படிச்சுட்டு நகருங்க…அந்த எட்டு பேருமே சாதனையாளர்கள் தான்!
எப்போதும் ஒலிம்பிக் போட்டியில் விறு விறுப்பாக கவனத்தைக் கவரும் விளையாட்டு என்றால் அது தடகளப்போட்டி தான். அதிலும் குறிப்பாக 100மீ ஓட்டப் பந்தயம் தான். அதைப் 10 நொடிகளுக்குள் கடப்பது பெரும் சாதனை!
ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற (05.08.2024) ஒலிம்பிக் 100மீ ஆண்கள் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் ஓடிய 8 பேருமே 10 நொடிகளுக்குள்ளேயே ஓடி வந்துவிட்டனர். முதலிடம் பெற்றவரும் இரண்டாம் இடம் பெற்றவரும் 9.79 நொடிகளில் 100மீ தொலைவைக் கடந்து விட்டனர். அதை இன்னும் நுணுகிப் பார்த்த பின்னர் தான் முதலிரண்டு இடங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. 9.789 நொடிகளில் ஓடிய ஜமைக்காவின் தாம்சனை விட, 9.784 நொடிகளில் ஓடிய லைன்ஸ் நோவா முதலிடம் பெற்றார். அதாவது 0.005 நொடிகள் முன்னர் மட்டுமே இலக்கை அடைந்துள்ளார்.
இங்கே உள்ள படத்தைப் பாருங்கள். தொடங்கியது முதல் இறுதி வரை அவர்கள் கடந்து வந்த பாதையை பல கட்டங்களில் Freeze செய்திருக்கிறார்கள். கடைசியாக வந்த ஜமைக்காவின் ஒப்லிக் செவில் என்பவர் 9.91 நொடிகளில் 100மீட்டர் தொலைவைக் கடந்துவிட்டார். அதாவது முதலிடத்துக்கும் இருவருக்குமான இடைவெளி வெறும் 0.12 நொடிகள் தான் (12 நொடிகள் அல்ல; ஒரு நொடியில் நூற்றில் 12 பங்கு அளவு மட்டுமே!) இவரைத் தோல்வியடைந்தவர் என்று சொல்ல முடியுமா?
முதல் முறை 100 மீட்டரை 10 நொடிகளுக்குள் கடந்தவர் ஜிம் ஹைன்ஸ் இது நடந்தது 1968 ஆம் ஆண்டு! அவர்தான் அந்த ஆண்டு தங்கப் பதக்கம் பெற்றவர். அவர் எடுத்துக் கொண்ட நேரம் 9.95 நொடிகள். இப்போதைய கடைசி நபரான ஒப்லிக்கை விட 0.04 நொடிகள் அதிகம். ஜிம் ஹைன்சையும், ஒப் லிக்கையும் ஒப்பிட்டால் 2024ன் ஒப்லிக் தான் சாதனையாளர். இப்போது யோசித்துப் பாருங்கள்! வெற்றி என்று சொல்லப்படுவதற்கும், தோல்வி என்று சொல்லப்படுவதற்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான்! வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி வாழ்வதும், பங்கேற்பதும் தான் முக்கியம்! அந்த எட்டு பேருமே சாதனையாளர்கள் தான்!.