அறிவின் விரிவு – 2 : A1 டாக்டர்
செயற்கை நுண்ணறிவு இன்றைய மருத்துவத் துறையில் பல சாதனைகள் புரிந்து வருகிறது. நாளை நீங்கள் மருத்துவர் ஆகும்போது உங்களின் உற்ற நண்பனாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்பது மகிழ்ச்சி.
சில நாட்களுக்கு முன் வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி
அறிவியலுக்கும் மனிதனுக்கும் மிகப் பெரும் அறைகூவலாக இருப்பது புற்றுநோய். இன்று எவ்வளவு மருத்துவ அறிவியல் வளர்ந்திருந்தாலும் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அகற்றுவதில் நமக்குப் பல சிக்கல்கள் உள்ளன. எவ்வளவு சீக்கிரம் புற்றுநோயைக் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு அந்த மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரிக்க முடியும்.
புற்றுநோய்த் துறையில் அண்மைக்காலச் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரும் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் வந்த மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இன்றைய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மிக ஆரம்ப காலத்திலேயே மார்பகப் புற்று நோயைக் கண்டுபிடித்து விடுகிறதாம். இதை பல ஆய்வுகளின் மூலம் எட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் புற்றுநோய்க்கான செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், இன்னொரு பக்கம் மனிதனின் ஆயுளை நீட்டிப்பதற்கான ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
புற்றுநோயைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு எந்த வகையில் பயன்படலாம் என நீங்கள் கேட்கலாம்?
ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பல்வேறு தகவல்களை உள்ளீடாகப் பெறும். உதாரணத்திற்கு, புற்றுநோய் வந்தவர்களின் ஆரம்ப கால மருத்துவ அறிக்கைகள், பரிசோதனை முடிவுகள் என பல்வேறு தகவல்களை உள்ளீடாகப் பெற்று அந்தத் தகவல்களில் இருந்து பலவிதமான மாதிரிகளை உருவாக்கிக் கொடுக்கும். அதற்குப் பிறகு அந்த மாதிரிகளை மருத்துவர்கள் சரி பார்ப்பார்கள்.
மருத்துவர்கள் கொடுக்கும் சரி அல்லது தவறுகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மேலும் பல தகவல்களைக் கற்கும். கற்றபின் மீண்டும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். புதிய மாதிரிகளை மீண்டும் சரிபார்க்கும். மருத்துவர்கள் கொடுக்கும் சரி – தவறு மதிப்புகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கற்றுக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில் இங்கு புற்றுநோய்க்கான மருத்துவ ‘ஸ்கேன்’ அறிக்கைகளைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்குக் கொடுப்பார்கள். ஏற்கனவே மருத்துவர்கள் ‘ஸ்கேன்’ அறிக்கைகளில் உள்ள புற்றுநோய் உருவான இடங்களைக் குறித்து வைத்திருப்பார்கள். புற்றுநோய் இல்லாத சாதாரண மனிதனின் ‘ஸ்கேன்’ படமும், மருத்துவர்களால் குறிக்கப்பட்ட புற்றுநோய் உள்ள மனிதர்களின் ‘ஸ்கேன்’ படமும் செயற்கை நுண்ணறிவுக்கு உள்ளீடாகக் கொடுக்கப்படும்.
இந்த உள்ளீடுகளில் இருந்து அவை எது புற்றுநோய்க் கட்டி எனக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளும். அப்படியாக பல ஆயிரம் ஸ்கேன் படங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதன் விளைவாகவும் அதனுடன் சேர்த்து அந்தப் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களின் மருத்துவ அறிக்கைகளில் உள்ள தகவல்களின் உதவியுடனும் இன்றைய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் புற்றுநோய்க் கட்டிகளை மிக ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. நாம் ஒரு தேர்ந்த செயற்கை நுண்ணறிவு புற்றுநோய் மருத்துவரை உருவாக்கியுள்ளோம் என்பது மனித குலத்தின் மிகப்பெரும் சாதனை அல்லவா?
(விரியும்)