பறவைகள் அறிவோம் – 6: பௌவர் பறவை
பொதுவாகவே பறவை இனங்கள் கூடு கட்டி வாழுகின்றன. அவற்றில் சில பறவைகள் தண்ணீரில் மிதக்கும் கூடுகளைக் கட்டுகின்றன. சில பறவைகள் மரத்தின் கிளைகளிலும், மரப்பொந்துகளிலும், பாறையிடுக்குகளிலும், சில பறவைகள் அந்தரத்தில் தொங்கும் கூடுகளையும் கட்டி வாழுகின்றன. அதுபோல தரையில் கூடுகட்டி குடும்பத்தோடு வாழுகின்ற பறவைகளில் ஒன்றுதான் பௌவர் பறவை.
எப்படி தூக்கணாங்குருவி அந்தரத்தில் தொங்கும் வகையில் கூட்டைக் கட்டி தன் இணைப் பறவையைக் கவர்கின்றதோ அதுபோல இந்தப் பௌவர் ஆண்பறவை தரையில் கூடு கட்டி முடித்தவுடன் அது நன்றாக இருக்கிறதா என்பதனைக் காண வருமாறு பெண்பறவைக்கு அழைப்பு விடுக்கும். பெண் பௌவருக்குப் பிடித்திருந்தால் அதனோடு இணை சேரும். இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரிக்கும்.
இயற்கையின் அற்புதமான கட்டடக்கலை நிபுணர்களாக பௌவர் பறவைகள் உள்ளன. இவை 20 முதல் 50 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். ஆஸ்திரேலியா, நியூகினியா போன்ற நாடுகளில் இப்பறவையினம் புதர்கள், கட்டாந்தரை, மற்றும் மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றது.
இவை பெரும்பாலும் பழங்களை உண்ணும். ஆனால், தன் குஞ்சுகளுக்கு பூச்சிகளைக் கொடுக்கும். சில நேரங்களில் இலைகள், தேன் போன்றவற்றையும் உண்ணும். பௌவர் கட்டும் கூடுகளை மற்ற பறவைக் கூடுகளோடு ஒப்பிட முடியாது.
அழகான வீடு என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியாகவும், வசதியா- னதாகவும் கட்டுகின்றன. ஆண் பறவை நிலப்பகுதிகளில் கிடைக்கும் குச்சிகளைக்கொண்டு வீட்டைக் கட்டும். வண்ண, வண்ண இலைகள், பூக்கள் மற்றும் பழங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து வீட்டைச் சுற்றி அலங்கரிக்கும். சில சமயங்களில் மனிதர்கள் தூக்கி வீசிய வண்ண, வண்ணப்பொருட்களையும், கண்ணாடித் துண்டுகளையும், தகரம் மற்றும் பிளாஸ்டிக் துண்டுகளையும் கொண்டும் கூட்டை (வீட்டை) அலங்கரிக்கக் கற்றுக் கொண்டு விட்டன.
சில பறவைகள் நீலம், சிவப்பு, ஆரஞ்சு எனச் சில குறிப்பிட்ட வண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துத் தங்கள் கூட்டைக் அழகுபடுத்தும்.
இந்தோனேஷியாவில் காணப்படும் பழுப்பு நிறத் தோட்டப் பறவை இந்த இனத்தைச் சேர்ந்ததுதான். இவை குச்சிகள் மூலம் பந்தல் மேல் விதானம் அமைத்து அதன் வாசல் முகப்பில் பல வண்ணப் பொருட்களை அடுக்கிவைக்கும். தினமும் விதானத்தின் மேல் விழும் இலை, தழைகளை அப்புறப்படுத்திக் கூட்டை அழகுபடுத்துவது இதன் முக்கிய வேலை.
சில நேரங்களில் வேறு ஆண் பறவையின் கூட்டிலிருந்து அழகான பொருட்களைத் திருடிக் கொண்டு வந்து தனது வீட்டை அழகுபடுத்தும். இவ்வாறு அழகுமிகுந்த வீட்டைக் கட்டிமுடிக்க சுமார் 10 முதல் 12 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. இவ்வாறு கட்டிய கூட்டை பெண் பறவைக்குக் காட்டியும், அதன் முன்னால் நின்று பாட்டுப் பாடியும், ஆடியும் மற்ற விலங்குகளின் குரலில் ‘மிமிக்கிரி’ செய்தும் பெண் பௌவர் பறவையைக் கவர்ந்திழுக்கும். அன்றாட மனித வாழ்க்கையைக் கூட நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது அல்லவா?
காலச் சூழ்நிலையில் மாறிவரும் தட்ப வெப்பத்தாலும், மனிதர்களால் ஏற்படும் இடையூறுகளாலும் பறவைகளின் வாழ் விடங்கள் மறைந்து வருவதை நம்மால் காணமுடிகிறது. இந்நிலையிலிருந்து மீண்டுவர மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
பறவைகளை நேசிப்போம்!
தூயகாற்றைச் சுவாசிப்போம்!