இப்ப நான் என்ன சொல்றது?எங்கள் ஊரில் முதல் கடவுள் மறுப்பாளன்!
எங்கள் ஊரில் நான்தான் முதல் கடவுள் மறுப்பாளன்! என்னைப் போல் வேறு சிலரும் இருந்திருந்தால் இது இயல்பான ஒன்றாகத்தான் எனக்கு இருந்திருக்கும்.
இல்லாததால் நான் பட்ட பாடு இருக்கிறதே…
அப்பப்பா…
யாரிடமிருந்து என்கிறீர்களா?
என்னிடமிருந்துதான்!
அட… அப்படியென்ன தான் நடந்தது?
என்னால் சும்மா இருக்க முடியவில்லை! ‘கடவுள் இல்லை’ என்பது பற்றி யாரிடமாவது பேசச் சொன்னது; விவாதிக்க வைத்தது; விவாதத்தில் வார்த்தைகள் சில சமயம் தடித்தன; அதனால் வம்பு, வழக்கு எதுவும் வந்து, தகவல் அப்பா வரை சென்றுவிடுமோ என்று கவலை கொள்ள வைத்தது; இருந்தாலும் கவலைப்படாமல் மறுபடியும் தொடரச் செய்தது!
ஏன் கேட்கிறீர்கள்? அதுவொரு சுகமான அனுபவம்!
அந்தக் காலகட்டத்தில்தான் நான் அரசு நூலகத்தில் உறுப்பினர் ஆனேன்! அங்கே அம்புலிமாமா, படக்கதைகள் என்று பயணம் செய்து, பின்னர் மெதுவாக உரைநடைக் கதைகளுக்கு வந்துவிட்டேன்.
ஒருநாள் ஒரு புத்தகம்… பெயர் நினைவில் இல்லை. “நீ தனி ஆள் இல்லை, உன்னைப்போல் பலரும் உலகெங்கிலும் இருக்கின்றனர். கவலைப் படாதே” என்று என்னை உற்சாக அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
அங்கேயே எனக்குச் சிறகுகள் முளைத்தன! பறந்தேன்!
அதன் பிறகு எனது போக்கு இன்னமும் பெரும் போக்காகிவிட்டது. இதில் பெரும்பாலும் என்னிடம் சிக்கிக்கொண்டது எனது பெரிய தங்கை தான்! “கடவுள் உன் கண்ணக் குத்தப்போறாரு” என்பதுதான் அவள் எப்போதும் எனக்குச் சொல்லும் பதில்.
1985 ஆம் ஆண்டில் நான் 12 ஆம் வகுப்பில் தேறி, முதலாமாண்டு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு வயது 18.
ஊரில் முதன்முதலாக நான் கல்லூரிக்குச் சென்றுவிடுவேன் என்று நம்பியிருந்த எனது தாய்மாமா, முன்னதாகவே எனக்கொரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்.
சைக்கிளில் கல்லூரிக்குப் போக வர 6 கி.மீ. தூரமாக இருந்த பயணம், நாளடைவில் போக வர 42 கி.மீ. இருக்கும் திருமூர்த்தி மலைக்கு அடிக்கடி செல்லும் புதுப் பழக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டது.
கடவுள் மறுப்பாளன்! சைக்கிளோட்டி! இயற்கையின் ரசிகன்! வாசிப்பாளன்! என்று எனது அறிவு விரிவடைந்துகொண்டே இருந்தது. இந்தச் சூழலில்தான் முதல் சிறுகதையை எழுதி முடித்தேன். “இதோ! இன்னுமொரு தலைவர்” என்பது அதன் தலைப்பு. முதல் வாசகர் எனது அண்ணன்தான்! இதன்பிறகு கடவுள் மறுப்புக் கருத்துகள் முன்னிலும் வேகமெடுத்தன.
ஒருநாள்… தவிர்க்க இயலாமல் பேச்சு, செயலாக வடிவம் எடுத்துவிட்டது!
என்னுடைய தாய் மாமா ஒரு கோயிலில் பூசாரி. அவர் இல்லாத நேரத்தில் எனது அப்பாதான் அந்தக் கோயிலில் பூசை செய்வார். அப்படிப்பட்ட பக்தர் அவர், வீட்டில் கடவுளை வணங்குவதே அலாதியான காட்சிதான்.
அவரோ விஷ்ணு பக்தர்; ஆனாலும் எல்லாக் கடவுள்களையும் சேர்த்துக் கொள்வார்; வீட்டினுள் முதலில் விளக்கு மாடத்தில் தீபம் ஏற்றுவார்; பிறகு ஒரு தட்டில் திருநீறும், குங்குமமும் கொட்டி, அதன் நடுவில் சூடம் ஏற்றி, விளக்கு மாடத்தை மய்யப்படுத்தி, வலது கையை இடது கையால் தாங்கியபடி தட்டை இடம் வலமாகச் சுற்றுவார்; அப்போது இந்து மதக் கடவுளர்கள் எல்லோரையும் உச்சரிப்பார்; இறுதியில் சிலர் விடுபட்டுப் போனதாகக் கருதி, முப்பத்து முக்கோடி தேவர்களையும் பொத்தாம் பொதுவாகச் சேர்த்தும் கொள்வார்; அனைவரும் சுகமாக இருக்கக் கோரிக்கை வைத்து நிறைவு செய்வார். இந்தப் பூசை சுமார் 3 நிமிடத்திற்கும் மேலாகவே நடைபெறும்.
உடன் பிறந்த நால்வரான எங்களின் நிலை என்னவென்றால்… வயதின் அடிப்படையில் இறங்கு வரிசையிலிருந்து ஏறுவரிசையில் நிற்க வேண்டும். அப்பா, பூசை முடிந்து, வரிசையாக எங்கள் நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டுக் கொண்டே வருவார்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வில்தான், பெரிய தங்கையிடம் என்னுடைய கடவுள் மறுப்பு உறுதியைச் செயலில் செய்து காட்டத் துணிந்துவிட்டேன்.
அந்த நாளும் வந்தது…
அப்பா, எனது நெற்றியில் திருநீற்றை இடுவார்; தங்கை பார்த்துக் கொண்டிருப்பாள்; அந்தக் கணத்திலேயே நான் அதை அழிக்க வேண்டும். இதுதான் திட்டம். இதை அவளிடமே சொன்னேன்! அரண்டு போனாள்? “இரு, இரு அப்பாகிட்ட சொல்கிறேன்” என்று மிரட்டினாள்.
சொன்னபடி அவள் செய்துவிட்டால் என்ன நடக்கும்? எதுவும் தெரியாது!
அப்பா இதை எப்படி எடுத்துக்கொள்வார்? அதுவும் தெரியாது!
ஆகட்டும், திட்டமிட்டபடி செய்துவிடலாம் என்று காத்திருந்தேன்.
அப்பா இரண்டு தங்கைகளையும் கடந்து என்னிடம் வந்தார்.
இதயம் படபடத்தது…
அப்பா எனது நெற்றியில் பூசிவிட்டு, அண்ணனை நோக்கி நகர்ந்தார். நான் வலது கையால் நெற்றியிலிருந்த திருநீற்றை மெதுவாக அழித்தேன்.
“அடப்பாவி..!” அதிர்ச்சி கலந்த கிசுகிசுப்பான குரல் கேட்டது.
பெரிய தங்கையின் குரல்தான்!
பக்கவாட்டில் ஒரு பலமான இடி கிடைத்தது.
அதுவும் பெரிய தங்கையின் கைங்கரியம் தான்!
நான் திரும்பி தங்கையைப் பார்க்க, அவளோ அப்பாவைப் பார்த்தாள்…
அப்பா என்ன செய்தார் தெரியுமா?
(அடுத்த இதழில்….)