தொடர் கதை: காட்டுவாசி – எங்க அந்தப் பசங்க?
மாலை நேரம்,
விளையாட்டில் ஓடி ஒளியும் குழந்தையைப் போல் சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. அடர்ந்த காட்டுக்குள்ஞ் பெரிய மலையின் அடிவாரத்தில்ஞ் பல மரங்கள் சேர்ந்து பந்தல் போட்டது போல் இருக்கும் நிழல் பகுதியில் காட்டுவாசியும், அவருக்கு உதவியாளரைப் போல் உடன் இருக்கும் “ரங்கு” என்னும் குரங்கும் மகிழ்ச்சியாக பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
“பச்சைப் பசேல் காடு…
இதுதாங்க எங்க வீடு…
எந்த நாளும் வந்த தில்லை
எங்களுக்குக் கேடு _ இந்தக்
காட்டுக்கில்லை ஈடு”
என்று தன் கரகரத்த குரலில் உரக்கப் பாடிக் குதித்துக் குதித்து ஆடிக் கொண்டிருந்தார் காட்டுவாசி.
ரங்குவும்… காட்டுவாசி ஆடுவதைப் பார்த்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.
திடீரென மரங்களுக்குப் பின்னால் தரையில் கொட்டிக் கிடக்கும் சருகுகளின் மீது யாரோ ‘சரசர’ என்று ஓடுவது போல் ஓசை.
இந்த நேரத்தில் நம்மைத் தவிர இங்கே யார் வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு திரும்பிப் பார்த்தார் காட்டுவாசி.
ரங்குவும் ஓசை வந்த திசையில் உள்ள மரத்தின் மீது தாவிக் குதித்து ஏறி எட்டிப் பார்த்தான்.
பதினான்கு, பதினைந்து வயதுள்ள ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் காட்டுக்குள் பயந்தபடி பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தனர்.
இருவரின் கைகளும், வாயும் கந்தல் துணியால் கட்டப் பட்டிருந்தன.
இவர்கள் யாராக இருக்கும்? எதற்காக இப்படி தலை தெறிக்க ஓடுகிறார்கள்? என்ற சிந்தனையோடு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்தபடி பார்த்தார் காட்டுவாசி.
சிறுவனும் சிறுமியும் ஓடிய சற்று நேரத்தில் முரட்டுத் தனமான இரண்டு பேர் அந்த இடத்திற்கு ஓடி வந்தனர்.
ஒருவன் தாடி, மீசையோடு தலைமுடி அதிகம் வைத்திருந்த மலையாண்டி.
மற்றொருவன் தலைக்கும் முடிக்கும் தொடர்பே இல்லாத வழுக்கைத் தலையோடும் அரிவாளை உதட்டின் மேல் கவிழ்த்து வைத்தது போல் பெரிய மீசையோடும் இருந்த மாசி.
மலையாண்டி… மாசியைத் திரும்பிப் பார்த்து “எங்க போச்சிங்க… இந்தப் பொடிப்பசங்க? கைக்கு எட்டுனது… வாய்க்கு எட்டலேங்குற கதையாப் போச்சேடா…”
“டேய்… மலை… எங்கே போயிடப் போதுங்க… இந்தக் குட்டிப் பசங்க… இருட்டுறதுக்குள்ள தேடிக் கண்டுபிடிப்போம். வா… வா…” என்றபடி குழந்தைகள் போன திசையில் ஓடினான் மாசி.
பின்னாலேயே ஓடினான் மலையாண்டி.
மரக்கிளையிலிருந்து காட்டுவாசியின் முன்னால் குதித்தான் ரங்கு.
அதுவரை மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த காட்டுவாசி “டேய் ரங்கு… இவனுங்களப் பாத்தா நல்லவங்க மாதிரித் தெரியல… இவனுங்களாலே… அந்தக் குழந்தைகளுக்கு ஏதோ ஆபத்துன்னு நினைக்கிறேன்… வா… வா… நாம குறுக்கு வழியில போயி அந்தக் குழந்தைகளைக் காப்பாத்துவோம்…” என்றார்.
அவர் சொன்னதை ஆமோதிப்பதைப் போல் ரங்கு “கிரீச்.. கிரீச்” என்று குரல் எழுப்பியபடி முன்னால் ஓடினான். பின் தொடர்ந்தார் காட்டுவாசி.
ஓடிக் கொண்டிருந்த சிறுவனும், சிறுமியும் பெரிய பாறைக்கு அருகில் போய் நின்றனர்.
சிறுமி மூச்சு வாங்கியபடி அழைத்து, சிறுவனிடம், கட்டப்பட்ட தன் கையால் தட்டி கட்டியிருக்கும் கைகளை நீட்டினாள். சிறுவன் புரிந்து கொண்டவனைப் போல் தலையை ஆட்டியபடி அவளது கைக்கட்டுகளை அவிழ்க்கத் தொடங்கினான்.
தன் கைகள் கட்டப்பட்டிருந்தாலும், சிரமப்பட்டு சிறுமியின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டான். தன் கைக்கட்டுகள் தளர்ந்த உடனேயே சிறுமி… சிறுவனின் கைக் கட்டுகளை அவிழ்க்கத் தொடங்கினாள்.
இப்படி ஒருவருக்கு ஒருவர் உதவியபடி கையிலும் வாயிலும் போடப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து முடித்தனர். சிறுமி பெரு மூச்சுவிட்டபடி… “என் பேரு அமுதா; உன் பேரு என்னடா?” என்று கேட்டாள்.
சிறுவன் கையிலும் வாயிலும் கட்டப்பட்டிருந்த கந்தல் துணியைத் தூக்கி வீசியபடி என் பேரு… “மாணிக்கம்” என்றான்.
“நான் ஒன்பதாவது படிக்கிறேன்… மாணிக்கம்… நீ என்ன படிக்கிறே?”
“நான் எட்டாவது படிக்கிறேன்…” என்று பதில் சொல்லி முடிப்பதற்குள்… மலையாண்டியும், மாசியும் அந்த இடத்திற்கு வருவது தெரிந்தது “அமுதா வா…வா… இந்தப் பாறைக்குப் பின்னாலே ஒளிஞ்சுக்குவோம்.” என்றான்.
“ஆமா… ஆமா… இதுக்கு மேலே என்னாலே ஓட முடியாது… வா… வா… ஒளிஞ்சுக்குவோம்” என்றபடி இருவரும் பாறைக்குப் பின்னால் புதர் போல் இருந்த இருந்த செடி, கொடிக்குள் சென்றனர்.
வேகமாக வந்த மாசி… “டேய் மலை… இங்கே பாத்தியா… நாம கட்டுன கைக்கட்டையும், வாய்க் கட்டையும் அவுத்துப் போட்டுட்டாங்க அந்தப் பசங்க…” என்று கீழே கிடந்த துணியை எடுத்துக் காட்டினான்.
“மாசி… இதைக் கழட்டுன அந்தப் பொடிப் பசங்க இங்கேதான் எங்கேயோ ஒளிஞ்சுக்கிட்டு இருக்காங்க. ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாங்க. விட்டுடக்கூடாது அதுங்களைத் தேடு… தேடு” என்றான் மலையாண்டி.
ஒவ்வொரு மரத்தின் மேலேயும், பின் புறத்திலும் குழந்தைகள் இருவரும் இருக்கிறார்களா என்று தேடத் தொடங்கினான் மாசி.
அங்கிருந்த காய்ந்த மரக்கிளை ஒன்றை எடுத்து புதர் போல் அடர்ந்திருக்கும் செடி கொடிகளுக்கிடையே குத்தி, ஓங்கி அடித்து குழந்தைகளைத் தேடினான் மலையாண்டி.
குழந்தைகள் அமுதாவும், மாணிக்கமும் ஒளிந்திருந்த பாறையின் பின்புறமிருந்து புதர் அருகில் வந்த மலையாண்டி ஓங்கி அடிப்பதற்காகக் காய்ந்த கிளையைத் தூக்கினான்.
திடீரென மலையாண்டி மீது எலும்புத் துண்டுகளும், சாம்பலும், மரத்தின் மேலிருந்து கொட்டத் தொடங்கின. மலையாண்டியின் மண்டையில் சில எலும்புகள் விழுந்தன.
அலறித் துடித்தபடி கீழே விழுந்து எழுந்து அந்த இடத்தைவிட்டு விலகினான்.
பயங்கரமான சிரிப்பொலி. எதிரொலியோடு கேட்டது. வேறொரு பக்கம் குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்த மாசியும் பதறித் துடித்து மலையாண்டி அருகில் வந்தான்.
“அடேய்… பாதகா… நான்தான் வனதேவதை நான் இருக்கிற இடத்திலே வந்து என் அமைதியை ஏன்டா… கெடுக்கிறே… என் கிட்டே வந்தே உன்னைப் புடிச்சி… கடிச்சி… உன் ரத்தத்தைக் குடிச்சிடுவேன்…
மரியாதையா… இந்த இடத்தை விட்டுப் போயிடு! இல்லே… உன்னை… பலி வாங்கிடுவேன்… ஹ… ஹ… ஹ… ஹா…” என்று கொடூரமான குரல் கேட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருட்டும் நேரத்தில் அரட்டும் குரலில் மிரட்டல் வந்தால் மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு குலை நடுங்கத்தானே செய்யும்?
மாசியும், மலையாண்டியும் அரண்டு போய் நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“டேய்… மலையாண்டி வாடா போயிடலாம்” என்று பதற்றத்தோடு மாசி மலையாண்டியிடம் சொல்ல…
“வாடா மாசி ஓடிப் போயிடலாம்” என்று நடுக்கத்தோடு சொன்னான் மலையாண்டி.
அடுத்த நொடி… இருவரும் வேகமாய் வீசும் காற்றில் பறக்கும் சருகு போல் அந்த இடத்தை விட்டுக் காணாமல் போயினர்.
(தொடரும்…)