கவிதை: அலைகள்
உள்ளம் கவரும் அலைகளே
உருண்டு புரளும் அலைகளே
வெள்ளை வெள்ளைப் பூக்களாய்
மேனி எங்கும் நுரைகளாம்!
ஆடும் குழந்தை போலவே
அழகுக் கோலம் காட்டிநீ
ஓடி ஓடி வருகிறாய்
ஓய்வே இன்றிப் பாய்கிறாய்!
கரையை வந்து தொட்டதும்
கண்ணை விட்டு மறைகிறாய்!
குறையும் தீர்ந்து போனதோ?
கொண்ட கோபம் மறைந்ததோ?
– முனைவர் முரசு நெடுமாறன்