கதை கேளு… கதை கேளு…பூனைப் பள்ளிக்கு வந்த புலி நண்பர்
லூசி மிகவும் தாமதமாக எழுந்தது. பள்ளிக்கு நேரமாகிவிட்டது. இன்று ஆசிரியர் கீகாவின் வகுப்பு. பூனைகளின் பள்ளியில் மிகவும் கறாரான ஆசிரியர் கீகா. வகுப்புக்குத் தாமதமானீகச் சென்றால் அனுமதிக்கமாட்டார். பூனைகளின் பள்ளி மொத்தமே நான்கு ஆண்டுகள்தான். நான்கு வகுப்பறைகள் மட்டுமே எல்லாப் பள்ளிகளிலும் இருக்கும். லூசி படிக்கும் பள்ளியிலும் அப்படியே நான்கு வகுப்பறைகள். மூன்றாம் நிலையில் லூசி படித்தது.
நேற்று இரவு லூசியும் அதன் நண்பர்களும் நகர் உலாவிற்குச் சென்றனர். வெள்ளை நிற வீட்டில் பால் குடித்தனர். லூசிக்கு மிகவும் கிறக்கமாக இருந்தது. காலையில் பல் துலக்கியது. துவைத்து வைத்திருந்த ஆடைகளைப் போட்டுக்கொண்டு கடகடவெனக் கிளம்பியது. பள்ளிக்குச் செல்லும் சாலையில் யாருமே இல்லை. புத்தகப்பை மிகவும் பாரமாக இருந்தது. அதை முதுகில் மாட்டாமல் தரையில் தரதரவென இழுத்துச்சென்றது லூசி.
“லூசி, என்ன இவ்ளோ தாமதம்?” வேப்ப மரத்திலிருந்து வயதான பூனை வசந்தா விசாரித்தது. லூசி பதில் சொல்லாமல் வேகமாகப் பள்ளியை நோக்கிச் சென்றது. எதிர்பார்த்தது போலவே ஆசிரியர் கீகா வகுப்பறைக்குள் விடவில்லை. வெளியே அமர்ந்து வகுப்பைக் கவனித்தது. “தண்ணீரில் நீந்தும் மீனை எப்படிப் பிடிப்பது” என்ற பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார் கீகா. வகுப்பறை வாசலில் அமர்ந்து கவனித்தது லூசி. வகுப்பறையை நோட்டம் விட்டது. நேற்று இரவு நகர உலாவிற்கு வந்த கிட்டி, ரோபி, படாடா என எல்லோரும் தூங்கி வழிந்தனர். லூசியைப் பார்ப்பதைத் தவிர்த்தனர். அப்போதுதான் லூசி அந்தக் காட்சியைப் பார்த்தது.
“கீகா…” என்று கத்தியது.
“லூசி, நீ என்ன கத்தினாலும் உன்னை வகுப்பில் சேர்க்க மாட்டேன்” என்றது ஆசிரியர் கீகா.
“அங்க… அங்க…”
லூசியை யாருமே கவனிக்கவில்லை.
லூசி பயந்தது கடைசி வரிசையில் இருந்த புலியைப் பார்த்துதான். ஆமாம், வகுப்பறையின் கடைசி வரிசையில் பூனைகளுடன் ஒரு புலியும் அமர்ந்து இருந்தது. அது புலிதான் என்பதை உறுதி செய்தது. லூசி கவனித்ததைப் புலியும் பார்த்துவிட்டது. இடது காலை உயர்த்தி உதட்டின்மீது வைத்து “உஷ்ஷ்…” என்று காட்டியது. லூசிக்கு உதறல் எடுத்துவிட்டது. புலியும் பூனை இனத்தைச் சேர்ந்தது என்றாலும் ஒரு பயம்தான்.
முன்பு ஒரு நாள் லூசியும் அதன் நண்பர்களும் யாருக்கும் தெரியாமல் அருகே இருக்கும் காட்டுக்குச் சென்றார்கள். அதுவும் இரவில் சென்றார்கள். ஒரு மரத்தின்மீது ஏறி அங்கே யாராவது வருகின்றார்களா எனப் பார்த்தார்கள். பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு ஆர்வம். அப்போதுதான் முதல்முறையாகப் புலியைப் பார்க்கின்றார்கள். ஒரு புதரில் இருந்து பெரிய உருவம் வெளியே வந்தது. நீண்ட வால். அதன் கண்களில் அவ்வளவு ஒளி. நிலாவின் வெளிச்சத்தில் பார்க்கவே அருமையாக இருந்தது. “புலியைக் கூப்பிட்டு ஹலோ சொல்வோமா?” என்றது கிட்டி. “அடேய், கம்முன்னு இருடா!” என்றன. மற்றவை அனைத்தும். விடியற்காலையில் மரத்திலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்தன.
ஆனால், வகுப்பறையில் இருந்த புலி அவ்வளவு பெரியதாக இல்லை. புலிக்குட்டிதான். பூனையின் முகம்போலவே இருந்தது. லூசிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. திரும்பவும் ஆசிரியர் கீகாவைப் பார்த்து,
“மியாவ்” என்றது.
“என்ன வெறும் காத்துதான் வருதா?” என்றது கீகா.
கடைசி வரிசையைக் காட்டி “பு..பு” என்றது.
“என்ன புபு. பூபுன்னு நம்ம வகுப்பில் யாருமில்லையே; அது விழியன் மகன் பேரு”
“கீகா, கடைசி வரிசையில் புலி…” என்றதுதான் தாமதம். மியாவ் மியாவ் மியாவ் எனக் கத்திக்கொண்டே எல்லாப் பூனைகளும் ஆசிரியரின் பின்னால் தஞ்சம் புகுந்தனர். ஒரு பக்கம் புலிக்குட்டி, மற்ற பக்கம் மொத்த வகுப்பறை.
கலங்காத கீகா, “என்ன புலிக்குட்டி, ஏன் இங்க வந்தாய்? நீ காட்டில்தானே இருக்கணும்”
புலிக்குட்டி தன் கதையைச் சொன்னது. “வழி தெரியாமல் காட்டிலிருந்து நாட்டுக்கு வந்துவிட்டேன். பூனைப் பள்ளி என்று எழுதி இருக்கவே பயமின்றி உள்ளே வந்துவிட்டேன். இந்த வகுப்பறையில் நேற்று இரவே வந்து உறங்கிவிட்டேன். இன்றைய பாடம் எப்படி மீன்களைப் பிடிப்பது என்பதால் அமைதியாக கடைசி வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குப் பள்ளிகள் இல்லை. வகுப்பறை இல்லை” என்று வருத்தப்பட்டது.
“ஒரு பொழுது எங்களோடு தங்கியிரு; இரவில் உன்னைப் பத்திரமாகக் காட்டில் விடுகின்றோம்” என்று உறுதி அளித்தது ஆசிரியர் கீகா. புலிக்குட்டி மீன்களைப் பிடிக்கக் கற்றுக்கொண்டது. மதிய இடைவேளையின்போது பூனைகளுடன் உணவு உண்டது. புலிக்குட்டியின் உடலில் இருந்த கோடுகளை அடிக்கடி தொட்டுப் பார்த்தது லூசி. கரியைக் கொண்டு அதுபோலவே தனக்கும் வரையச் சொன்னது. பூனைகளுடன் புலிக்குட்டியும் மைதானத்தில் விளையாடியது. திடீரெனப் புலிக்குட்டியைப் பார்த்துக் கிட்டி கேட்டது, “புலிக்குட்டியே, உன் பெயர் என்ன?”
“லூசி”
பூனைக்குட்டி லூசிக்குத் தலைகால் புரியவில்லை. “உன் பெயரும் லூசியா!” எனப் பெருமையாகக் கேட்டது. புலிக்குட்டி நடப்பது போல நடந்தது.
இருட்டியது. எல்லாப் பூனைக்குட்டிகளும் பள்ளியிலேயே இருந்தன. கீகா தலைமையில் ஒரு குழுவாகக் காட்டை நோக்கி நடந்தனர். லூசி புலிக்குட்டியை நடுவில் விட்டனர். வழியில் தென்பட்டவர்களிடம் எல்லாம் கீகா விளக்கியது – “பசங்களுக்கு இரவு வானத்தைக் காட்ட வெட்டவெளிக்கு அழைத்துச் செல்கின்றேன்” என்று. புலிக்குட்டி இருக்கின்றது எனத் தெரிந்தால் ஊரார் சர்க்கஸ் கம்பெனிக்குப் பிடித்துக் கொடுத்திடுவார்கள்; அல்லது வனவிலங்குச் சரணாலயத்தில் போட்டுவிடுவார்கள். அதற்குப் பெயர் வைப்பதிலிருந்து சிக்கல் துவங்கிவிடும். எதற்கு நமக்கு அந்தச் சிக்கல் என்றுதான் கீகா பாதுகாப்பாக அதைக் காட்டில்விட எண்ணியது.
காட்டின் எல்லையை அடைந்தனர். வேகம் குறைந்தது. பூனைகளுக்குக் காடு என்றாலே பயம்தான். பயந்தது போலவே திடீரென அவர்கள் எதிரே பெரிய புலி ஒன்று பாய்ந்து வந்தது. எல்லாப் பூனைகளும் உறைந்துவிட்டன. “அப்பா…” எனத் துள்ளிக் குதித்து லூசி ஓடியது. பெரிய புலி லூசியைக் கண்டதும் நெகிழ்வில் கண்ணீர் விட்டது. காணாமல் போய்விட்டதால் பகல் முழுக்க அலைந்து திரிந்துள்ளது. முழுக் கதையையும் ஆசிரியர் கீகா விளக்கியது. பெரிய புலி அனைவருக்கும் நன்றி சொன்னது.
கூட்டத்திலிருந்து ஒரு குரல்,
“நான் உங்க மீது குதித்து விளையாடலாமா?” என்று வந்தது. நம்ம லூசி பூனைக்குட்டிதான்.
“அப்பா, அதோட பேரும் லூசி தான்” என்று புலிக்குட்டி லூசி கூறியது.
“வாங்க எல்லோருமே வரலாம்” என்றது புலி அமர்ந்தபடி!
லூசி ஆரம்பித்து வைக்க எல்லோரும் புலி மீது குதித்து விளையாடினார்கள். ஆசிரியர் கீகா தனுது குறிப்பேட்டில் எழுதினார் – “நாளைய பாடம், புலியைக் கண்டால் எப்படி நடந்துகொள்ளவேண்டும்” என்று!
(குறிப்பு: உலகிலேயே 39 வயது வரை நெடுநாள் வாழ்ந்த பூனையின் பெயர்தான் லூசி!).