கதை கேளு… கதை கேளு…தைராவிற்கு என்ன ஆச்சு?
நாங்கள் இந்தப் புற்றைப் புதிதாகக் கட்டி முடித்துள்ளோம். பல அடுக்குப் புற்று. பல புதிய வசதிகள் நிறைந்த புற்று. வழக்கமாக நாங்க கட்டி முடித்த புற்றைக் காலி செய்ததும் பாம்புகள் வந்து குடியேறும்.
பழைய புற்று மிகப் பாதுகாப்பாகத்தான் தரையில் இருந்தது. ஒரே ஒரு எறும்பால் இங்கே இடம் பெயர்ந்துவிட்டோம். என் வாழ்நாளில் அப்படி ஓர் எறும்பைப் பார்த்ததேயில்லை. அந்த எறும்பு தன்னை ‘தைரா’ என்று அழைக்கும்படி சொன்னது. அது எங்கள் குழுவைச் சேர்ந்த எறும்பு அல்ல. எங்கள் குழுவில் உள்ள எறும்புகள் அனைத்தையும் எனக்குத் தெரியும், ஆனால் குழுக்களுள் சண்டை என்று எதுவுமே கிடையாது. கூட்டாக வாழ்வோம். தைரா ஒரு நாள் வழி தவறி எங்கள் குழுவில் இணைந்துகொண்டது. அது தேசாந்திரி எறும்புக் குழுவைச் சேர்ந்தது எனப் பின்னர் புரிந்துகொண்டோம். தேசாந்திரி என்றால் ஊர் சுற்றி என்று பொருள்.
அந்தக் குழு எறும்புகள் ஓர் இடத்தில் நிலையாக இருக்காதவை.
தைராவிற்குத் தன் உடலை வலுவாக வைத்துக் கொள்ளளுவதில்தான் அதிக ஆர்வம். எல்லோரும் எழும் முன்னர் எழுந்து உடற்பயிற்சி செய்யும். எங்கள் புற்றில் சிறிய உடற்பயிற்சிக் கூடத்தை அதுதான் ஏற்படுத்தியது. “இருக்கும் ஆறு கால்களையும் வலுவாக வைத்திருக்க வேண்டும்” என அடிக்கடி சொல்லும். சில இளம் எறும்புகள் அதனோடு இணைந்து காலையில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கின. உணவைத்தேடி ஒரு குழு முன்னே செல்லும். உணவைக் கண்டுபிடித்தால் ஒருவித சைகையை குழுவுக்குக் கொடுக்கும். தகவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். [நாங்கள் எப்படி தகவல் பரிமாறுகிறோம் என்பதை அபி தனியாக எழுதியிருக்கிறார். இந்தக் கதைக்கு அது தேவையில்லை என்பதால் நானும் விரிவாக எழுதவில்லை.] தகவல் கிடைத்தவுடன் வரிசையாகச் சென்று உணவைக் கைப்பற்றி வருவோம். அந்த உணவைப் பாதுகாப்பாகக் கிடங்கு அறைகளில் சேமித்து வைப்போம். புற்றில் பல நூறு கிடங்குகள் இருக்கும்.
தைரா எங்களது அன்றாடச் செயல்பாட்டில் பங்குகொண்டதே இல்லை. ராணி எறும்பு இரண்டு மூன்று முறை சத்தம் போட்டதும் ஓரிரண்டு நாட்கள் எங்களோடு வரும். திரும்பவும் பழைய கதை. எங்கே செல்கிறது என்ன செய்கிறது, என்ன சாப்பிடுகிறது என எதுவுமே தெரியாது. ஆனால், சுறுசுறுப்பாக எப்போதும் இருக்கும். ஒரு நாள் காலையில் தைராவின் முதுகின்மீது முப்பது எறும்புகள் ஏறிக்கொண்டன. அசராமல் அது நடந்து சென்றது எங்கள் எல்லோரையும் வியப்பில் மூழ்கடித்தது. எறும்புகளைச் சுமந்தபடியே அமர்ந்தும் எழுந்தது. கால்களை மடக்கி நீட்டியது. வழக்கமாக நாங்கள் எல்லோருமே எங்களைவிட 20 மடங்கு எடையைத் தூக்குவோம். தைரா சாதாரணமாக 40 மடங்கு எடையைத் தூக்கும் வலுவினைப் பெற்று இருந்தது. அதனுடைய விடா முயற்சியே அதற்கான முதன்மைக் காரணம்.
ஒரு நாள் எங்கள் ஒட்டுமொத்தப் புற்றுக் கூடாரமே அதிசயத்து நின்றது. அன்றைய தினம் எங்களுக்கு விடுமுறை. உணவு தேட யாரும் வெளியே செல்லவில்லை. ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தோம். அப்போது தன்னைவிட அய்ம்பது மடங்கு எடையுள்ள பெரிய பொருள் ஒன்றைத் தைரா தனியாளாகச் சுமந்து வந்தது. வழக்கமாக இவ்வளவு பெரிய பொருளைத் தூக்கிக்கொண்டு நடப்பது சிரமம். ஆடி அசைந்து தைரா அந்தப் பொருளைப் புற்றுக்குள்ளே கொண்டு வந்தது. எல்லோரும் அதனைச் சூழ ஆரம்பித்தோம்.
“என்ன இவ்வளவு பளபளப்பாக இருக்கு?”
“கண்ணாடித் துண்டா?”
“இவ்வளவு பெரிய சர்க்கரை கட்டியா?”
“இது கற்கண்டு”
“இதே போல லட்டுவில் பார்த்திருக்கின்றேன்”
“முனைகள் மிகக் கூர்மையாக இருக்கே”
“தைரா, நீ தனியாளாகவா தூக்கிட்டு வந்தாய்?”
“வேலை நாளில் வேலை செய்யாமல் விடுமுறை நாளில் வேலை செய்யறயேப்பா”
இப்படியாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்க, ராணி எறும்பு அந்தப் பொருளின் அருகே சென்று ஆராய்ச்சி செய்தது. எல்லாப் பக்கமும் சென்று பார்த்தது. முகர்ந்தும் பார்த்தது. சுவைத்தும் பார்த்தது. “தைரா, இது நீ நினைப்பது போல உணவுப்பொருள் அல்ல வைரக்கல்”
“என்னது வைரக்கல்”
“வைரகல்லா?”
“கல்லா வைரமா” என கூடாரமே ஆச்சரியத்தில் மூழ்கியது. “இல்லை இது பெரிய கற்கண்டு. நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்” என்றது தைரா. புற்றில் வசித்த வயதான எறும்புகள் நான்கு, மீண்டும் பரிசோதனை செய்தன. “இல்லை, இது கற்கண்டு இல்லை” என உறுதி அளித்தன. தைரா ஒரு பூட்டிய கிடங்கு அறையைக் காட்டியது. அது திறக்கப்பட்டது. இதே போன்று அங்கே ஏழு எட்டு வைரக்கற்கள் இருந்தன. “உங்களை எல்லாம் ஆச்சரியமூட்டலாம்னு நினைத்து யாருக்கும் தெரியாமல் சேமித்து வந்தேன்” என்றது தைரா.
தைராவோடு நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் யாதினி ஓடி வந்தது. பதற்றமாக இருந்தது. “நம்ம புற்றுக்கு ஆபத்து, உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும். தைரா இந்தக் கல்லினை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்போது நான் வெளியே எட்டிப் பார்த்தேன். வெளியே இருப்பது ஒரு வைர நகைக்கடை.
தைரா கற்கண்டு என நினைத்து தினமும் வைரக்கல்லை எடுத்து வந்திருக்கு. நகைக்கடைக்காரர்கள் யாரோ கடையில் வேலை செய்பவர்கள் திருடுகின்றார்கள் என போலீசு ஸ்டேசனுக்குப் போயி சொல்லியிருக்காங்க. போலீஸ் எல்லா இடத்திலும் நேற்று இரவு கேமரா வைத்திருக்காங்க. தைரா கல்லினை எடுத்து நகர்ந்து வந்ததை அந்தக் கேமரா பதிவு செய்துள்ளது. போலீஸ்காரங்க என்ன செய்வது என்று குழம்பிப்போயுள்ளனர். தைராவைக் கைது செய்யலாம் என்றால், மனிதர்கள் எப்படி எறும்பினைக் கைது செய்ய முடியும்? இன்னும் சில நிமிடங்களில் நம்ம புற்றைக் இடிக்கத் திட்டமிட்டுள்ளனர். நமக்கு இவை சாதாரண பளபளக்கும் கற்கள். ஆனால் மனிதர்கள் இதனை வேறு மாதிரி பார்க்கின்றார்கள். உடனடியாக எவ்வளவு பொருள்களை எடுக்க முடியுமோ எடுத்துக்கொண்டு இங்கிருந்து கிளம்புவோம்” என்று ஒரே மூச்சில் யாதினி பேசியது.கூடாரமே பரபரப்பானது.
ஏற்கனவே நாங்கள் இரண்டாம் இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். தைரா குண்டுக்கட்டாக பல எறும்புகளைத் தூக்கிச்சென்று காப்பாற்றியது. கிடங்கில் சேமித்த உணவுப்பொருட்களை முடிந்த அளவுக்கு அள்ளிக்கொண்டு சென்றோம். புற்று காலியானது. கடைசியாக யாதினியும் தைராவும் ஒரே ஒரு வைரக்கல்லினைச் சுமந்து வந்தனர்.
“சும்மா, ஒரு நினைவுக்காக” என்றனர். அந்த கலவரத்திலும் இப்படி ஒரு குதூகலம். அங்கிருந்து வெளியே வந்த நொடியில் மனிதர்கள் அந்தப் புற்றைக் கலைத்தனர். அவர்கள் தேடிய வைரக்கற்கள் அவர்களுக்குக் கிடைத்துவிட்டன – ஒரு கல்லைத் தவிர.
அது கற்கண்டு அல்ல, அது ஒரு வைரக்கல் என்று தைராவால் ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். எங்களுக்கு மறுநாளே விடை கிடைத்தது. எங்கள் மருத்துவ எறும்பு தைராவைப் பரிசோதித்துவிட்டு “நுகரும் தன்மையையும் சுவைக்கும் தன்மையும் போயிருக்கு. சில நாட்களில் திரும்ப வந்துவிடும். இதற்கு கொரோனா என்று மனிதர்கள் பெயரிட்டுள்ளனர். யாரும் பயப்பட வேண்டாம்” என்று சொன்னது.
புதிய புற்றிலும் உடற்பயிற்சிக் கூடாரம் அமைத்து இப்போதும் நாள்தோறும் எல்லோருக்கும் உடற்பயிற்சி தருகின்றது தைரா.<