உயிர்கள்: தேன் கூடு எறும்புகள்
நம்மில் பலருக்கும் எறும்புகள் என்றாலே ஒருவித அச்சமும் ஒவ்வாமையும் ஏற்படும். வீட்டில் இருந்து எறும்புகளை விரட்ட கடைகளில் விற்கப்படும் பல விதமான வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி இருப்போம். APOCALYPTO அபோகாலிப்டோ என்னும் திரைப்படத்தில் காயத்தில் தையல் போடுவதற்குப் பெரிய கருப்பு எறும்புகள் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டுவார்கள். அது ஒரு வரலாற்றுத் தகவல். ஆனால், உலகின் பல பாகங்களில் எறும்புகளை உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் இந்த ஆண்டின் புவிசார் குறியீடு பெற்ற சிவப்பு எறும்புச் சட்னியில் புரதம், மெக்னீசியம், துத்தநாதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் B-12 ஆகியவை நிறைந்திருப்பதாகக் கூறப்படுகின்றன. மெக்சிகோ மற்றும் தென் கிழக்கு நாடுகளில் எறும்புகள் வறுத்து உண்ணப்படுகின்றன. காவியர் (CAVIAR) எனப்படும் ஒரு வகை மீன் முட்டைகள் தான் உலகிலேயே விலை உயர்ந்த உணவாகக் கருதப்படுகிறது. அது போலவே எறும்பு முட்டைகளும் ஓரளவுக்கு விலை உயர்ந்தவையாக இருக்கின்றன.
குளவிகள், வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளுவது மனிதன் (HOMO SAPIEN) மனிதனாக மாறுவதற்கு முன்பாகவே தொடங்கி இருக்கிறது என்பது நமது ஒன்று விட்ட சகோதரர்கள் ஆகிய சிம்பான்சிகளைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். கறையான்களை உண்ணும் முறையைக் கற்றுக் கொண்டது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
இவற்றை எல்லாம் விட ஓர் இனிப்பான இயற்கையின் உருவாக்கம் தேன்கூடு எறும்புகள். இந்த எறும்புகள் அய்ந்து வகைகளாகப் பிரிந்து செயல்படும். அவை ராணி, ராணியின் தனிப்பட்ட வேலையாட்கள், கூட்டைச் சுத்தம் செய்பவை, தேன் கூட்டுப் பையை உருவாக்கிச் சேமிப்பவை ஆகியன வெளியில் சென்று உணவு சேகரிப்பவை ஆகும். வேலையாள் எறும்புகள் தங்களின் அவற்றின் வயிற்றில் ஒரு பை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் தேன் சேகரித்து வைக்கும். அந்தக் குடியிருப்பில் உள்ள மற்ற எறும்புகளும் இந்தத் தேன் கூடு எறும்புகளுக்கு ஊட்டிவிடுவதன் மூலம் அந்தப் பைகளில் உணவைச் சேகரித்து வைக்கும்.
தேன் கூட்டுப் பைகள் உடைந்து விடாமல் இருக்க நிலத்தில் 5.2 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு கூடுகள் அமைக்கப்படும். இதன் மூலம் தேன் கூட்டுப் பைகள் இயற்கையாகக் குளிரூட்டப்படும், வெப்பத்தினால் பைகள் உடைந்து போகாமல் காப்பாற்றப்படும். உணவும் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். இந்தத் தேன் கூட்டுப் பைகள் மணத்தக்காளி அளவில் இருந்து ஒரு சிறிய திராட்சை அளவுக்கு விரிவடையும். ஒரு தேன் கூட்டு எறும்பின் பை உடைந்து விட்டால் காலனியில் இருக்கும் மற்றொரு எறும்பு தேன் கூட்டுப் பையை உருவாக்கத் தயாராகி விடும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பொழுது, மாடுகள் அசைபோடுவதற்கு, உண்ட உணவை வயிற்றில் இருந்து வாய்க்குக் கொண்டு வருவது போன்ற முறையில் இந்தத் தேன் கூட்டு எறும்புகள் தேனை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து மற்ற எறும்புகளுக்கு ஊட்டுகின்றன. எப்பொழுதும் உழைப்புக்கும் ஒற்றுமைக்கும் தான் எறும்புகளை உவமையாகக் கூறுவார்கள், அதற்கும் ஒரு படி மேலே போய் தன் சமூகத்தை ஊட்டி வளர்ப்பதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.