ஒரு பெரியார் பிஞ்சின் வாழ்த்து மடல்
ஏழைக் குழந்தைகளுக்கு அன்னமிட்ட தாய்க்கு நிகரான தமிழ்நாடு முதலமைச்சர் தாத்தா அவர்களுக்கு ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி சு.ஆ.பிரபாகரனி எழுதும் நன்றி மடல். பெரும்பாலும் மாணவர்கள் காலை உணவு உண்ணாமலேயே பள்ளிக்கு வருவது உண்மைதான். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் சில மாணவ மாணவிகளுக்கு காலை உணவு செய்து கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனக்கும் இந்த நிலைதான். ஏழை மாணவர்கள் வீட்டிலோ, இதுவும் கூட செய்ய முடியாத நிலைதான். என் அம்மா தலைமைச் செயலகத்தில் பணியில் உள்ளார். என் அம்மாவுக்கு எனக்குக் காலை உணவு செய்து கொடுப்பதும் சிரமம். தங்கள் அரசின் காலைச் சிற்றுண்டித் திட்டம் வந்தது முதல் நான் காலை உணவு பள்ளியில் உண்கிறேன். இதனால் என் அம்மாவுக்குச் சிரமம். குறைந்து உள்ளது.
மற்ற மாணவ – மாணவிகள் நிலையில் இருந்து நினைத்துப் பார்க்கிறேன்… கட்டடத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், உடல் நோய் வாய்ப்பட்டு வேலைக்குச் செல்ல இயலாதவர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பெரும் வாய்ப்பு. ஆவடியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் சென்று பூ மற்றும் காய்கறிகள் வாங்கி வந்து வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் பெற்றோர்களுக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் சிறுதானிய உணவுகள் வழங்குவது சிறப்புக்குரியது,
இந்தத் திட்டத்தை நீங்கள் தொடங்கும்போது எங்கள் பள்ளியில் இல்லை. இது எப்போது நம் பள்ளிக்கு வரும் என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன். சில நாட்களில் நீங்கள் எங்கள் பசி அறிந்து அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தியது எங்களை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மீண்டும் நீங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்தது என் செவிகளுக்கு ஆனந்தத்தைத் தந்தது.
அரசுப் பள்ளிகள் உங்கள் ஆட்சியில் பல ஏற்றங்களைக் கண்டு உள்ளன.
நான் பள்ளியில் சேரும்போது தரையில் உட்கார்ந்து இருந்தேன். நீங்கள் முதலமைச்சர் ஆனதும் எங்கள் பள்ளிக்கு மேசை வந்தது. பள்ளிக்கு வண்ணம் தீட்டப்பட்டு தரையில் ‘டைல்ஸ்’ பதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு அருகில் அறிவுப் பெட்டகமான நூலகம் வந்துள்ளது. எங்கள் பள்ளிக்கு இரண்டு தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, சுகாதாரமான நிலையில் உள்ளது. இந்தக் காலைச் சிற்றுண்டித் திட்டம் இருக்கும் வரை உங்கள் புகழ் நீடித்து நிற்கும் என்பது வரலாற்று உண்மை. இதைவிட அரசுப் பள்ளிக்கு என்ன வேண்டும்?
நீங்கள் எங்களுக்கு நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்த ஆசை கூட எனது சுயநலமான ஆசைதான். ஏன் என்றால், என் பள்ளிக் கல்வி மேன்மேலும் வளர வேண்டும் என்றால், நீங்கள் முதல்வராக இருந்தால் மட்டுமே முடியும். இந்த மடலை முன்பே எழுத வேண்டும் என்று எண்ணினேன்.
நீங்கள் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது என் கனவு தாத்தா. உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் பேத்திக்கு நீங்கள் வரும்போது அன்னமிட்ட தங்கள் கைகளுக்கு முத்தமிட ஆசை! அதைச் சொல்வதற்கான வாய்ப்பை யாரும் ஏற்படுத்தித் தரவில்லை…
எங்கள் பெரியார் பிஞ்சு இதழ் மட்டுமே எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு பெரியார் பிஞ்சுக்குக் கோடான கோடி நன்றிகள்!
பெரியார் பேத்தி,
தமிழ் பிரபாகரனி,
மூன்றாம் வகுப்பு,
ஆவடி மாநகராட்சித் தொடக்கப்பள்ளி, கோயில் பதாகை