சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்
மரங்கள் வளர்ப்போம் தோப்பாகும் – நமக்கு
மழையும் கனிகளும் வரவாகும்!
இரவும் பகலும் காற்று வரும் – காற்றில்
இனிய மணமும் கலந்துவரும்!
மாமரம் வைத்தால் மாந்தோப்பு – உண்ண
மாம்பழம் நிறையக் கிடைத்திடுமே!
நாமும் இனிதாய்ச் சுவைத்திடலாம் – அன்பாய்
நல்லோர் மகிழக் கொடுத்திடலாம்!
புளிய மரங்கள் வைத்தாலோ – அதை
புளியந் தோப்பு எனவுரைப்பார்!
புளியும் சமைக்க உதவிடுமே – மரமும்
புகையிலா விறகாய்ப் பயன்படுமே!
தென்னை வைத்தால் தோப்பாகும் – நல்ல
தேங்காய் இளநீர் பெற்றிடலாம்!
நன்றி மிக்க தென்னைமரம் – தலையால்
நமக்கு ஓலைக் கீற்றுதரும்!
தோப்பில் மரங்கள் வளர்ப்பதனால் – நமக்கும்
துயரம் இல்லை இன்பந்தான்!
தோப்பை வளமாய்க் காத்திட்டால் – நமது
தலைமுறை சிறந்து விளங்கிடுமே!<
– ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை