அடேயப்பா…! – 5 : காரா கோட்டோ
காரா கோட்டோ என்பது சீனாவின் உள் மங்கோலியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று நகரமாகும். இது பட்டுப்பாதையில் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. பண்டைய காலங்களில் முக்கிய வர்த்தக மற்றும் கலாச்சார மய்யமாகவும் இருந்தது. காரா கோட்டோ டாங் வம்சத்தின் (618-907 கி.பி) காலத்தில் நிறுவப்பட்டது. மேற்கு சியா வம்சத்தின் (1038 – 1227 கி.பி) ஆட்சியின்போது அதன் உச்சத்தை அடைந்தது. நகரம் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்டது. கோவில்களும், குடியிருப்புப் பகுதிகளும் நிருவாகக் கட்டடங்களுடன் ஒரு சிக்கலான உள் அமைப்பைக் கொண்டிருந்தது.
13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், காரா கோட்டோ செங்கிஸ்கானின் கீழ் மங்கோலியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. நகரம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டு, இடிபாடுகளில் சிக்கிச் சரிந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், காரா கோட்டோவின் இடிபாடுகளில் ஏராளமான மதிப்புமிக்க கலைப்பொருட்களும் கையெழுத்துப் பிரதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன, இது அந்தப் பகுதியின் வரலாறு, கலாச்சாரம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.
இன்று, காரா கோட்டோவின் இடிபாடுகள் ஒரு பிரபலமான தொல்பொருள் தலமாகும். பட்டுப்பாதையின் பண்டைய வரலாற்றையும் இப்பகுதியில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நாகரிகங்களையும் ஆராய்வதில் ஆர்வமுள்ள பார்வையாளர்களை இன்றும் ஈர்க்கிறது காரா கோட்டோ.
(இன்னும் ஏராளம் இருக்கு)