துணுக்குச் சீட்டு – 19 : எறும்பு சாரை
“எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்க! எல்லாம் அமைதியாக எறும்பு சாரை சாரையாய்ப் போற மாதிரி, ஒரே வரிசையில் போகணும் புரியுதா?”
இத நம்மளோட உடற் கல்வி ஆசிரியர்கள் நமக்கு நிறைய தடவை சொல்லிருப்பாங்க அல்லவா? உடற்கல்வி ஆசிரியரா? அதாங்க நம்ம PET வாத்தியார்! எறும்புகள் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடர்போல சீராக ஒரே வரிசையில் போகின்றன? அதுங்களுக்கும் PET வாத்தியார் இருப்பாங்களோ?
PET வாத்தியார் இல்லை, ஆனால், நண்பர்கள் இருக்காங்க. நாம எப்படி நமக்குத் தெரிஞ்சவங்களப் பார்த்ததும், வணக்கம் சொல்லிப் பேச ஆரம்பிக்கிறோமோ, அதே போல எறும்புகளும் பேசும். ஆனால், வாய் வார்த்தையாக இல்ல, தொடுதல் மூலமாகவும் வாசனை மூலமாகவும் பேசும். அமைதியாக, இரண்டு எறும்புகள் நேருக்கு நேரும் நடந்து வந்துக்கிட்டு இருக்கும். திடீர்னு பார்த்தா, அதுங்க ரெண்டும் வந்து தலையை முட்டிக்கும், இல்லன்னா தொட்டுக்கும். கவனிச்சு இருக்கீங்களா? அந்தத் தொடுதல் மூலமாக, அது செய்தியைப் பரிமாறிக்கொள்ளும்.
வாசனை மூலமாக என்றால், அதனுடைய உடம்பிலிருந்து வரும் வாசனையா? இல்லை. எறும்புகளோட உடம்பிலிருந்து ஒரு வகையான வேதியியல் பொருள் வெளியே வரும். அந்த வேதியியல் திரவத்திலிருந்து வரும் வாசனை மூலமாகத் தான் எறும்புகள் செய்தியைப் பரிமாறிக் கொள்ளுகின்றன. இந்தத் திரவத்தை pheromone என்று சொல்லுவோம்.
TA என்று ஓர் எறும்பு இருக்குன்னு வச்சிக்குவோம். இந்த எறும்புக்கும், அதனுடைய நண்பர்களுக்கும், கொஞ்சம் பசிக்குது. அதனால நம்ம TA, உணவு தேடிப் போகுது. அப்படி போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு சின்ன வெல்லத் துண்டைக் கண்டுபிடித்துவிட்டது நம்ம TA. இப்போ, இதோட நண்பர்களுக்கும் உணவு பற்றிச் சொல்லி ஆகணும். அதனால என்ன பண்ணணும்னா, அந்த வெல்லத் துண்டுல கொஞ்சமா தூக்க முடிந்த அளவுக்கு எடுத்துக்கிட்டு, அந்த இடத்துல இருந்து, அதோட புற்று வரைக்கும் pheromone திரவத்தை வெளியேத்திக்கிட்டே வரும். இந்த pheromone -இல் இருந்து வரும் வாசனையை முகர்ந்துக்கிட்டே, அதோட நண்பர்கள் எல்லாம், வெல்லத்துண்டு இருக்கும் இடத்துக்குப் போய்ச் சேரும். அங்க இருந்து மறுபடியும் வெல்லத்தை எடுத்துக்கொண்டு, மற்ற எறும்புகளுக்காக, இந்த நண்பர்கள் எல்லாம், மீண்டும் pheromone – திரவத்தை வெளியேத்தி, ஒரு தடத்தை அமைச்சிக்கிட்டு வரும். இப்படி ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடம் வரைக்கும் இருக்கிற அந்தத் திரவத்தை முகர்ந்து கொண்டே ஒரு தடத்தில் போறதால தான் எறும்புகள் ஒரே வரிசையில் போகின்றன.
எறும்பின் உடம்பில் இருந்து வெளியேறும் வேதியியல் பொருளில் பல வகைகள் இருக்கு. அதை எல்லாம் நாம pheromone என்று சொல்றோம். இப்படி வெளியேறும் வேதியியல் பொருளில் ஃபார்மிக் அமிலம் (Formic acid) இருந்தால், அந்தத் தடத்தோட முடிவில் ஏதோ ஓர் ஆபத்து இருக்கு என்று அர்த்தம். இதே pyrazine ஆக இருந்தால், உணவு இருக்கு என்று அர்த்தம்.
தரையிலோ அல்லது சுவரிலோ எறும்புகள் உணவுத் தேடிப் போற வழியில நிறைய தடங்கள் இருக்கும். இதுல எந்தத் தடத்தை எறும்புகள் பயன்படுத்தும்? இந்த எறும்புகள், அதுக்கும் பதில் வச்சி இருக்கு. எறும்புகள் உடம்பிலிருந்து வெளியேறும் pheromone இல் இருந்து வரும் வாசனை, நேரம் ஆக ஆக குறைய ஆரம்பிக்கும். அதேபோல், தண்ணீர் பட்டுச்சுன்னாலும், அதோட வாசனை குறையும். அண்மையில் வெளியேறின pheromone- இல் இருந்து வாசனை அதிகமாக வரும். அப்படி, எந்தத் தடத்தில் இருந்து அதிக வாசனை வருதோ, அதில் தான், எறும்புகள் ஊர்ந்து செல்லும்.
இப்படி உணவு தேடி ரொம்ப தூரம் நடக்கிற எறும்புகள் எல்லாம் ஒரு பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்?
“வாங்க நண்பர்களே!
எல்லாரும் ஒன்றாய்ப் போகலாம்!
முயற்சி திருவினையாக்கும்;
முயன்றால் சாதிக்க முடியும்!.
நாம எங்க போறோம்?
உணவைத் தேடிப் போகிறோம்!
எதன் உதவியோட?
pheromone உதவியோட!
நாம எங்க போறோம்?
உணவைத் தேடிப் போறோம்!
(டோரா பாட்டே தான்! டோரா தெரியும் தானே?)