அறிவியல் சாதனை: பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும் இனி உலகைப் பார்க்கலாம்
மனித உடலின் அனைத்து இயக்கங்களும் நரம்புகளைச் சார்ந்தே இருக்கின்றன. சிரிப்பு, வலி, அழுகை, பார்ப்பது, கேட்பது, பேசுவது, உணர்வது என அனைத்துமே.
கேட்டல் எப்படி நடக்கிறது என்றால், ஓலி காதை வந்து அடைகிறது. காதின் உள்ளே உள்ள மிகச் சிறிய சுத்தியல் எலும்பில் பட்டு அதிர்வடையச் செய்கிறது. அந்த அதிர்வலையை அங்கு உள்ள திரவத்திற்கு அனுப்புகிறது அந்தத் திரவத்திலுள்ள நரம்பு செல்கள் அந்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பும். மூளை அந்த ஒலிக்கான பொருளை நமக்கு உணர்த்தும்.
எடுத்துகாட்டாக ஆசிரியர் பாடம் நடத்துகிறார் என்றால், அவரது பேச்சு நம் காதை அடைந்த பிறகு அந்த ஓசை நரம்புமண்டலம் வழியாக மூளைக்குச் சென்று, பிறகு நமக்கு அந்தப் பாடங்கள் இன்னது என்று தெரியவருகிறது. இவை எல்லாம் அவ்வளவு விரைவாக நடக்கின்றன.
காது கேளாதவர்களுக்கான கருவிகளை நாம் பார்த்திருக்கிறோம். நொடிப் பொழுதுக்குள் இப்போது பிறவியிலேயே காதுகேளாதவர்கள் கூட கேட்கும் திறனைப் பெற முடியும். எப்படி என்றால், சிலருக்குப் பிறவியிலேயே மேலே கூறிய சுத்தியல் எலும்பு, திரவம், நரம்புக்கற்றை போன்றவை சரியான வளர்ச்சி அடையாமல் இருக்கும் அல்லது அவை இல்லாமல் கூட இருக்கும்
அந்தப் பணியைச் செயற்கைக் கருவி செய்து காதுப் பகுதியில் உள்ள நரம்புகள் வழியாக மூளைக்குக் கொண்டு செல்கிறது.
அதானால்தான் கடந்த 20 ஆண்டுகளாக செவித்திறன் இழந்தோர் அனைவருமே கேட்கும் ஆற்றலைச் செயற்கையாகப் பெறுகின்றனர்.
கிட்டத்தட்ட கண் பார்வைக்குள்ள தொழில் நுட்பமும் இதே போன்றுதான்.
மனிதனின் கண் சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்ட ஒரு விழிக்கோளமாகும். இந்த விழிக் கோளமானது வெளி, மய்ய, உள் என மூன்று அடுக்குகளால் ஆனது. வெளி அடுக்கில் ஒளி ஊடுருவக்கூடிய விழி வெண் படலமும், ஒளி ஊடுருவாத விழி வெளிப் படலமும் உள்ளன.
மய்ய அடுக்கில் விழியடி கரும்படலம், சிலியாத் தசைகள், அய்ரிஸ், கண் பாவை, விழி லென்ஸ் ஆகியவை உள்ளன. உள் அடுக்கில் உணர் செல்களையுடைய விழித்திரை உள்ளது. விழி லென்ஸுக்கும் விழி வெண் படலத்துக்கும் இடையே முன் கண் ரசம், விழி லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையே பின் கண் ரசம் ஆகிய திரவங்கள் உள்ளன.
பொருள்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் கண் பாவை வழியே சென்று விழி லென்ஸின் மீது பட்டு விலகலடைந்து தலைகீழான சிறிய மெய்ப் பிம்பத்தை விழித் திரையில் விழச் செய்கின்றன. இப்பிம்பத்தினை ஒளி உணர்வுச் செல்கள் பார்வை நரம்புகள் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. மூளை நாம் காணும் காட்சியை உள்ளது உள்ளவாறே நமக்கு நோக்கிக் காட்டுகிறது.
இதுதான் நமது கண்ணின் செயல்பாட்டுத் தொழில் நுட்பம். இங்கு கண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணர் கருவி, இந்தக் கண் பாதிக்கப்பட்டாலோ, அல்லது பார்வைத் திறன் இல்லாமல் போனாலோ எதையுமே காண முடியாது.
காது மற்றும் கண் இரண்டுக்குமே அந்த அந்த நரம்புகள் தான் மூளைக்குக் கொண்டுசெல்லும்
இந்த நிலையில் பிறவியிலேயே விழி இல்லாமல் பிறப்பவர்கள், விழி இருந்தும் பார்வை இல்லாமல் பிறப்பவர்கள், விபத்து மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறனை இழந்தவர்கள் ஆகிய எல்லோருக்கும் தற்போது பார்வைத்திறனைக் கொண்டுவரும் தொழில் நுட்பம் வந்துவிட்டது.
நியூராலிங்க் நிறுவனத்தின் ‘பிளைன்ட்சைட்’ கருவி மூலம் இரண்டு கண்களையும், ஆப்டிக் நரம்புகளையும் இழந்தவர்களும் கூட பார்க்க முடியும்.
இந்த அறிவியல் நுண்ணுணர்வுக் கருவி பொதுவாக நாம் இயல்பாகப் பார்ப்பதை விட அதிகத் திறன் கொண்டது. பொருளைப் பெரிது படுத்திப் பார்க்கலாம். பார்ப்பதைச் சேமித்து வைக்கலாம். மனதில் கற்பனையாக நினைக்கும் ஒன்றை இந்தக் கருவி மூலம் கண்ணெதிரில் கொண்டுவரலாம். அதை (Printer) அச்சுப்பதிவுக் கருவியோடு இணைத்து அச்சு எடுத்து; பிறருக்கும் கொடுக்கலாம்.
இது பற்றி இந்த நிறுவனம் கூறும் போது, இயற்கையாக இருக்கும் பார்வைத் திறனை விட சிறப்பாக இதன் தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இந்தக் கருவில் பல்வேறு நவீன வசதிகளுடன் மின்கலத்தால் இயங்கும் வசதிகொண்டது என்றும், பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் இதை அணிந்துகொண்டால் நம்மை விட அவர்கள் மிகத் தெளிவாக உலகைப் பார்ப்பார்கள் என்றும் விளக்கியுள்ளது.
பார்வைத்திறன் இழந்தவர்களுக்குக் கைகளில் லென்ஸ் கருவியைப் பொருத்தி அவர்கள் பொருட்களைப் பார்க்கும் தொழில் நுட்பத்தையும் உருவாக்கி உள்ளனர். இதைக் கொண்டு பிறவிப் பார்வையற்ற சிலர் ஆல்ப்ஸ் மலைமீது ஏறிச் சாதனை படைத்துள்ளனர். தற்போது வந்துள்ள கருவி நவீன வடிவமைப்பில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அணியக்கூடிய மூக்குக்கண்ணாடி வடிவில் வந்துவிட்டது, இதன் மூலம் இனி எதிர்காலத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகள் என்கிற ஒரு குறைபாடு முற்றிலும் இல்லாமல் போய்விடும்
தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கு உலகமயமாதலை அறிவியல் உணர்த்துகிறது அல்லவா?