பதிவு – 2: எங்கும் பெரியாரைப் பேசுவோம்!
பெரியார் பிஞ்சு வாசகர்களுக்கு…
பெரியாரின் பிஞ்சு அன்பெழிலின்
அன்பு வணக்கங்கள்
சென்னையில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம் 27.07.2024 சனிக்கிழமை காலை 9:30 மணி அளவில் ஷிமிசிகி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இனியன் அவர்களின் அழைப்பின் பேரில் எனது தந்தை சனிக்கிழமை எனக்குப் பள்ளி விடுமுறை பெற்று வெள்ளிக்கிழமை இரவு தொடர் வண்டி மூலம் சென்னைக்குச் சென்று, தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து விட்டு காலை 9 மணி அளவில் மேற்படி நிகழ்ச்சிக்கு கல்லூரிக்குச் சென்றோம். நான் முதல் நபராக வருகையைப் பதிவு செய்தேன். காலை 9:45க்கு பத்து பேர் கொண்ட குழுவினரின் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினராக ஓவியர் டிராட்ஸ்கி மருது கலந்து கொண்டார். பிறகு அருண் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.
புத்தகப் பகிர்வு நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு முடிந்தது. அதில் என்னுடன் பதினைந்து பேர் கலந்து கொண்டனர். 10ஆம் ஆளாக நான் “வாலாஜாவில் இருந்து ஃபுளோரிடாவுக்கு – ஒரு பன்னாட்டுப் பகிர்வு” (நூலாசிரியர் – அபி) என்னும் நூல் குறித்து பேசினேன். அந்த மேடையில் நான் பெரியாரைப் பற்றியும் உரையாற்றினேன். “பெண் விடுதலைக்காகப் போராடிய தலைவர் தந்தை பெரியார். பெரியார் என்ற ஒரு தலைவர் இல்லை என்றால் இன்னும் பெண்கள் கையில் கரண்டியைப் பிடித்துக் கொண்டு ஆணுக்கு அடிமையாகவே அடுப்பங்கரையில் தான் இருந்திருக்க வேண்டும்.
பெரியாரை உலகமயமாக்கும் இன்றைய தலைவர் – அன்றைய சிறுவன் – சிறுவன் பெயர் சாரங்கபாணி – 10 வயதில் மேடை ஏறிப் பேசினார். இன்று 90 வயதையும் தாண்டி பெரியாரைப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்தான் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள்” என்று எடுத்துச் சொன்னேன்.
“நான் சொத்தை விட்டுப் போகிறேன் என்று வருத்தப்படவில்லை; சொந்தத்தை விட்டுப் போகிறேன் என்று வருத்தப் படவில்லை. ஆனால், மக்களாகிய உங்களை அநாதையாய் விட்டுப் போகிறேனோ’ என்று சொல்லி இறுதி மூச்சை விட்டவர் தலைவர் தந்தை பெரியார்” என்று கூறினேன்.
அங்கிருந்த அனைவரும் பெரியாரைப் பற்றியும் ஆசிரியர் பற்றியும் பேசியதைக் கேட்டு எழுந்து நின்று கைதட்டினார்கள். என்னைப் பார்க்க இரண்டு பேர் வந்தார்கள். ஒருவரை மட்டும் எனக்குத் தெரியும். முன்னே நான் சொன்ன புத்தக ஆசிரியர் தோழர் அபி. இன்னொருவர் அவரின் தாயார். நான் பேசியது மிக அருமையாக இருந்தது என்றார்கள். அதில் ஒருவர் சொன்னார் “அன்பெழில் எந்த மேடை ஏறினாலும் பெரியார் அய்யா பற்றியும் ஆசிரியர் அய்யா பற்றியும் பேசாமல் இறங்க மாட்டாள்” என்றார். ஆம், அது உண்மைதான்! நான் எந்த மேடை ஏறினாலும் பெரியார் அய்யாவையும் ஆசிரியர் அய்யாவையும் பற்றிப் பேசாமல் மேடையை விட்டு இறங்க மாட்டேன். ஏனென்றால், பெரியாரின் கொள்கையை அடுத்த தலைமுறைக்கும் நவீன உலகத்திற்கும் ஏற்ப எடுத்துச் செல்ல 90 வயதிலும் தந்தை பெரியாரின் வழித்தோன்றலாகிப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள்! அதனால்தான் நான் இனி எப்போது பேசினாலும் இருவரையும் பற்றிப் பேசாமல் மேடையை விட்டு இறங்க மாட்டேன். அப்புறம் இன்னொன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேனே! “வாலாஜாவில் இருந்து ஃபுளோரிடாவுக்கு” என்பது பெரியார் பிஞ்சு இதழில் அபி அவர்கள் எழுதிய தொடர்தான்.