நினைவில் நிறுத்துவோம்: பள்ளிகளில் பேச்சாளர்கள் தகுதிகள் என்ன ? எவை?
சொல்லக்கூடிய கருத்துக்களை யாருக்கு எப்படிச் சொல்ல வேண்டும் என்பது சில வரம்புகளுக்கும், நெறிகளுக்கும் உட்பட்டது ஆகும். எவரும், எங்கும் எவரிடமும் கருத்துக் கூறிவிடலாம் என்பது, சாலை விதிகளுக்கு உட்படாமல் வாகனங்கள் சாலையில் நினைத்தபடிச் செல்வதைப் போன்ற செயலாகும். அது பாதக விளைவுகளை, கேட்டையே உருவாக்கும்.
குழந்தைகளிடம் எப்படி, எதைப் பேச வேண்டும், சிறுவர்களிடம் எப்படி, எதைப் பேச வேண்டும், வாலிபர்களிடம் எப்படி எதைப் பேச வேண்டும் என்பதை அறிந்து பேச வேண்டும்.
அய்ந்தாம் வகுப்பு வரையில் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க பெண்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறிய தந்தை பெரியார் அதற்கான காரணங்களையும் கூறினார்.
தாய்தான் பிறந்தது முதல் குழந்தைகளிடம் பழகுகிறாள், பேசுகிறாள். பிள்ளைகளின் முதல் ஆசிரியர் தாய்தான். அவருக்குத்தான் பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும். எனவே, தொடக்கப் பள்ளிகளில் பெண்களையே ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றார்.
ஆசிரியர் பயிற்சி ஏன்?
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், தங்கள் பட்டப் படிப்பை முடித்தபின் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன் என்பதை இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாணவர்களின் உளவியல், உணர்வுகள், விருப்பம், வெறுப்பு, மூளை வளர்ச்சி, உடல் தகுதி, வயது போன்றவற்றைக் கருத்தில் கொண்டே கருத்துகளை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வி உளவியல் என்றே ஒரு பாடம் ஆசிரியர் பயிற்சியின் போது கற்பிக்கப்படுகிறது. “கற்பிக்கும் முறை; குரல் அளவு; கற்பிக்கப்படும் கருத்து அனுமதிக்கப்பட்டதா? சர்ச்சைகளுக்கு இடமில்லாததா? கேட்கும் மாணவர்களின் வயதுக்கு உரியதா?” என்பனவற்றைக் கருத்தில் கொள்ளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்படியிருக்க, கண்டவரெல்லாம் கல்விக் கூடங்களுக்குள் நுழைந்து கண்டபடி பேசுவது கண்டிக்கத் தக்க, தண்டிக்கத் தக்க குற்றம்.
பாடத்திட்ட வரையறை:
ஒவ்வொரு வகுப்பிற்கும் எதைப் போதிக்க வேண்டும் என்று அரசு பாடத்திட்டத்தை வரையறுத்து அவற்றை மட்டுமே போதிக்கச் செய்கிறது. அதற்குக் காரணம், ஆசிரியர்கள் தங்கள் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கைகள், நோக்கங்களை மாணவர்கள் மத்தியில் நுழைத்து விடக்கூடாது என்பதே!
நீதி நெறி வகுப்புகளில் கூட எந்தக் கருத்துகளை, நம்பிக்கைகளைக் கற்பிக்க வேண்டும் என்று வரையறுக்கப்படுவதன் நோக்கம் இதுதான். பள்ளிகளில் எந்த மதக் கடவுளும், வழிபாடுகளும் கூடாது என்பதற்காகத்தான், தமிழ்த்தாய் வாழ்த்து வைக்கப்பட்டது. அப்படியிருக்க அறிவுக்கு அறவே ஒவ்வாத மூடக் கருத்துக்களைப் பள்ளி மாணவர்களிடம் போதிப்பது மிகப்பெரிய குற்றச் செயலாகும்.
பேச்சாளர்கள் தகுதியும் பின்னணியும்:
அரசால் ஏற்கப்பட்ட பாடங்களைப் பள்ளிகளில் நடத்துவதற்கே பட்டப்படிப்பு, ஆசிரியர்களுக்குப் பயிற்சி, பாடத்திட்ட வரையறை என்று பல நிபந்தனைகள், விதிமுறைகள் பின்பற்றப்படும்போது, மாணவர்கள் மத்தியில் பேச்சாளர்களாக வருபவர்களுக்கு உரிய தகுதிகள், தரம் வேண்டாமா?
ஆசிரியர்கள் என்பவர்கள் முறையாகப் படித்து பணி ஆணை பெற்று, பதிவேடுகளில் பதியப் பெற்று பணி செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கே இவ்வளவு நெறிமுறைகள் இருக்கும்போது பேச்சாளர்கள் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் கல்வி நிலையங்களில் பேசலாம் என்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
கல்வி நிலையங்களில் இன்னின்னார்தாம் பேசத் தகுதியுடையவர்கள் என்ற பெயர்ப் பட்டியலை அரசு ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயம். அப்படி ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன் பேச்சாளர்களின் தகுதிகள், அவரின் கடந்த காலச் செயல்பாடுகள், அவரின் பின்னணிகள் என அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரையே பள்ளி, கல்லூரிகளில் பேச அனுமதிக்க வேண்டும்.
பேசு பொருள் :
வெளியிலிருந்து வரும் பேச்சாளர்கள் பேசுபொருள் உறுதி செய்யப்பட்டதாய், அறிவுக்கும், அறிவியலுக்கும் உகந்ததாய், மாணவர்களுக்கு அறிவு, விழிப்பு, தன்னம்பிக்கை ஊட்டக் கூடியதாய் இருக்க வேண்டும். மூடநம்பிக்கைகள், அறிவியலுக்கு எதிரான கருத்துகள் எதையும் மாணவர்களிடம் பேசக்கூடாது.
தகுதி நீக்கம்:
நீதிபதிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர்கள் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் உள்ளன. ஆனால், நீதிபதிகளே இந்த நடத்தை விதிகளை மீறும் வருந்தத்தக்க நிலை இப்போது காணப்படுகிறது. தங்களது சொந்த நம்பிக்கைகள், விருப்பங்கள், கொள்கைகளைத் தங்களின் பணியில் வெளிப்படச் செய்வது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்ட நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்படக்கூடிய நிலை நடைமுறைக்கு வந்தால் தான் எல்லா அரசு ஊழியர்களும் விதிகளைப் பின்பற்றி நடக்க வழி செய்யும்.
நீதிமன்றமும், காவல்துறையும், கல்விக்கூடமும் மிகச் சரியாகச் செயல்பட்டாலே மற்றவை எல்லாம் தானே சரியாகும். சிறந்த மாணவர்களின் உருவாக்கம் சிறந்த நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும்.
காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகள் நாட்டின் அனைத்துச் சீர்கேடுகளையும் களையும். சரியான நீதி நிருவாகம் அனைத்தையும் சீர் செய்யும் அரிய கருவி. அரசு அனைத்தையும் நன்கு உணர்ந்து கடும் நடவடிக்கைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மக்களையும் நாட்டையும் சீர்கெடச் செய்யும் சுயநல, ஆதிக்க அமைப்புகளின் தலையீடு அரசின் எத்துறையிலும் வராமல் இருக்கும்படி கண்காணிக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
அப்படி செய்யும்போது பள்ளிக்குப் பேச வருகின்றவர்களும் தரமானவராக, தகுதியானவராகக் கிடைப்பர். மாணவர்களுக்கும் நன்மை கிடைக்கும்.