இப்ப நான் என்ன சொல்றது? கடவுளும் குண்டூசியும்!
அன்றைக்கு எல்லா ஊர்களையும் போலவே, எங்கள் ஊரிலும் அய்யப்பன் சாமிக்கு மாலை போட்டு, விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார்கள். இருமுடி கட்டுவதைக் காண நானும் காத்திருந்த காலம் அது.
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, வாரப் பூசையில் நள்ளிரவு தாண்டியும் நடைபெறும் பாட்டுக் கச்சேரி! இரண்டு, அதே பூசை முடிந்தவுடன் நடைபெறும் சோற்றுக் கச்சேரி! இரண்டுக்கும் நான் இசைந்தவன் தான். முன்னதில் கஞ்சிராக் கருவியின் தாளத்திற்கேற்ப கைகளைத் தட்டி பின்பாட்டுப் பாடுவேன். பின்னதில் வயிறு நிறைய ஒரு கட்டு கட்டிவிடுவேன்.
இதுவல்ல நான் சொல்ல வந்தது.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல், கடவுள் நம்பிக்கை போனபிறகும் இருமுடி கட்டும் சடங்கு, சம்பிரதாயங்கள், சாமியாடிகள் ஆகியவற்றில் உள்ள கூட்டம், குதூகலம், போன்றவை என்னை ஈர்த்துக்கொண்டிருந்தன.
குருசாமி, பூசை செய்த செம்பை இருமுடிகளுடன் எடுத்து ஒவ்வொரு கன்னிசாமியின் தலையிலும் வைப்பார். பின்னணியில் கஞ்சிராக் கருவியின் தாளம் பாடலின் லயத்திற்கேற்ப அதிரும். ஒட்டுமொத்தப் பெண்களும் உணர்ச்சிப் பெருக்கில் ஒரே நேரத்தில் நாக்கைச் சுழற்றி குலவையிடுவார்கள். உணர்ச்சியோ, உச்சம் சென்றுவிடும். சில பெண்கள் சாமியாடுவார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களும் அந்தச் சூழலுக்குள் அப்படியே இலயித்துப்போய்க் கரைந்து விடுவார்கள்.
இந்தக் காட்சியை இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இந்தப் பூசையில்தான், ‘கடவுள் இல்லை’ என்ற செயல் விளக்கத்தைச் செய்து காட்டத் துணிந்தோம்!
நான், 10 வயது மூத்த நண்பர் முருகேசன், செல்வராஜ் இன்னும் சிலர் கூட்டு. என்னைத் தவிர மற்றவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள்தான். ஆனாலும், அவர்கள் ஒத்துக்கொண்டதற்குக் காரணம், சாமியாடிகளைக் குண்டூசியால் குத்தும் போது, அவர்களின் எதிர்வினை எப்படியிருக்கும் என்கிற தொல்லை தரும் அற்ப எதிர்பார்ப்புதான்!
ஊசியால் குத்தப்பட்டவர்கள் ‘அய்யோ’, ‘அம்மா’ என்று கத்துவார்கள் என்பது என்னுடைய கருத்து. இதை நான் ஏற்கனவே எங்கேயோ படித்திருக்கிறேன். இது நடந்தது 1986 அல்லது 1987 களில்.
நாங்கள் எதிர்பார்த்திருந்த அந்த நேரமும் வந்தது.
ஏறக்குறைய ஊரார் அனைவருமே கூடியிருக்கின்றனர். நிச்சயமாக யாராவது ஒருவர் இதைப் பார்த்து விடத்தான் போகின்றார்.
அதன் பிறகு என்ன நடக்கும்? தெரியாது!
யார் குத்துவது? அதிலும் தகராறு. இறுதியில் நானே அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். காத்திருந்தோம்.
சிலர் நின்றுகொண்டே சாமியாடினர். ஒரு பெண் மட்டும் ஆ.. ஊ… என்று உடலை முறுக்கிக்கொண்டு ஆடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வந்தார். இது எங்களுக்கும் மிகவும் வசதியாகப் போய்விட்டது.
இதோ! இன்னும் சிறிது தூரம்தான்…
படபடக்கும் இதயத்துடன் ஆள்காட்டிவிரல், பெருவிரல்களுக்கிடையே இருந்த குண்டூசியை இறுக்கிப் பிடித்தபடி காத்திருந்தேன்.
அந்தப் பெண் ஆடியபடியே பக்கத்தில் வந்துவிட்டார்.
நான் குத்துவதற்காக கையையும் வேகமாக நீட்டத் தொடங்கி விட்டேன்.
“அய்யோ, அம்மா எவன்டா அது?”
கடுமையான கோபத்துடன் அந்தப் பெண் திரும்பினாள். திகைப்பும், அதிர்ச்சியும் என்னை மின்னல் போலத் தாக்கிவிட்டது. என்ன நடக்கிறது இங்கே? நான் தான் குத்தவேயில்லையே! அதற்குள் எப்படி? இதற்குள் தன்னிச்சையாக என் கையிலிருந்த குண்டூசி நழுவி விழுந்துவிட்டது.
“என்னாச்சு சாமி?”
யாராரோ சிலர் ஓடி வந்து சாமியாடியிடம் கேட்டனர்.
“எவனோ என்னை ஊசியால குத்திட்டான்” என்றார் சாமியாடிப் பெண்.
அவ்வளவுதான்… ஆளாளுக்குப் பேசத் தலைப்பட்டுவிட்டனர்.
என் நண்பனே கூட, “எவன்டா சாமியைக் குண்டூசியால குத்தியது?” என்று எகிறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, குத்தியது குண்டூசியால்தான் என்று போட்டுடைத்து விட்டானே! இந்தச் சூசகம் வேறு யாருக்காவது புரிந்துவிட்டால்?…
அவனை அச்சத்துடன் பார்த்தேன். அவனோ என் பார்வையைத் தவிர்த்தான்.
அடடே… இந்தப் பயல்தான் குத்தியிருக்கிறான்!
அங்கு இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு, ஆளுமில்லை; அதற்கான நேரமும் இல்லை. அதுமட்டுமல்ல, குத்தியவரையும் யாரும் பார்க்கவுமில்லை.
“யேய்… விடுங்கப்பா… ஆகற வேலையைப் பாருங்கப்பா…” என்று யாரோ, எவரோ கனத்த குரலில் கட்டளையிட்டுவிட, குழப்பத்தின் ஆயுள் அற்பமாகிவிட்டது. எனக்கோ வெற்றி! நண்பர்களுக்கோ அவர்களின் அற்ப எதிர்பார்ப்பு நிறைவேறினாலும் கிடைத்தது என்னவோ தோல்விதான்!
பிறகு, அப்பா எனது நெற்றியில் திருநீறு பூசிவிட்டதை அழித்தேன் அல்லவா? அப்போது அப்பா என்ன செய்தார் தெரியுமா? என்று முன்னரே (சென்ற இதழில்) கேட்டிருந்தேன். அல்லவா?
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான் என்றோ, ஒருவேளை அவருக்கும் உள்ளுக்குள் ஏதாவது கடவுள் இல்லை என்கின்ற கருத்துப் பதிவு இருந்ததோ என்னவோ எனக்குத் தெரியாது.
அவர் ஒன்றுமே சொல்லவில்லை! என் விருப்பத்தையும், கருத்தையும் அனுமதித்தார்.
அதைத்தான் அப்பா எனக்கு விட்டுச்சென்ற சொத்துக்களில் முக்கியமான சொத்தாக நான் இன்றும் கருதிக்கொண்டிருக்கிறேன்.
(அடுத்த இதழில்…)