்களே சொல்லும்படி செய்து அதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா என்பதை அவர்களே உணரும்படி செய்ய வேண்டும்.
நம் விருப்பத்தைத் திணிக்கக்கூடாது
உணவா? எது பிடிக்கும்? என்று பிள்ளைகள் விருப்பத்தைக் கேட்க வேண்டும். அதை அவர்கள் உண்ணலாமா? உண்ணக் கூடாதா? என்பதற்கான காரணத்தை நாம் விளக்க வேண்டும். அவர்கள் தவறாக முடிவெடுத்தால் அவர்கள் முடிவுக்கான காரணத்தைக் கேட்டு, ஏன் அதைச் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை நாம் விளக்கிக் கூறி, அவர்கள் நல்லதை, சரியானதைச் செய்யும்படி _ ஏற்கும்படி, உண்ணும்படி, உடுத்தும்படி, பார்க்கும்படி, கேட்கும்படி, பழகும்படி செய்ய வேண்டும்.
எந்த ஒன்றையும் அவர்கள் தன் அளவில் சிந்தித்து விரும்பி ஏற்றுச் செய்யும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் கட்டுகளை விலக்க வேண்டும்.
நம் நம்பிக்கைகளைத் திணிக்கக் கூடாது
கடவுள், மதம், பழக்க வழக்கம் என்று எதுவானாலும் நம் விருப்பங்களைப் பிள்ளைகள் மீது திணிக்காது, அவர்கள் விருப்பப்படி காரணங்களோடு பின்பற்ற முழு உரிமை அளிக்க வேண்டும்.
பெற்றோர் கடவுளை நம்புவதால், வணங்குவதால் பிள்ளைகளையும் வணங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. பிள்ளைகளுக்குப் பக்தி நூல்களை மட்டும் படிக்கக் கொடுக்காது, பகுத்தறிவு நூல்களையும் படிக்கச் செய்ய வேண்டும். அவர்கள் எது சரி என்று முடிவெடுத்துப் பின்பற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.
அய்யங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்
பிள்ளைகள் அய்யங்களைத் தடையின்றி அச்சமின்றி கேட்டுத் தெளிய வாய்ப்பு அளிக்க வேண்டும். விளக்கங்களை உண்மையாக, சரியாக அவர்களுக்குக் கூற வேண்டும். நம்மிடம் உள்ள நம்பிக்கைகளை ஒட்டி நம் கருத்துகளை அவர்களுக்குக் கூறக்கூடாது.
இலக்கு அவர்களுடையது
பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது திறமை இருக்கிறது என்பதைப் பார்த்தறிந்தும் கேட்டறிந்தும், அதில் சாதிக்க அவர்களைப் பயிற்று விக்க வேண்டும். நம் இலக்குகளையே அவர்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நம் விருப்பப்படி அவர்களை வாழச் செய்வது தப்பான முடிவு ஆகும்.
விளையாடுவதில் குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும். எனவே, அவர்களைத் தடையின்றி விளையாடச் செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் விளையாட்டில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
சில குழந்தைகளுக்கு ஓவியம் வரையப் பிடிக்கும்; சிலருக்குப் பாடப் பிடிக்கும்; சிலருக்கு ஆடப் பிடிக்கும்; சிலருக்கு ஓடப் பிடிக்கும்; சிலருக்கு கதை புனையப் பிடிக்கும். எதில் அவர்களுக்கு விருப்பம், திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதில் அவர்களை ஆர்வமுடன் ஈடுபட, செய்ய அனுமதிக்க வேண்டும். மதிப்பெண்கள் நோக்கில் புத்தகப் புழுவாக அவர்களை ஆக்கக்கூடாது. விருப்பப்படி வளர்ந்து வரும் பிள்ளைகள் தான் பிற்காலத்தில் ஆற்றலாளர்களாய், அறிவாளிகளாய் ஆகிச் சாதிக்கின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற புத்தகப் புழுக்கள் எதையும் சாதித்ததில்லை; சாதிப்பதும் இல்லை என்பதே உண்மை நிலை.
சாதிப்பவர்கள் யார்?
கிராமச்சூழலில், பொதுமக்களுடன் கட்டின்றிப் பழகி, ஊர்சுற்றி, ஓடியாடி, நீந்திக் களித்து வளரும் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் பிற்காலத்தில் அதிகம் சாதிக்கின்றனர் என்பதிலிருந்து பெற்றோர்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுக்குள் வளரும் செடிகளை விட தன்னிச்சையாய் வளரும் காட்டுச் செடிகள் தான் வளமாகவும் அதிகமாய்ப் பலன் தருவனவாகவும் இருப்பதைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும். அதை உணர்ந்து, பிள்ளைகள் தடையற்ற, சுதந்திரமான, விருப்பப்படியான வாழ்வை _ வளர்ச்சியைப் பெற பெற்றோர் வாய்ப்பளிக்க வேண்டும். கட்டின்றி அதே நேரத்தில் கண்காணிப்புடன் பிள்ளைகளை வளரவிட்டால், அவர்கள் வளமாக, வலுவாக, நலமாக, கற்றுத் தேர்ந்து சாதிப்பர்; சரித்திரம் படைப்பர். அதற்கு, பெற்றோர் தடையாக இல்லாமல் துணை நிற்க வேண்டும்.<