கதை கேளு… கதை கேளு…ரெடி…கெட்…செட்…கோ!
பள்ளியின் விளையாட்டு தின விழா. சிறப்பு விருந்தினராக ராணுவ வீரர் வந்திருந்தார். மூன்று நிமிடங்களில் சிறப்புரையை முடித்தார். குழந்தைகளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. வண்ண வண்ண ஆடை அணிந்து கொண்டு காத்திருந்தனர். வகுப்பு வாரியாக விளையாட்டுத் திடலில் நடனம் இருக்கின்றது. கூடவே ஓட்டப் பந்தய இறுதிப் போட்டியும் நடக்க இருந்தது.
எல்.கே.ஜி. வகுப்பினருக்கான 50 மீட்டர் ஓட்டப் பந்தயம் என அறிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து இருந்தனர். வானம், பூமி, நெருப்பு, நீர் என குழுக்களுக்குப் பெயர்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி வண்ணத்தில் டீ-சர்ட். எல்.கே.ஜி. வகுப்பில் ஓடப்போவது ராகினி, நிகிதா, சலோமி, வேல்விழி. அவர்கள் விளையாட்டுத் திடலுக்கு வரும் முன்னர் ஒரு சிறு சலசலப்பு.
“எனக்கு ப்ளூ கலர் சர்ட் தான் வேணும்”- ராகினி.
“எனக்கு நீ போட்டிருக்கற ரெட் கலர் சர்ட் தான் வேணும்” – நிகிதா
“எனக்கு வெள்ளைக் கலர் சர்ட் வேணும்” – சலோமி
வேல்விழிக்கு எந்த நிறச் சட்டையாக இருந்தாலும் சரி. ஆனால், குத்தக்கூடாது என்ற நிபந்தனை மட்டும்.
வகுப்பு ஆசிரியர் வித்யா திணறினார். ஏனெனில், வெள்ளைச் சட்டையே இல்லை. ஏற்கனவே குழுக்கள் பிரிக்கப்பட்டு இருந்தன. நிகிதாவின் சட்டையையும் ராகினியின் சட்டையையும் அவர்களுக்கு மாற்றிவிட்டார். இப்போது நால்வருக்கும் மகிழ்ச்சி.
முந்தைய இரவு லேசான மழை தூறல் மட்டும் இருந்தது. ஓடுதளத்திற்கு எதுவும் சிக்கல் இல்லை. முன்னரே, 50 மீட்டரை அளந்து வைத்திருந்தனர். எல்.கே.ஜி. மாணவர்கள் விளையாட்டுத் திடலை அடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் மைத்ரேயன் நான்கு வீரர்களையும் வரிசையில் நிற்க வைத்தார்.
“இங்க இருந்து அதோ அந்தக் கோடு போட்டிருக்கே அது வரை ஓடணும். நல்லா வேகமா ஓடணும் சரியா?” என்றார். அவருக்கு என்ன நடக்கப் போகுது என்று அப்போது தெரியவில்லை.
அவருக்கு உதவுவதற்குச் சில உதவியாளர்கள் இருந்தனர். அப்புவிற்கு ஓட்டப் பந்தயம் பொறுப்பு. குழந்தைகளைப் பார்த்து, “வாங்க வாங்க, ரெடியா உட்காருங்க!” என்றார் மைத்ரேயன்.
உட்காருங்க எனச் சொன்னதும் வேல்விழி ஆரம்பக் கோட்டிற்கு இந்தப் பக்கம் சப்பளாங்கால் போட்டு அமர்ந்துவிட்டாள். ஓ! இப்படித்தான் உட்கார வேண்டுமோ என்று மற்ற மூவரும் அமர்ந்தனர்.
“என்னம்மா பண்றீங்க… இங்க டிபன் எல்லாம் போடல” என்று கடுப்பானார் மைத்ரேயன்.
“நான் காலையே உப்புமா சாப்பிட்டேன்” – நிகிதா.
“எனக்கும் வேண்டாம், நான் பொங்கல் சாப்பிட்டேன்” – வேல்விழி
“நான் இட்லிதான் சாப்பிட்டேன். ஒன்… ஒன்னும் அப்புறம் ஹாஃப் இன்னொன்னு” – ராகினி
“நான் மோர் மட்டும் குடிச்சேன். வேகமா ஓடணும் இல்ல” என்றாள் சலோமி.
அந்த முனையில் இருந்து தயார் என்று விசில் ஊதினார்கள்.
“பாப்பாக்களா, உட்காருன்னா இப்படி இல்ல, முட்டி போட்டு ஓடத் தயாரா உட்காருவதைச் சொன்னேன்” என்று விளக்கினார்.
நால்வரும் முட்டி போட்டனர். ஆனால், மீண்டும் மைத்ரேயன் கடுப்பானார். சர்ச்சில் முட்டிபோடுவதைப்போல அமர்ந்து இருந்தனர்.
“கண்ணுங்களா, இப்படி உட்கார்ந்தா எப்படிப்பா ஓடுவீங்க. இருங்க நான் செய்து காட்டறேன்” என்று அவர் அமர்ந்து காட்டினார்.
“ரெடி… கெட்… செட்… கோ” என்று உதவியாளர் அப்பு சொல்லி க்ளாப் போர்டை அடித்தார். க்ளாப் போர்டை அன்றைய விளையாட்டுப் போட்டிக்காக வாங்கி வந்திருந்தனர்.
‘டப்’ என்று சத்தம் வந்ததும் மூவர் ஓடினர். நிகிதா அப்புவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். “அங்கிள், சூப்பரா வருது சத்தம். இன்னொரு வாட்டி அடிங்க” என்றாள். மற்ற மூவரும் கொஞ்ச தூரம் ஓடி, நிகிதா எங்க வரவில்லை என்று மெதுவாகச் சென்றுகொண்டு இருந்தனர். “இன்னொருவாட்டி அடிங்க அங்கிள்” என்றாள். அப்பு எதுவும் யோசிக்காமல் குழந்தை கேட்டாளே என இன்னொருமுறை அடித்தார். ஓடிக்கொண்டிருந்த மூவரும் நின்றனர். திரும்ப அப்புவை நோக்கி வந்தனர். “என்னாச்சு அங்கிள்” என ஓடி வந்தனர்.
மேலும் மேலும் கடுப்பானார் மைத்ரேயன். திரும்பவும் வரிசையில் நிற்க வைத்தார்.
“ரெடி… கெட்… செட்… கோ!” என்று உதவியாளர் அப்பு சொல்லி ‘க்ளாப் போர்டை அடித்தார். இப்போது நிகிதாவும் ராகினியும் அப்படியே நின்றனர். “ஆமா நிகிதா, சத்தம் சூப்பரா இருக்கு.! இன்னொருவாட்டி அடிங்க” என்றாள் ராகினி. மற்றொரு முறை அடிக்கும் முன்னர் மற்ற இருவரும் திரும்ப வந்துவிட்டனர்.
மேலும் மேலும் கடுப்பானார் மைத்ரேயன். திரும்பவும் வரிசையில் நிற்க வைத்தார். இம்முறை க்ளாப் போர்டு வேண்டாம் விசிலே போதும் அப்பு என்று சொல்லிவிட்டார்.
“ரெடி… கெட்… செட்… கோ!” என்று சொல்லி விசில் அடித்தார் உதவியாளர் அப்பு. நால்வரும் நகரவில்லை. ‘ஓடுங்கடா!’ என்றார். எங்களுக்கு ‘டப்’ சத்தம் வரலையே என்றனர் நால்வரும். அது பழுதாகிடுச்சு, இப்ப விசில் கேட்டதும் ஓடுங்க என்றார் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர். மனமில்லாமல் சம்மதித்து மீண்டும் நின்றனர். ஆனால், இதற்குள் பள்ளி முழுக்க சலசலப்பு. ஏனெனில், மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் தாமதமாகின்றன. ராணுவ வீரரும் என்னாச்சு என விசாரித்தார்.
“ரெடி… கெட்… செட்… கோ!” என்று சொல்லி விசில் அடித்தார் உதவியாளர் அப்பு. நால்வரும் ஓட ஆரம்பித்தனர். அப்பாடா என நிம்மதி அடைந்தார் மைத்ரேயன். அங்கே ஒரு கடைசி நேர மாற்றம். சலசலப்பினை அறிந்து அவர்களுடைய ஆசிரியர் வித்யா அங்கு மைதானத்திற்கு விரைந்தார். தங்கள் ஆசிரியரைப் பார்த்ததும்.. ஓடுதளத்தில் இருந்து விலகி, “வித்யா மேம்… வித்யா மேம்!” என பல ஆண்டுகள் கழித்து பார்ப்பதுபோல பார்த்துக் கொண்டே ஓடினார்கள்.
“வித்யா மேம், நாங்க ரன்னிங் ரேஸ் ஓடுறோம். அங்க ‘டப்பு’ன்னு ‘க்ளாப்’ அடிச்சாங்க. சூப்பரா இருந்துச்சு. அப்புறம் விசில் அடிச்சாங்க” என எல்லாவற்றையும் சில நொடிகளில் தெரிவித்தனர்.
மேலும் மேலும் மேலும் கடுப்பில் இருந்தார் மைத்ரேயன். “மேம், நீங்க இங்கயே இருந்து ஓட வெச்சிருங்க” என்று வித்யாவைக் கெஞ்சினார். “சீக்கிரமா வேகமா ஓடணும்” என வாழ்த்தினார் வித்யா.
“ரெடி! கெட்… செட்… கோ!” என்று சொல்லி விசில் அடிக்க முயன்றார் அப்பு. விசில் சத்தம் வரவில்லை. விசில் பழுதாகி இருந்தது.
“அங்கிள் வெறும் காத்துதான் வருது” என்றாள் வேல்விழி சிரித்துக்கொண்டே.
மைத்ரேயனின் முகத்தில் ஈ ஆடவில்லை. தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தனர் ராணுவ வீரர் என எல்லோரும் இவர்கள் அருகே வந்தனர். நடந்தவற்றை மைத்ரேயன் விவரித்தார். “பசங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க. என்கிட்ட விசில் இருக்கு. நான் ஊதித் துவக்கி வைக்கிறேன்” என்றார் ராணுவ வீரர்.
“கிட்ஸ்! ஆல் த பெஸ்ட்!” என்றார் ராணுவ வீரர்.
“ரெடி… ஒன் – டூ – த்ரீ… கோ!” என்று விசில் அடித்தார் ராணுவ வீரர். நால்வரும் ஓடவில்லை. ஏன், இப்ப என்னாச்சு என குழம்பினர். வழக்கமாக விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகள் தான் மயக்கம்போட்டு விழுவார்கள். ஆனால் அங்கே, மைத்ரேயன் மயக்கத்தில் இருந்தார்.
“ஆர்மி அங்கிள், நீங்க ‘ரெடி கெட் செட் கோ’ சொல்லணும்” என்றாள் வேல்விழி. ‘ஓ’! என்று கண்களை விரித்து, “இப்ப நான் சரியா சொல்கின்றேன்” என வாக்களித்தார்.
“ரெடி கெட் செட் கோ!” என்று சொல்லி மீண்டும் விசில் அடித்தார் ராணுவ வீரர். நால்வரும் ஓட ஆரம்பித்தனர். பள்ளியே ஒரு நிம்மதி நிலையை அடைந்தது. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல். “கமான் (சிஷீனீமீ ஷீஸீ) ராகினி..” என்று. ராகினியின் அப்பா அப்போதுதான் பார்வையாளராக வந்து சேர்ந்து இருந்தார். ராகினி நின்றாள். குரல் வந்த திசையைப் பார்த்து “அப்பா…” என்று ஓடினாள். மற்ற மூவரும்…”மாமா…” என்று கத்திக்கொண்டே பின் தொடர்ந்தனர்.
மேலும் மேலும் மேலும் மேலும் மேலும் மேலும்…
ராணுவ வீரர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். நால்வரையும் கைப்பிடித்து விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். “எல்.கே.ஜி. ஓட்டப் பந்தயத்தில் நால்வருக்கும் முதல் பரிசு! – ராகினி, வேல்விழி, சலோமி, நிகிதா” என்று அவரே ஒலிபெருக்கியில் அறிவித்து பரிசுகளைக் கொடுத்து ஒளிப்படங்களையும் எடுக்க நின்றார்.
சலோமி மெல்ல ராணுவ வீரரைப் பார்த்து, “ஆர்மி அங்கிள், பரிசு கொடுத்துட்டீங்க, அடுத்து எங்களுடைய ரன்னிங் ரேஸா?” என்றாள்.
மேலும் மேலும் மேலும் மேலும் மேலும் மேலும் மேலும் மேலும்….<