அறிவியல் சிறுகதை: இருபால் – ஒரு பறவை
கதிரும், முரளியும் நெருங்கிய நண்பர்கள், இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
பள்ளி விடுமுறை என்றால் இருவரும் பக்கத்தில் உள்ள மலைப் பகுதிக்குச் சென்று விடுவார்கள். அந்த மலையின் அடிவாரத்தில் தான் அவர்களின் வீடும் உள்ளது. இருவரும் சிறு வயதிலிருந்தே மலையைப் பார்த்து வளர்ந்தவர்கள். மலைக்குப் பக்கத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் அவர்களின் தோட்டத்திற்கு யானை, காட்டுப்பன்றி எல்லாம் வருவதுண்டு.
இருவருக்கும் மலையேற்றம், காட்டைப் பார்த்தல், பறவைகளைப் பார்த்தல் போன்றவை ரொம்பப் பிடிக்கும். அந்த மலையில் இவர்கள் காலடிச் சுவடுகள் பதியாத இடங்களே குறைவுதான். எந்த இடத்தில் பாதை மாறினாலும் தவறாமல் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள். அந்த அளவுக்கு அம் மலையின் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.
பலமுறை யானைகளையும், கரடிகளையும், மான்களையும் பார்த்துப் பயந்து ஓடியும் வந்திருக்கிறார்கள். யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அவை ஊருக்குள் வராமல் இருக்க மலைப்பகுதியை ஒட்டி நீளமான அகழிகளை வெட்டி வைத்திருந்தார்கள்.
அவ்வப்போது மின் வேலியில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க, தங்களது தோட்டம், காடுகளைச் சுற்றியும் உயிர்வேலி அமைத்திருந்தார்கள்.
குளிர்காலத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பறவைகள் வலசை வரும் என்பதால், அவற்றைப் பார்க்க இருவரும் ஆவலோடு காட்டுக்குள் பயணமானார்கள்.
இந்த முறை மலை உச்சியில் இருக்கும் நீர் ஊற்றைப் பார்ப்பதும், புதிய பறவைகளைப் பார்ப்பதும் தான் அவர்களின் நோக்கமாக இருந்தது. அடர்வனத்திற்குள் இருக்கும் அந்த நீர் ஊற்றைப் பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
புதிய பறவைகளைப் படமெடுக்கத் தமது கேமராக்கள், தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் அந்த மலை அவர்களுக்குப் புதியது போன்றே காட்சி அளித்தது.
மதியத்திற்குள் அவர்கள் பாதி மலையைக் கடந்திருந்தார்கள், முன் சென்று கொண்டிருந்த கதிர், தூரத்தில் மூங்கில் புதருக்கு அருகில் சில யானைகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.
சத்தமே இல்லாமல் மெதுவாக இருவரும் வேறு திசை நோக்கிப் பயணம் செய்தனர். சற்று நேரத்திக்கெல்லாம் அந்த மலையின் மய்யப்பகுதிக்கு வந்து விட்டதை அடர்ந்த மரங்கள் உணர்த்தின. பறவைகளின் பல வகை இரைச்சல், காற்றில் மரங்கள் அசையும் சத்தத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்த மலை அவ்வளவு அமைதியாக இருக்கும்.
கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய புதர் வர, கதிரும், முரளியும் ஆளுக்கொரு பாதையில் பிரிந்து விட்டனர். புதருக்கு வலது புறத்தில் கதிரும், இடது புறத்தில் முரளியும் சென்று கொண்டிருந்தனர்.
அங்கிருந்த வேங்கை மரக்கிளையில் இருந்து ஒரு புது விதமான ஒலி கேட்டது. அந்த ஒலி வந்த திசையை நோக்கிப் பார்த்த கதிருக்கு ஒரே வியப்பு!
இவ்வளவு நாட்களாக இது போல ஒரு பறவையை அந்தக் காட்டில் அவன் பார்த்ததே இல்லை. அவ்வளவு அழகு – ஈர்ப்பு!
உடனே முரளியை மெதுவாக அழைத்து, “மேலே பார்! சிவப்பு நிறத்தில் ஓர் அழகான பறவை இருக்கு” என்றான் கதிர்.
ஆனால் மேலே சாம்பல் நிறத்தில் ஒரு பறவை அமர்ந்திருப்பதைப் பார்த்தான் முரளி. இருவரும் அப்பறவையைத் தத்தமது கேமராக்களில் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். சிறிது நேரத்தில் அந்தப் பறவை அங்கிருந்து “சர்ரென்று” பறந்து சென்று விட்டது.
இருவரும் கொஞ்ச தூரத்தில் இருந்த சுனையில் தண்ணீர் குடித்து விட்டு, பாறையின் மீது அமர்ந்து சற்று ஓய்வெடுத்தனர்.
“அந்தச் சிவப்புக் குருவி அழகாக இருந்ததுல்ல” என்றான் கதிர்.
“என்னடா சொல்லற, அது சாம்பல் நிறத்துல தானே இருந்தது” என்றான் முரளி.
“பார்த்த எனக்குத் தெரியாதா? அது சிவப்பு நிறக் குருவிதான்” என்றான் கதிர். “அது சாம்பல் நிறம் தான்” என்று உறுதியாகச் சொன்னான் முரளியும்.
பேசிக்கொண்டே இருவரும் தத்தமது கேமராக்களை எடுத்துப் பார்த்தனர். இருவருக்குமே அதிர்ச்சி, கதிரின் கேமராவில் அப் பறவை சிவப்பு நிறத்திலும், முரளியின் கேமராவில் சாம்பல் நிறத்திலும் இருந்தது.
“என்னடா இது ஒரே பறவை வேறு வேறு நிறத்தில் இருக்கு” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு அது வியப்பாகவும், மர்மமாகவும் இருந்தது.
நேரம் மதியத்தைத் தாண்டி விட்டது, இப்போது புறப்பட்டால் தான் மாலைக்குள் வீடு போய்ச் சேர முடியும். இருவரும் வேக வேகமாக மலையிலிருந்து இறங்கி வந்தார்கள். அந்தப் பறவை மட்டும் இருவரின் மூளைக்குள்ளும் சிறகடித்துப் பறந்து கொண்டே இருந்தது.
அடுத்த நாள் காலை, கால்நடை மருத்துவர் செல்வம் அவர்களது வீட்டிற்குச் சென்று, தாங்கள் மலையில் பார்த்த புது வகைக் குருவியைப் பற்றி விளக்கினர்.
செல்வம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். பல அரிய வகைப் பறவைகளைக் கண்டறிந்ததற்காகப் பல விருதுகளையும், பாராட்டையும் பெற்றுள்ளார்.
இருவரின் கேமராவையும் பார்த்த செல்வத்திற்கு ஒரே வியப்பு. ‘இவ்வளவு நாட்களாக இப்பறவை எப்படி நம் கண்ணில் படாமல் போனது’, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.
கதிருக்கும், முரளிக்கும் ஒன்றுமே புரியவில்லை.
“இதுதான் கர்தினால் குருவி.
இது பாதி ஆண்குருவியாகவும், மறுபாதி பெண்குருவியாகவும் இருக்கிறது” என்றார் செல்வம்.
“ஒரே குருவியில் ஆண், பெண் குருவிகளா?” என்றான் வியப்புடன் கதிர்.
“ஆமாம் கதிர், ஆண்குருவி சிவப்பாகவும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் இருக்கிறது அல்லவா? மேலும் 10 லட்சத்தில் ஒரு பறவை தான் இப்படி ஆணும், பெண்ணும் கலந்தது போல் இருக்கும்” இதனை‘Gynandromorphism’ என்பார்கள். பறவைகள், பட்டாம்பூச்சிகள், சிலந்திகள் போன்ற உயிரினங்களில் செல்களில் ஏற்படும் குழப்பம் காரணமாக இத்தகைய நிலை உருவாகும் என்றார்.
“நமது மலைப் பகுதியில் இப்படி ஒரு பறவை இனமா சார்?” என்றான் முரளி.
“இவ் வினப் பறவைகள் எல்லாம் இதுபோல் இருப்பதில்லை. இது அரிய நிகழ்வுதான். தென் அமெரிக்கப் பறவையான கர்தினால், சிவப்புக் குருவி என அழைக்கப்படுகிறது. மேலும் இப்பறவை கனடா, கிழக்கு அய்க்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ போன்ற இடங்களில் காணப்படும். இப்பறவை அங்கிருந்து நமது காட்டுக்கு வலசை வந்திருக்கும்” என்று விளக்கினார்.
தங்களது கேமராவில் இருவேறு நிறத்தில் அப்பறவை பதிவானதற்கான காரணத்தை இப்போது புரிந்துகொண்டனர்.
‘இருபால் – ஒரு பறவை’ என்று குறிப்பிட்டு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அப்பறவையின் ஒளிப்படங்களை இருவரும் பகிர்ந்தனர். ‘வாழ்வில் ஒருமுறை மட்டுமே காணும் வாய்ப்பு’ என எல்லோரும் அப்பறவையின் படங்களைக் கொண்டாடினர்.