வெற்றியைத் தடுக்குமா எமகண்டம்?
நேர்முகத் தேர்வினை முடித்த முகில் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்தான். வீட்டு வாயிலில் முகிலின் அப்பாவும் அவனது நண்பன் தமிழரசனின் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த வேலையாவது மகனுக்குக் கிடைத்திருக்குமா என்ற ஆவலில் – ஏக்கத்தில், முகில் வேலை கிடைச்சிருச்சா என்றார். இல்லை அப்பா என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றான் முகில்.
சரியான ராகு காலத்தில் வீட்டைவிட்டுச் சென்றால் போன காரியம் எப்படி உருப்படும்? பெரியவர்கள் சொல்வதைக் கேட்டால்தானே என்று புலம்பினார் செழியன்.
செழியா, உனக்கு வேறு சிந்தனையே கிடையாதா? எப்பப் பார்த்தாலும் நாள் நட்சத்திரம் என்கிறாய். நேரத்தில் என்ன இருக்கிறது? திறமை இருந்தால் வேலை தானாக கிடைக்கப் போகிறது? முகில் இப்போது சென்ற நேர்முகத் தேர்வில் முகிலைவிடத் திறமையானவர்கள் வந்திருக்கக்கூடும். அதனால் நம் முகிலுக்கு இந்த வேலை கிடைக்காமல் போயிருக்கலாம். எனவே நாம் முகிலினை, உனது திறமையை இன்னும் வளர்த்து அடுத்த நேர்முகத் தேர்விற்குச் செல். நிச்சயம் வெற்றிபெறுவாய் என ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு… எந்தக் காலத்தில் இருக்கிறாய் நீ என்றார் தமிழரசனின் தந்தை செல்வம்.
நாளும் கோளும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன. எனவே நல்ல நேரம் பார்த்து எதையும் ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே என்றார் செழியன்.
எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை செழியா. முயற்சியும் திறமையும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி பெறலாம்.
கலியுகம் நடக்கிறது செல்வம். உன் போன்றவர்களைத் திருத்த முடியாதப்பா என்றவர், ஒரு பெரிய கம்பெனியிலிருந்து நாளை நேர்முகத் தேர்விற்கு வரச்சொல்லி முகிலுக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறினானே. தமிழுக்கும் வந்துள்ளதா? என்றார்.
ஆமாம், வந்திருப்பதாகக் கூறினான். இருவரும் சேர்ந்தே செல்லட்டும். வெற்றி பெற்று வரட்டும் என்றார் செல்வம். மறுநாள் காலையில் தமிழரசன் கிளம்பி முகிலின் வீட்டிற்கு வந்தான். வரவேற்ற முகிலின் அப்பா, அந்தக் கம்பெனியில் எத்தனை காலி இடங்கள் உள்ளன தமிழ் என்றதும் 2 இடங்கள் அங்கிள் என்றான். அந்த 2 இடங்களும் உங்கள் இருவருக்கே கிடைக்க எனது வாழ்த்துக்கள் என்றார். நன்றி சொல்லிய தமிழ், முகில் கிளம்பி வரவே கிளம்புறோம் அங்கிள் என எழுந்தான்.
தமிழ் இப்பொழுது மணி என்ன? என்றார். 8 அங்கிள் என்றதும், இன்று புதன்கிழமை, 9 மணி வரை எமகண்டம் உள்ளது. நேர்முகத் தேர்வு எத்தனை மணிக்கு? அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்ற வினாக்களை எழுப்பினார்.
அப்பா, 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் கம்பெனிக்குள் இருக்க வேண்டும். இங்கிருந்து 45 நிமிடத்திற்குள் கம்பெனியை அடைந்து விடலாம் என்றான் முகில்.
அப்படியெனில் 9 மணிக்குக் கிளம்புங்கள் என்றார். அங்கிள், போக்குவரத்து நெரிசலிருப்பின் என்ன செய்வது என்ற தமிழின் கேள்விக்கு, நல்ல நேரத்தில் செல்வதால் தடைகள் ஏதும் ஏற்படாது என்றார் செழியன்.
அங்கிள் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. கிளம்பியாச்சு, செல்கிறோம் என்றதும், உங்க அப்பாவைப் போலதான் நீயும் இருப்ப. நீ வேண்டுமானால் செல். முகில் 9 மணிக்குத்தான் கிளம்புவான் என்றார்.
9 மணிக்குக் கிளம்பிய முகில் பரபரப்பாக ஓடி வந்து பேருந்தைப் பிடித்தான். பேருந்து கிளம்பிய 10 நிமிடத்தில் ஏதோ பழுதினால் நின்றுவிட்டது. இறங்கிய முகில் ஆட்டோ பிடித்துச் சென்றான். போக்குவரத்து நெரிசலில்அனைத்து வாகனங்களும் தத்தளித்துக் கொண்டிருந்தன. முகில் தனது அவசர நிலையைக் கூறியதும் ஆட்டோ ஓட்டுநர் சந்துகளில் எல்லாம் சென்று ஒருவழியாக கம்பெனி வாயிலில் நிறுத்தினார்.
காவலாளியிடம் சென்று நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பதாகக் கூறினான் முகில். நேரம் முடிந்துவிட்டது சார். எல்லோரும் உள்ளே சென்றுவிட்டார்கள். இனி யாரும் வந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்பது மேலாளரின் உத்தரவு என்றார் காவலாளி.
எதிர்பாராமல் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மேலாளரிடம் தெரிவித்து வாருங்கள். அவர் அனுமதி கொடுத்தால் உள்ளே அனுப்புங்கள் ப்ளீஸ் சார் என்று கெஞ்சினான் முகில்.
முகிலின் பரிதாபமான நிலையினைக் கண்டு மனம் இரங்கிய காவலாளி மேலாளரிடம் சென்று முறையிட அனுமதி கிடைத்தது. காவலாளிக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்றான். நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டோர் அனைவரும் முடிவிற்காகக் காத்திருந்தனர். அப்போது நிறுவனத்தின் தலைவர் வந்தார். அவரது உதவியாளர் கொடுத்த கோப்பினை வாங்கிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
இது ஒரு பன்னாட்டு நிறுவனம். திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட அனைவருமே நல்ல முறையில் பதிலினைச் சொன்னீர்கள். எனினும் உங்களிலிருந்து எங்களுக்குத் தேவையான இருவரைத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் யாரெனத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருப்பீர்கள். தமிழரசன், பிரசன்னா.
எல்லோரும் நன்றாகப் பதில் சொன்னீர்கள் என்று சொல்லிவிட்டு நம்மை ஏன் தேர்வு செய்யவில்லை என்று மற்றவர்கள் நினைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு சிறிய தவறு காணப்பட்டது. இதனை ஏன் நான் சொல்கிறேன் என்றால், இனி நீங்கள்கலந்துகொள்ளும் நேர்முகத் தேர்வில் அந்தத் தவற்றினை நீக்கிக் கொள்ளலாம் அல்லவா அதனால்தான் என்றதும், சொல்லுங்கள் சார் திருத்திக் கொள்கிறோம் என்றனர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்கள்.
ஒவ்வொருவரின் பெயரினையும் கூறி தவற்றினைச் சுட்டி வந்த தலைவர் முகிலின் பெயரினைக் கூறியதும் பரபரப்பானான் முகில்.
முகில் தேர்வாகாததற்கு அவர் காலதாமதமாக வந்ததுதான் காரணமாக அமைந்துவிட்டது. திறமை, பணியில் ஒழுக்கம் முதலியவற்றுடன் காலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கம்பெனியின் குறிக்கோள்களுள் ஒன்று. நேரத்தை வீணடிப்பதை மிகப் பெரிய குற்றமாக நாங்கள் கருதுகிறோம். பல உலக நாடுகளின் வெற்றிக்கு அவர்கள் நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவதுதான் காரணமாக அமைந்துள்ளது என்றார்.
தமிழரசனுக்கு வேலை கிடைத்ததை அறிந்த செழியன் செல்பேசியில் செல்வத்தைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறி, தமிழுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவிக்கச் சொன்னார். அப்போது செல்வம், முகிலுக்கும் வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றார். உடனே செழியன், என்ன செய்றது? முகிலுக்கு நேரம் சரியில்லை என்றார்.
செழியா, முகிலின் நேரம் சரியாகத்தான் இருந்தது. கிளம்பிய பிள்ளையை எமகண்டம்னு தடுத்து நிறுத்தின அதே எமகண்டத்தில்தான் தமிழரசன் கிளம்பிச் சென்றான். உனது மூடநம்பிக்கையால்தான் முகில் வெற்றி பெறவில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து உன்னைத் திருத்திக் கொள்.
ஒரு நாளின் எல்லா நேரமும் நல்ல நேரமே என்பதை உணர்ந்து நேரம் காலம் பார்க்காமல் முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி நம்மைத் தேடி வரும். முகில் திறமைசாலி. அடுத்த நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவான். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக பெற்றோர்களாகிய நாமே இருக்கக் கூடாது.