புதிய தொடர்: காட்டுவாசி
பொழுது விடிந்தது.
செய்தித்தாள்கள் எல்லாவற்றிலும் இதுதான் தலைப்பு செய்தி:-
‘இரண்டு குழந்தைகளைக் கடத்தி காட்டுக்குள் வைத்திருந்த காட்டுவாசி கைது!
இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிறார்கள்.’
செய்தியைப் படித்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக் கொண்டார்கள்.
யார் இந்தக் காட்டுவாசி? எதற்காகக் குழந்தைகளைக் கடத்தி காட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்? யார் வீட்டுக் குழந்தைகள் இவர்கள்? இப்படிப் பல கேள்விகள்.
இதற்கான பதிலை…. யானையைத் தொட்டுத் தடவிப் பார்த்துச் சொன்ன பார்வையற்றவரைப் போல அவரவர் தம் கற்பனையில் தோன்றியதை வைத்துப் பேசிக் கொண்டார்கள்.
காலை 10 மணி இருக்கும்…
காவல்துறையின் பெரிய வாகனம் ஒன்று நீதிமன்ற வளாகத்தின் உள்ளே வந்து நின்றது. செய்தியாளர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அங்கே கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள். அனைவரும் அங்கே வந்து நின்ற காவல்துறை வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்புடன் அந்த வாகனத்திலிருந்து இறங்கினார் காட்டுவாசி.
பத்து – பன்னிரண்டு போலீசார் சூழ நீதிமன்றத்தின் நீண்ட வராண்டாவில் நடந்து சென்றார் காட்டுவாசி.
ஒளிப்படக் கலைஞர்கள் முன்னும் பின்னுமாக ஓடி ஓடி அவரைப் படம் பிடித்தனர்.
தலையில் மிருகத்தின் தோலால் ஆன தலைப்பாகை, அதில் நீளம், சிவப்பு, கருப்பு என பறவைகளின் இறகுகள். அடர்ந்து நீண்ட தலைமுடி… பெரிய தாடி, முறுக்கு மீசை, உடற்பயிற்சி தொடர்ந்து செய்பவர் போன்ற கட்டான உடல் வாகுடன் காணப்பட்டார்.
மார்பிலும், இடுப்பிலும் மிருகத்தின் தோலால் ஆன உடை. கழுத்தில் காட்டு மிருகங்களின் பல் மற்றும் நகங்களால் ஆன மாலை. இடுப்பில் மாட்டுக் கொம்பால் ஆன ஊதுகுழல். பார்க்கவே கம்பீரத் தோற்றம். தோற்றத்திற்கு ஏற்ற வீரநடை!
காக்கி உடை அணிந்து கையில் துப்பாக்கியுடன் சுற்றிலும் காவல்துறையினர் அணிவகுத்து வந்தாலும் ஊர்வலத்தின் நடுவில் வரும் அலங்கரிக்கப்பட்ட யானை போல் கம்பீர நடை நடந்து நீதிமன்ற வளாகத்தில் நுழைந்தார் காட்டுவாசி.
நீதிமன்றத்தின் உள்ளே… நீதிபதி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.
அதுவரை சலசலப்பாக இருந்த நீதிமன்றம் அமைதியானது. டபேதார் “சைலன்ஸ் சைலன்ஸ்” என்றதும்.
நீதிமன்றத்தில் வழக்கமாக நடக்கும் பணிகள் தொடங்கின. பார்வையாளர்கள் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் சற்றுக் கூடுதலாக இருந்தது.
காவல்துறை அதிகாரி ஒருவர் உள்ளே வந்து நீதிபதியை வணங்கினார். தான் வைத்திருந்த காகிதக் கட்டை நீதிபதியின் முன் அமர்ந்திருந்த பெண்மணியிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட பெண்மணி… தனக்கும் மேலே உயரத்தில் அமர்ந்திருந்த நீதிபதியிடம் அந்தக் காகிதக் கட்டைப் பணிவோடு வழங்கினார். அதைப் புரட்டிப் படித்துப் பார்த்த நீதிபதி…
“இன்று இந்த நீதிமன்றத்தில் ஒரு புது வழக்கு; குழந்தைகள் இரண்டு பேரைக் கடத்தி, காட்டுக்குள் வைத்திருந்த ஒரு காட்டுவாசியைத் தான் பார்த்தாக காவல்துறையிடம் புகார் தந்திருக்கிறார் தொழில் அதிபர் குல்மால் குருஜி. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை விரைந்து சென்று குழந்தைகளோடு காட்டில் ஒளிந்திருந்த காட்டுவாசியைக் கைது செய்து நீதிமன்றத்துக்குக் கூட்டி வந்திருக்கிறார்கள். காட்டுவாசியைப் பார்த்து காவல்துறைக்குத் தகவல் சொன்ன தொழிலதிபர் குல்மால் குருஜியை முதல்ல கூப்பிடுங்க…” என்று நீதிபதி சொல்லி முடித்தவுடன்,
“தொழிலதிபர் குல்மால் குருஜி!… குல்மால் குருஜி! குல்மால் குருஜி!…” என்று டபேதார் மும்முறை உரக்கக் கூப்பிட்டார்.
பார்வையாளர் பகுதியில் முன் வரிசையில் அமர்ந்திருந்த குல்மால் குருஜி எழுந்து வந்து நீதிபதியின் இடது பக்கம் இருந்த குற்றவாளிக் கூண்டில் நின்றார்.
அவர் தோற்றமே அவரை தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று காட்டியது.
அவர், தலையில் வட்டமான குல்லா, முகத்தில் வட்டமான மூக்குக் கண்ணாடி, நெற்றியில் நீளமான செந்தூரப் பொட்டு, காவிக்கறை படிந்த பற்கள் தொளதொள ஜிப்பா. ஜிப்பாவுக்கும் மேலே கையில்லாத கோட், பெரிய தொப்பை அதன் மேல் பைஜாமா என வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.
நீதிபதியைப் பார்த்து “நமஸ்தே ஜி” என கரகரத்த குரலில் கூறினார்.
“நீங்கள்தான் குல்மால் குருஜியா?” என்றார் நீதிபதி.
“ஆமாங்கோ… நம்மல் பேர்தான் குல்மால் குருஜி”
“உங்களுக்குத் தொழில்?”
“எக்ஸ்போர்ட் – இம்போர்ட் கம்பெனி இங்கேயும் இர்க்கு… மும்பையிலேயும் இர்க்கு…”
“சரி… ஒரு காட்டுவாசி இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் காட்டுக்குள்ளே வச்சிருக்காருன்னு உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”
“ஜி… குழந்தைங்களைக் கடத்தி காட்டுக்குள்ளே வெச்சிருக்கிறதே நம்ம ரெண்டு கண்ணாலே பார்த்தான். அதான் உடனே போலீசுக்குப் போன் பண்ணி சொன்னான்.”
“அப்படியா! நீங்க எதுக்காகக் காட்டுக்குள்ளே போனீங்க? உங்களுக்குக் காட்டுக்குள்ள என்ன வேலை?…
“அது வந்து ஜி… காட்டு உள்ளே… ஒரு சிவ லிங்கம் இருக்குது. அதுக்குப் பூசை செய்ய மாசம் ஒரு தடவை போவேன். அப்படி போனப்ப காட்டுவாசியப் பார்த்தேன்… அந்த ஆள் ரெண்டு குழந்தைங்களோட இருந்தாரு!… நம்மளுக்கு டவுட்டு வந்தது… அதனாலே போலீசுக்கிட்டே தகவல் சொன்னேன்.”
“அப்படியா… சரி, காட்டுவாசியைக் கூப்பிடுங்க” என்று நீதிபதி சொல்லி முடிப்பதற்குள் டபேதார் “காட்டு..வாசி! காட்டு..வாசி! காட்டு..வாசி! என்று உரக்கக் கூப்பிட்டார்.
அதுவரை நீதிமன்றத்தின் வெளியே போலீஸ் படை சூழ நின்றிருந்த காட்டுவாசி கம்பீர நடை நடந்து வந்து குற்றவாளிக் கூண்டில் நின்றார்.
நீதிபதியைப் பார்த்து கை கூப்பி வணக்கம் சொன்னார்.
சிறிது நேரம் அவரை உற்றுப் பார்த்த நீதிபதி “வணக்கம்… உங்க பேரே காட்டுவாசிதானா… என்றார்.
பெருத்த ஓசையோடு சிரித்த காட்டுவாசி, “எனக்கு வேற பேருங்க. அதுக்குப் பின்னாடி பெரிய கதை இருக்குங்க.”
“அதைக் கேக்க நீதிமன்றத்துக்கு நேரம் இல்லை. உங்களை எப்படிக் கூப்பிடணும். அதைச் சொல்லுங்க?”
“இதோ… எதிரிலெ நிற்கிறாரே பணக்காரர் குல்மால் குருஜி… அவரு சுகவாசி!
நகரத்திலே வசிக்கிறவங்க நகரவாசி!
கிராமத்திலே வசிக்கிறவங்க கிராமவாசி!
எங்க மூதாதையர்கள் ஆதிவாசி!
அதுபோல காட்டுக்குள்ள இருந்ததாலே காவல்துறை என்னை காட்டுவாசீன்னு முடிவு பண்ணிட்டாங்க. நானும் நல்லா இருக்குன்னு காட்டுவாசிங்கிற இந்தப் பேரே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.”
“அதெல்லாம் இருக்கட்டும், எதுக்காக எட்டாம் வகுப்பு படிக்கிற சிறுவன் மாணிக்கத்தையும், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற சிறுமி அமுதாவையும் கடத்திக் கொண்டு போயி… காட்டுக்குள்ள வச்சிருந்தீங்க? குழந்தைகளைக் கடத்துறது எவ்வளவு பெரிய குற்றம் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று கோபமாகக் கேட்டார் நீதிபதி.
“அய்யா… நல்லாத் தெரியுமுங்க. குழந்தை கடத்தலுங்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பெருங் குற்றம்.
குழந்தை கடத்தலுக்கு எதிரான தடைச் சட்டம் 1956 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 2013ஆம் ஆண்டு திருத்தப்பட்டு புது வடிவம் பெற்றது.
பிரிவு 370 மற்றும் 370கி இந்திய தண்டனைச் சட்டப்படியும், இப்ப அண்மையில் இந்தியிலே பேரை மாத்துனாங்களே… பாரதீய நியாய சன்ஹிதா… பிரிவு 137 அதுபடியும்… குற்றத்தின் அடிப்படையெ வச்சு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாங்க.
“இவ்வளவு தெளிவா சட்டத்தைப் பற்றித் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!”
“காட்டுவாசியா இருந்தாலும் நாட்டுவாசியா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் பொதுதானுங்களே… இந்த நாட்டுக்குள்ளே எங்கே இருந்தாலும் சட்டப்படிதானே நடக்கணும்…”
“இப்படி விவரமா தெளிவா பேசத் தெரிஞ்ச நீங்க எதுக்காக ரெண்டு குழந்தைகளைக் கடத்துனீங்க?”
நான் குழந்தைகளைக் கடத்துனேன்னு யார் சொன்னதுங்க?”
மிஸ்டர் குல்மால் குருஜி பார்த்ததாகப் போலீசுலே சொல்லித்தானே உங்களைப் புடிச்சுக் கொண்டு வந்து கோர்ட்டுல நிறுத்தியிருக்காங்க.”
“குல்மால் குருஜி போலீசுலே சொன்னதும், போலீசு என்னைக் காட்டுலே புடிச்சதும் உண்மைங்க”
“நீங்க குழந்தைகளைக் கடத்திக் காட்டுக்குள்ளே கூட்டிப் போகாம குழந்தைங்க ரெண்டு பேரும் உங்க கூட எப்படி இருந்தாங்க. உங்களை போலீசு கைது செய்யும் போது குழந்தைகளும் உங்களோடயே இருந்திருக்காங்களே?…
“அதை விளக்கமா சொன்னாத்தான் உங்களுக்கும் ஊருக்கும் உண்மை புரியும்.”
என்ன உண்மை! அதைச் சொல்லுங்க” என்றார் நீதிபதி.
“சொல்றேன்”
(தொடரும்…)