பறவைகள் அறிவோம் – 8: கழுகு
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு மகிழ்ந்து வியக்கும் உயிரினங்கள் விண்ணை அலங்கரிக்கும் பறவைகள் என்றால் மிகையாகாது. தமிழ்நாட்டில் சுமார் 580க்கும் மேற்பட்ட பறவைச் சிற்றினங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
‘பறக்கும் திறமை பறவைகளுக்கு மட்டுமா’ என்றால், அப்படி இல்லை என்றே சொல்லலாம். பாலூட்டி வகையைச் சேர்ந்த வவ்வால் நெடுந்தூரம் வரை பறக்கும் திறமை பெற்றுள்ளது. சரி, ‘முட்டையிடுவது பறவைகளின் தனிச் சிறப்பா’ என்றால் அதுவும் இல்லை, ஏனெனில் பாம்புகள், பல்லி, ஆமை போன்ற ஊர்வனவும் முட்டையிடுகின்றன. சரி ‘பறவைகள் மட்டும் தான் அடைகாக்குமா’ என்றால் அதுவும் கிடையாது. ராஜநாகம் போன்ற பாம்புகளும் கூட அடைகாக்கின்றன. பின்னே பறவைகளின் தனித்துவம் தான் என்ன? என்றால்…
பறவைகளின் வண்ணமயமான சிறகுகள் தான் அவற்றை மற்ற உயிரினங்களிலிருந்து தனித்துக் காட்டுகின்றன என்று கொள்ளலாம். அந்த வகையில் வலுவான கால்களும், அகண்ட நீண்ட இறக்கைகளும், பெரிய கண்களும், கூறிய நுனியுடைய வளைந்த அலகும் கொண்ட பறவை தான் கழுகு.
கழுகு (EAGLE) என்பது அக்சிபிட்ரிடே (ACCIPITRIDAE) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவையாகும். கழுகுகளில் மொத்தம் 74 வகையான இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 60க்கும் மேற்பட்ட வகைகள் யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளன. தமிழில் ஏழால், கழுகு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கழுகு அதிகாரம், சுதந்திரம், மேன்மை, கம்பீரம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனால் அதைப் பறவைகளின் அரசன் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். மேலும் கழுகை அமெரிக்காவின் தேசியப் பறவையாக வைத்திருக்கின்றனர். பறவை இனத்திலேயே கழுகு மட்டும் தான் சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றது. கழுகுதான் வானில் மிக உயரத்தில் பறக்கக் கூடியது. மேலும் கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றினால் அவை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகின்றன. இதனால் அவை சிறகினை விரித்துக் காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் செய்கின்றன.
கழுகின் கண்கள் அளவில் பெரியவை. அதன் கண் பார்வை மிகக் கூர்மையானது. வட்டமடித்துக் கொண்டே உயரே பறந்து கொண்டிருந்தாலும் கீழே நகரும் எலி, கோழிக் குஞ்சு போன்ற சிறு உயிரினங்களைக் கண்டால் விர்… என்று கீழ் நோக்கிப் பாய்ந்து வந்து தனக்கான உணவை, தன் வலுவான கூரிய நகங்களால் பற்றிப் பிடித்து தன் கூர்மையான அலகினால் கொத்திக் கொத்தி தின்னும். இவ்வாறு கொன்று தின்பதால் இப்பறவை கொன்று தின்னிப் பறவை (அ) கொன்றுண்ணிப் பறவை என அழைக்கப்படுகிறது. கழுகின் கண்கள் மற்றும் கால்பகுதிகள் மஞ்சள் நிறத்திலும், உடல் மற்றும் இறக்கைகள் பழுப்பு நிறத்திலும். தலை மற்றும் வால் பகுதிகள் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. பொதுவாக ஆண் கழுகை விட பெண் கழுகு சற்றே பெரியதாக இருக்கும்.
பெண் கழுகு ஓர் ஆண் பறவையுடன் இணை சேர்வதற்குமுன் அந்த ஆண் பறவையுடன் நிலப்பகுதிக்குச் சென்று சிறு தடிமனான குச்சியை எடுத்துக் கொண்டு ஆண் பறவையுடன் வானில் உயரே பறந்து சென்று, அந்தக் குச்சியைக் கிழே போட்டு விட்டு அங்கே காத்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று குச்சி நிலத்தில் விழும் முன் பிடித்து அதை உயரே பறந்து கொண்டிருக்கும் பெண் பறவையிடம் கொண்டு சேர்க்கும். மீண்டும் பெண் கழுகு குச்சியைக் கீழே போடுவதும் ஆண் கழுகு அந்தக் குச்சியைப் பிடித்துக் கொண்டு வருவதுமாய் பல தடவைகள் பல மணி நேரத் தேர்வுக்குப் பின்னரே, பிடித்திருப்பின் அந்த ஆண் பறவையோடு இணைசேரும். இப் பயிற்சி எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்றால், ஆண் கழுகினுடைய பொறுப்புணர்வை அறிந்து கொள்ளவே! மேலும் இறக்கை முளைத்த குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியே சென்று பறப்பதற்குப் பயந்து கொண்டு இருக்கும்போது கூட்டின் உள்ளே இருக்கும் தாய்ப் பறவை கூட்டிலிருந்து குஞ்சுப் பறவையைத் தள்ளிவிடும்.
அக் குஞ்சுப் பறவை இறக்கையை மேலும், கீழும் அசைத்து தத்தளித்தபடியே கீச்சிட்டுக் கொண்டே கீழ்நோக்கி வரும். கீழே விழும் முன் ஆண் கழுகு அதை லாவகமாகப் பிடித்து தன் மேல் வைத்துக்கொண்டு கூட்டில் கொண்டு சேர்க்கும். இதற்கான முன்னோட்டம் தான் அந்தக் குச்சிப் பிடி பயிற்சி.
மிக உயரமான முட்களையுடைய மரக்கிளைகளிலும், மலைச் சரிவுகளிலும், பாறைப் பிளவுகளிலும் மற்ற உயிரினங்களால் எளிதில் நெருங்க முடியாத இடத்தைத் தேர்வு செய்து, பின்னர் முள், குச்சி, புல், வேர்கள் மற்றும் வைக்கோலைக் கொண்டு ஆண், பெண் இருவரும் சேர்ந்து அழகான கூட்டைக் கட்டுகின்றன. ஒரு முறை இரண்டு முட்டைகள் இட்டு சுமார் 40 நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. பெண் பறவை குஞ்சுகளைப் பாதுகாக்க, ஆண் பறவை இரையை வேட்டையாடிக் கொடுக்கிறது. குஞ்சுகளுக்கு இறக்கைகள் வளர்ந்தவுடன் கூட்டிலுள்ள புல், வேர்கள், வைக்கோலை எடுத்து விடுகின்றன இதனால் தாவித்தாவி உட்காரும் குஞ்சுப் பறவைகளை முட்கள் குத்திக் காயப்படுத்துவதால் அவை விரைவில் பறக்கக் கற்றுக் கொள்கின்றன.
பொதுவாக கழுகு தன் 40 வயதை அடையும் போது, அதன் அலகு தேய்ந்து, வளைந்து இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் ஏற்றதாக இல்லாமலாகி விடுவதுடன் அதன் இறக்கைகளும் தடித்துக் கனமாகி பறப்பதற்கு இயலாததாய் மாறிவிடும். இந்த நிலையில் தான் கழுகுக்குச் சவால்கள் காத்திருக்கின்றன. ஒன்று, இறந்து விடுவது; மற்றொன்று, தன் அலகு மற்றும் இறகுகளைப் புதுப்பிக்க வலிமிக்க ஒரு நிகழ்விற்குக் தன்னைத் தயார் செய்வது.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கழுகு உயர்ந்த மலைப்பகுதிக்குச் சென்று பாறைகளில் தன் அலகைக் கொண்டு முட்டி, மோதி அலகை உடைக்கும் பின்னர் புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்து இருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறக்கைகளைப் பிய்த்தெடுக்கும். சுமார் அய்ந்து மாதத்திற்கு பிறகு புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும் அதுவரை காத்திருக்கும். நமக்கு இருக்கும் நகங்களைப் போலத்தான் கழுகுகளின் அலகும். வளர்ந்து கொண்டே இருக்கும். சேதமடைந்தாலும் வளரும் தன்மை கொண்டது. வலிகளையும், வேதனையையும் அனுபவித்து தன்னைத் தானே புனரமைத்துக் கொண்ட கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.
என்றாலும் உலகில் கழுகு இனம் வேகமாக அழிந்து வருகிறது. சுற்றுச் சூழல் மாசடைதலைத் தடுப்பதில் கழுகுக்கு முக்கியமான பங்குமுண்டு. விவசாயம் செய்யும் போது பயிர்களை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தன்மையினால் இறக்க நேரிடுகிறது. மற்றொரு காரணம், மின்சாரக் கம்பங்கள் அதிகரிப்பதாகும். அதனால் கழுகுகள் மின்கம்பியில் மோதி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
‘எனக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது… இதில் பறவைகள் இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன? நாம் அதைத் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது?’ என்று சிலர் கேட்பது எனக்குக் கேட்கிறது.
உயிரினச் சங்கிலியில் எந்த ஓர் உயிரினம் அறுபட்டாலும் அதற்கான விளைவுகளை நாம் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. உண்மையில் கழுகுகள் இயற்கை அளித்த துப்புரவாளர்கள். அவற்றை இழக்கும் போது துப்புரவுப் பணி தடைபடும். அதன் காரணமாக நாம் பலவிதமான நோய்களையும், அழிவுகளையும் எதிர் கொள்ள நேரிடும். இவற்றைத் தடுப்பதற்கு நாம் பறவைகள் மீது பரிவு காட்ட வேண்டும். அவை சுதந்திரமாக வானில் பறக்கும் காட்சியைக் கண்டு ரசிப்பது மட்டுமல்லத் அவற்றைப் பாதுக்காக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அழகிய பறவைகள் அனைத்தையுமே
அழிந்து விடாமல் நாம் காத்தால்
அழகிய பசுமைக் காடுகளும்
அழியா திருந்து வளம்சேர்க்கும்!
கழுகுப் பார்வை என்றேதான்
வழங்கும் செய்திகள் பார்த்திருப்பீர்!
உலகப் பார்வை அதனாலே
துலங்கிடும் என்பதை உணர்வீரே!