“எண் திசையும் ஏற்கும்”

மடமை நீக்கும் பகுத்தறிவு – தன்
மானங் காக்கும் பேரறிவு!
உடலும் உயிரும் போலிருக்கும் – நல்
ஒழுக்கமும் உண்மையும் ஆறறிவு!
இனிமை கனவு இன்சொல்லே – நாம்
என்றும் காத்தல் மெய்யறிவு!
பணிவும் பண்பும் உயர்வுதரும் – நமக்கு
பைந்தமிழ்க் குறளே நல்லறிவு!
கடமை கண்ணியம் தவறாமல் – நாம்
காலம் கருதி உழைப்போமே!
அடக்கம் கட்டுப் பாடிருந்தால் – நாளும்
அடங்கும் உலகம் நம்மிடமே!
நன்மை வளர்க்கும் செயல்செய்தால் – நம்மை
நாளைய உலகம் வணங்கிடுமே!
இன்பம் வீடு தேடிவரும் – உலகம்
ஏற்றும் நம்மை எண்திசையும்!
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை