பறவைகள் அறிவோம் – 7: முக்குளிப்பான்
பூமியில் இயற்கையில் உருவான உயிரினங்களுள் மிகச் சிறப்பான கூறுகளைக் கொண்ட உயிரினம் பறவையினமாகும். உலகில் சுமார் 9672 பறவையினங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. ஒவ்வோர் இனமும் சில சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. சில பறவைகள் அதிக உயரத்தில் பறக்கக் கூடியனவாகவும், சில நீரில் நீந்தக் கூடியனவாகவும், சில பறக்க இயலாதவையாகவும் உள்ளன. இந்தப் பறவையினங்கள் அவை வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களுக்குள் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன.
பறவைகளால் எப்படிப் பறக்க முடிகிறது என்றால், முதலில் தன் இறக்கையைப் பட படவென்று கீழ்நோக்கி அழுத்தி அடித்து காற்றை உந்திக் கொண்டு மேலே எழும்புகிறது.
காற்றில் கலந்துள்ள மின்சக்தியினூடே பறவையினால் பறந்து செல்ல முடிகிறது. அதே மின்சக்தியைப் பயன்படுத்தியே பறவைகள் உயர, உயரப் பறக்கின்றன. இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளுவதற்கு ஏற்பவும் காற்றிலுள்ள மின்சக்தியின் உதவியினாலும் வேகமாகப் பறக்க முடிகிறது. பறவைகளுக்கு இந்த மின்சக்தி எல்லா இடங்களிலும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. சில இடங்களில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் கிடைக்கும். ஆனால், பறவைகளுக்கு நன்கு தெரியும் – அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று.
மேலும், விருப்பப்பட்ட திசையில் திரும்புவதற்குத் தங்கள் வால் பகுதியைப் பயன்படுத்துகின்றன.
பறவைகள் நிலப்பகுதியில் உயரமாகப் பறப்பதைப்போல கடலின் மேற்பகுதியில் பறக்க இயலாது. காரணம், நிலப்பகுதிக்கு மேலுள்ள காற்றின் இழுப்பு சக்தி அதிகம், ஆனால் கடல் மட்டத்திற்கு மேல் காற்றின் இழுப்பு சக்தி குறைவு. இந்தக் காரணத்தால் சில பறவைகள் கடல் பகுதிகளுக்குச் செல்வதில்லை. அத்துடன் நிலப்பகுதியிலேயே வாழும் பறவைகளின் இறக்கைகள், கடற்கரைப் பிரதேசங்களிலே வாழும் பறவைகளின் இறக்கைகளைவிட அகலமாகவும், நீளமாகவும் இருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.
உலகில் காணப்படும் ஒவ்வொரு பறவையும் தத்தம் குஞ்சுகளைப் பராமரிக்கக் கூடியனவாக உள்ளன. இவ்வாறான பறவைகள் பெரும்பாலும் தங்களது வாழ்விடத்தைத் தாங்களே அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்தனவாகவே காணப்படுகின்றன.
நீர்நிலைகளின் கரையோரங்களில் தனக்கான கூடுகளைக் கட்டி குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வளர்க்கும் பறவைதான் முக்குளிப்பான்.
முக்குளிப்பான் பறவை வாத்து இனத்தைச் சோர்ந்தது. இது ஆங்கிலத்தில் லிட்டில் கிரீப் (லிமிஜிஜிலிணி நிஸிணிஙிணி) என்று அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் நீர்நிலைகளையே நம்பி வாழ்கின்றன.
நீர்நிலைகளில், ஆறுகள், குளம் மற்றும் குட்டைகளிலும் முக்குளிப்பான் பறவையை நாம் காணலாம். முக்குளிப்பான் நன்றாக நீந்தவல்லது. இது அடிக்கடி நீருக்குள் மூழ்கி சற்று தூரம் சென்று எழுந்திருக்கும். தேவைப்பட்டால் நீர்ப்பரப்பின் மேல் ஓடிய பின் குறைவான உயரத்தில் சிறிய தூரம் வரை பறக்கும் தன்மையுடையது. இறகுகள் அடர்த்தியானது மற்றும் நீர் புகாததுமாகும். இப்பறவைக்கு வால் கிடையாது.
இது சுமார் 30வினாடிகள் வரை தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் திறன்கொண்டது. இது மீன், தவளை மற்றும் நீர்வாழ் முதுகெலும்பு இல்லாத இரையை உண்ணுகின்றது.
இப்பறவை சுமார் 23 செ.மீ முதல் 29 செ.மீ. வரை நீளம் கொண்டது. இதன் உணவு முறைக்கு ஏற்றவாறு தடித்த வலுவான சிறிய அலகைக் கொண்டுள்ளது. இதன் கால்கள் வலிமை மிக்கவை, முன் புற மூன்று விரல்களிலும் பின் புற இரண்டு விரல்களிலும் சிறிய சவ்வுகளால் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் உடலின் பின்பகுதியில் கால்பகுதி இருப்பதால் வெகுதூரம் நடக்க முடியாது. மேலும் இதன் இறக்கைகள் குட்டையாக இருப்பதால் வெகுதூரம் பறக்கவும் இயலாது. இப்பறவை நீரில் தாழ்வாக தலை, கழுத்து மற்றும் உடம்பின் மேற்பகுதி மட்டும் தெரியும்படி நீந்திச் செல்லும் அழகே அழகுதான்!
முக்குளிப்பான்கள் நீர்நிலைகளுக்குள் எல்லைகள் அமைத்து அந்த எல்லைக்குள் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழும். ஏதேனும் ஒரு சில காரணங்களுக்காக பிறர் எல்லைக்குள் நுழைந்தால் அந்த எல்லையின் உரிமையாளர் ஒலி எழுப்பி ‘இது எங்க ஏரியா உள்ளே வராதே!’ என்று எச்சரிக்கும்.
மழைக்காலமே இதன் இனப்பெருக்கக் காலம். இக்காலத்தில் ஆண்பறவை தன் இறக்கைகளை மடக்கி நீரின் மேற்பரப்பைத் தட்டி, ஒருவகையான அலையை ஏற்படுத்தி, பெண் பறவையின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கும். பின்னர் நீரின் மேற்பகுதியில் ஒயிலாக நடக்கவும், பறக்கவும் செய்யும். அதனைக் காணும் பெண்பறவை அதன் அழகில் மயங்கி ஆண் பறவையோடு இணைசேரும். பின்னர் நீர்நிலைகளின் கரையோரங்களில் இருக்கும் நாணல் புல்லையும், இற்றுப்போன புற்களையும் கொண்டு தண்ணீரில் மிதக்கும் கூட்டைக் கட்டும். இது சுமார் 4 முதல் 7வரை வெள்ளை நிற முட்டைகளை இடும். இரை தேடவோ, வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் போதோ புற்களால் முட்டைகளை மூடிவிட்டுச் செல்லும்.
முட்டைகளை சுமார் 20 முதல் 22 நாட்கள் வரை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் மந்தமான கருப்பு நிறத்திலும், தலையிலிருந்து கழுத்துப்பகுதி வரை வெள்ளைக் கோடுகளுடனும், பஞ்சுபோல மூடப்பட்டு, காண்போரின் கண்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும், மென்மையாகவும் இருக்கும். குஞ்சுகள் வளர, வளர இக்கோடுகள் தாமாகவே மறைந்துவிடும். தாய்ப் பறவை தன் குஞ்சுகளைத் தோள் மீது சுமந்துகொண்டு தண்ணீரில் மிதந்து செல்லும் காட்சியைக் காணக் கண்கள் கோடி வேண்டும்.
பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் வான் சிறப்பில்,
“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு” குறள் – 20.
என பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்குமே நீர் முக்கியமானது எனவும், நீரில்லாமல் எந்த உயிர்களும் வாழ முடியாது என்றும் கூறுகிறார். அந்த வகையில் பிறப்பு முதல் இறப்பு வரை முற்றிலும் நீர் நிலைகளை மட்டுமே சார்ந்து வாழும் முக்குளிப்பான் நம்மிடையே வாழ வேண்டுமானால் நாம் நீர் நிலைகளைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிக் காக்க வேண்டும்.
நீர் நிலைகளைப் பாதுகாப்போம்!
அனைத்துயிர்களையும் காப்போம்!