இப்ப நான் என்ன சொல்றது? மறுபடியும் புதிதாய்ப் பிறந்தேன்!
கடவுள் இல்லை என்று முழுமையாக உணர்ந்த பின்னர் அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அதுவொரு அருமையான அனுபவம்!
அங்குதான் அந்த முரட்டுச் சம்பவம் நடைபெற்றது.
அப்போது எனக்கு வயது 17.
தொடக்கத்தில் நானும் கடவுளை வணங்கியிருக்கிறேன். பின்னர் எனது சிந்தனை, செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அம்மா புரிந்துகொண்டு, “இங்கேயே உட்கார்ந்திரு சாமி” என்று சொல்லிவிட்டு, கோயில் பிரகாரத்தைச் சுற்றிவரச் சென்றுவிடுவார். நான் அம்மாவின் பார்வையில் படுமாறு ஏதாவது ஒரு படிக்கட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
மாரியம்மன், விநாயகர், நவக்கிரகங்கள், சுற்றுப்பிரகாரத்தில் மூளியாகிப் போன கடவுள்களென ஒன்றுவிடாமல் அம்மா வேண்டிக் கொண்டு வருவார். அதற்குள் என் வயிறு, தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.
அம்மா வந்ததும், முந்தானையை இழுத்துச் செருகிக்கொண்டு நான் அமர்ந்திருக்கும் படியிலேயே அமர்ந்து கொள்வார். முதலில் பிரசாதத்தை இலையுடன் அப்படியே என்னிடம் கொடுத்துவிடுவார். நான் ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, கோயில் படியிலேயே அரை மூடித் தேங்காயை உடைத்து சின்னச் சின்னச் சில்லுகளாக மாற்றி, இடைவெளி இல்லாமல் தின்னக் கொடுப்பார். அப்போது அம்மா முகத்தில் விவரிக்க முடியாத ஒரு பரவச உணர்வு படர்ந்திருக்கும்.
அதுவரை இதுதான் வழக்கம்!
அன்றோ? அம்மா உள்ளே சென்றிருக்க, நான் படியில் உட்காராமல் கோயில் கருவறைக்கு வெளியில் இருக்கும் பகுதியிலுள்ள தூண்கள் ஒன்றில் சாய்ந்து நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது…
கோயில் வாசலில் இலேசான சலசலப்பு ஏற்படவே, இயல்பாகப் பார்த்தேன். நான்கு சக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. ஓட்டுநர் வேகமாக இறங்கிச் சென்று பின் பக்கக் கதவைத் திறக்க, அவர் இறங்கினார். வாசலில் இலேசான பரபரப்பு ஏற்பட்டிருந்தது. யாரோ முக்கியமான மனிதர் வருகிறார் போல என்று எண்ணிக் கொண்டு, நானும் அவரைப் பார்க்க முயன்றேன். அதற்குள் அங்கு ஏற்பட்டிருந்த திடீர் நெரிசலால் எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அவரது குரல் மட்டும் தனித்துக் கேட்டது.
நேரம் கடந்துகொண்டிருந்தது…
நான் நவக்கிரகக் கோயில் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பக்கமிருந்து தான் அம்மா வரவேண்டும். எனக்குப் பின்புறமாக, யாரோ சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு குரல் மட்டும் எனது கவனத்தை ஈர்க்கவே, தலையை மட்டும் திருப்பிப் பார்த்தேன்.
அட…!
திடீர் நெரிசலால் எந்த முக்கியப் பிரமுகரைப் பார்க்க முடியாமல் போனதோ, அவர் எனக்கு மிக நெருக்கத்தில் நின்று, கோயில் அர்ச்சகருடன் பேசிக் கொண்டிருந்தார். வரவிருக்கும் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றியதாக அவர்களின் பேச்சு இருந்தது. அவர்களைச் சுற்றி சிலர் இருந்தனர்.
அதில் எனக்கேதும் தொடர்போ ஆர்வமோ இல்லாததால், முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
“கோயிலில் வச்சு ‘தேர்த் திருவிழா’ வைப் பற்றிப் பேச்சு தொடங்கியிருக்கு. நல்ல சகுனம்தான்”
– இது அர்ச்சகரின் குரல்.
“ம்.. போன வருசம் மாதிரி துர்சகுனம் நடக்காமப் பார்த்துக்கணும்” – இது பெரிய மனிதரின் குரல்.
“கவலைப்படாதீரும், இருக்கவே இருக்கு பரிகாரம்”
“பரிகாரம் செஞ்ச பிறகுதானே நடந்துச்சு”
“இருக்கட்டும், நீர் ஏன் ஓய் ஒருமாதிரியா இருக்கீர்? மேலுக்கு ஏதாவது?”
“மனசுதாங்க சரியில்ல. அதான், கோயிலுக்கு வந்து உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்”
“வாங்கோளேன். உம்ம பேருக்கு ஒரு அர்ச்சனை செஞ்சுடலாம்”
“வேண்டாங்க. கோயிலுக்கு வந்ததுமே அந்த மனநிறைவு வந்துடுச்சு”
“இல்லையா பின்னே?”
“அந்த மாதிரி இடத்தில் நீங்க இருக்கீங்க பாருங்க. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுங்க”
“அப்படியா சொல்றேள்?”
“இல்லையா பின்னே? ஊரு, உலகமுன்னு சுத்தி வந்தாலும் கோயிலுக்குன்னு வந்துட்டா கிடைக்கிற அந்த மனநிறைவு இருக்கே! அடடா…”
“ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்.”
அர்ச்சகரின் குரல் கேட்கவில்லை. சற்றே வியப்புடன் காத்திருந்தேன்.
“தவறா ஏதாவது சொல்லிட்டேனா சாமி?”
“நீர் சரியாத்தான் சொன்னீர். நான்தான் கொஞ்சம் தடுமாறிட்டேன்”
“இதிலென்னங்க தடுமாற்றம்?”
“ம்… வீட்டுக்கு வீடு வாசல்படிதான், விடுங்க”
அர்ச்சகர் பதிலில் ஏதோ உள்ளார்ந்த பொருள் பொதிந்திருந்தது. ஆனால் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறார் அர்ச்சகர்? அடுத்த குரலுக்காகக் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.
“அது சரிங்க… வீட்டுக்குத்தானே அது? கோயிலுக்கு எப்படிங்க?”
ஏனோ இந்தக் கேள்விக்குப் பிறகு அர்ச்சகரின் பதில் குரலாக என்ன வரப்போகிறது என்று பெரும் ஆவலுடன் காத்திருந்தேன்.
ஆனால், அர்ச்சகர் மெலிதாகச் சிரிக்கும் ஓலி மட்டும் கேட்டது.
எனக்குள் இலேசான பரபரப்பு தொற்றிக் கொண்டது. அர்ச்சகர் பதில் சொல்வதைத் தவிர்க்கிறாரோ என்று தோன்றியது.
“எதுக்கு சாமி சிரிக்கிறீங்க?”
“சரி… சொல்லிட வேண்டியதுதான். உமக்குத் தாம் ஓய் இது கோயில்… கடவுள்… எமக்கு இது வெறும் சத்திரங்காணும்!”
எனக்குத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது…
என்னது? கோயில் என்பது சத்திரமா? என்ன சொல்கிறார் இந்த அர்ச்சகர்?
சத்திரமென்றால் தங்கும் இடம் தானே?
அப்படியென்றால்…?
அர்ச்சகருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?
அவரும் ஒரு நாத்திகரா?
இதென்ன கூத்தாக இருக்கிறது?
எப்படியோ அம்மாவுடன் ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன். ஆனால், கோயிலில் கேட்ட உரையாடல்களால் உண்டான எண்ண அலைகள், ஓயாமல் மனதுக்குள் அடித்துக்கொண்டே… இருந்தன.
கோயில் அர்ச்சகர் ஒரு நாத்திகரா?
‘அடடே…! நாம் தனியாள் கிடையாது போலிருக்கிறதே!’
என்ற எண்ணம் தோன்றியவுடன் அன்று, மறுபடியும் புதிதாய்ப் பிறந்தேன்! புத்துணர்வால் மலர்ந்து போனேன்!
அதன் பிறகு, எனது போக்கே மாறிவிட்டது.
அந்த மாற்றம் என்னை என்னென்னவோ செய்துவிட்டது!
எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது!
ஒருவழியாக நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என்பதை, முதன்முதலில் முக்கியமான ஒருவர் முன்னிலையில் செயலிலும் காட்டிவிட்டேன்.
எங்கே? எப்போது? யாரிடம்?
(அடுத்த இதழில்…)