அறிவின் விரிவு – 3: செயற்கை நுண்ணறிவு செயலிகள்
இப்போது நீங்கள் எல்லாம் சிறு பிள்ளைகள். செயற்கை நுண்ணறிவு உங்களுக்குப் பயன்படுமா?
இதற்கான பதில் – “பல விதங்களில் பயன்படும்” என்பதே!
இன்றிலிருந்து உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பல செயற்கை நுண்ணறிவு வலைத்தளங்களைப் பயன்படுத்தி உங்களின் அறிவையும் உங்களின் பேரார்வத்தையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். (உங்களில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால், அதில் இயங்கும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்)
முதலில் ‘சாட் ஜி.பி.டி’ (ChatGPT) பற்றித் தெரிந்து கொள்வோம். ஆனால், ஓர் எச்சரிக்கை! தற்போது இவை எல்லாம் ஆரம்ப நிலை தொழில்நுட்பங்கள் என்பதால் உங்கள் பெற்றோர் உதவியுடன்தான் இந்தச் செயலிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
‘சாட் ஜிபிடி’ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவுச் செயலி. இதற்கான வலைத்தளமும் உண்டு.
இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் செயல்படும் உங்களின் உதவியாளர் என வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சிறு பிள்ளைகள் என்பதால் உங்களுக்குப் பேரார்வம் இருக்கும். அந்த ஆர்வத்தைத் தீர்ப்பதற்கான கேள்விகளும் அதிகமாக இருக்கும். ஆனால் அந்தக் கேள்விகளை நீங்கள் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் அதிகமாகக் கேட்க முடியாது. கவலையை விடுங்கள். எத்தனை ஆயிரம் கேள்விகள் வேண்டுமானாலும் நீங்கள் ‘சாட் ஜி பிடி’யிடம் கேட்கலாம் அது உங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருக்கும்.
தற்போது ‘சாட் ஜிபிடி’ வலைத்தளத்திலும் செயலியிலும் தமிழ்ப் பயன்பாடு குறைந்த அளவில் தான் உள்ளது. அதனால் நீங்கள் ஆங்கிலத்தில்தான் இதைப் பயன்படுத்த வேண்டும்.
https://chatgpt.com/ என்ற வலைத்தளம் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்து கொண்டால் போதும். நீங்கள் இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கான செயலியும் உள்ளது. அதன் னிஸி சிஷீபீமீ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அதன் உள்ளே நுழைந்ததும் உங்களுடைய திரை இப்படி இருக்கும்.
கீழே உள்ள Text Box இல் உங்களுடைய கேள்விகளை இடலாம். இது செயற்கை நுண்ணறிவு என்பதால் சின்னச் சின்னச் செயல்பாடுகளில் கூட நமக்குக் கவனம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கு முன்பும் சின்னச் சின்ன விளக்க வார்த்தைகளைச் சேர்க்கும்போது இந்தச் செயற்கை நுண்ணறிவின் பதில் மிகத் தெளிவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு என்றால் என்னவென்று தெரிய வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள். இதைக் கேள்வியாகக் கேட்கும் போது;
1. “What is Artificial intelligence?” என கேட்கலாம். அல்லது,
2.“Explain to kids what artificial intelligence is with good examples” எனவும் கேட்கலாம். ஆனால், இரண்டாம் முறையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அது ஒரு சிறு குழந்தைக்கு விளக்குவதைப் போல எளிமைப்படுத்தி விளக்கும். இப்படியாக சிறு பிள்ளைகள் ஆன நீங்கள் ‘சாட் ஜிபிடி’ யில் கேள்வி கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் “Explain to kids” என்னும் பதத்தைக் கொண்டே கேள்விகளை ஆரம்பிப்பது நல்லது. இப்படியாக செயற்கை நுண்ணறிவு மிகச் சிறப்பாகப் பதில் அளிக்க உதவும் வகையில் கேள்விகளைக் கேட்பதை செயற்கை நுண்ணறிவுத் துறையில் பிராம்ப்டிங் (Prompting) என்பார்கள்.
மனிதனுக்கு ஒரு செய்தியை எளிதில் புரிய வைத்துவிடலாம். ஆனால், செயற்கை நுண்ணறிவை வேலை வாங்குவதற்குமுன் நமக்கு முழுமையாக அதன் செயல்பாடுகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இதை ‘பிராம்ப்ட் இன்ஜினியரிங்’ என்கிறார்கள். வருங்காலத்தில் இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். நாம் மேலும் மேலும் இனி வரும் மாதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
(விரியும்)