துணுக்குச் சீட்டு – 22 : சிறகில் நீர் நிரப்பி
“இன்னிக்குத் தண்ணீர் குடிச்சிங்களா?”
என்ன, ஆரம்பமே கேள்வியா இருக்கு?
சரி சொல்லுங்க, குடிச்சிங்களா?
அப்போ, பறவைகள்?
அதுலயும், பறக்கத் தெரியாத பறவைக் குஞ்சுகள் எல்லாம் தண்ணீர் குடிச்சிருக்குமா? ஆமா, பெற்றோர் பறவை, அதோட அலகு மூலமா வெகுதூரத்துல இருந்து தண்ணீர் எடுத்துக்கிட்டு வந்து, குஞ்சுகள் குடிக்க அதுங்களோட வாயில ஊற்றுமோ?
பொதுவா பறவைகள் அதோட குஞ்சுகளுக்குக் நீர்த்தன்மை அதிகம் இருக்கிற மாதிரியான உணவைத்தான் கொடுக்கும். ஆனால், நமீபியா மற்றும் தென் ஆப்ரிக்கப் பாலைவனங்களில் வாழும் sandgrouse எனும் பறவை, தன்னோட உடம்பின் உதவியோடு தண்ணீரைச் சுமந்து வந்து தன் குஞ்சுகளுக்குத் தரும். அதுவும், ஒரு கிலோமீட்டர் ரெண்டு கிலோ மீட்டர் இல்லை, சுமார் 20கிலோமீட்டர் தூரம் வரை சென்று, தண்ணீரைத் தேடி எடுத்துக் கொண்டு வரும். அது எப்படி உடம்பு மூலமா தண்ணீரைக் கொண்டு வரும்? அது தன்னோட இறகுகளின் உதவியோட தான் தண்ணீரைக் கொண்டு வரும்.
காக்கையோட இறகு, நீளமா நேராக இருக்கும் அல்லவா? அதுபோலத்தான் பொதுவா பறவைகளின் இறகுகள் இருக்கும். ஆனால், sandgrouse பறவையின் இறகுகளில் இருக்கிற கூரலில் உள்ள கூரல் பிசிறுகள், கூரலின் ஈருடன் இணைந்து இருக்கும் பகுதியில் (கூரல் பிசிறின் அடிப்பாகம்) சுருட்டிக்கொண்டும், முடிவில் (கூரல் பிசிறின் கடைசிப்பாகம்) நீட்டிக்கொண்டும் இருக்கும். இப்படி இருக்கும் இறகை, தண்ணீரில் வைச்சா, சுருட்டிக்கொண்டு இருக்குற பாகம், நேராக நிமிர்ந்துவிடும். நம்மளோட பத்து விரல்களையும் மடக்கி நெருக்கமா வச்சி விரிச்சா, ஒன்னோடு ஒன்னு பின்னிக்கும் அல்லவா? அது போலவே,ரொம்ப நெருக்கமாக இருக்கும் இரண்டு இறகுகளைத் தண்ணீரில் வச்சா, விரிகிற அடிப்பாக கூரல் பிசிறு இன்னொரு அடிப்பாக கூரல் பிசிறோட பின்னிக்கும். இதுபோலவே, எல்லா கூரல் இழைகளும் பின்னிக்குறதால, அதுல தண்ணீரைச் சேமிச்சு sandgrouse பறவையால் தண்ணீரை எடுத்துட்டு வர முடியுது. ஆனால், கூரல் பிசிறுகளோட கடைசிப் பாகம், நேரா நிமிர்ந்து இருக்குமே! அப்போ, அந்த தண்ணீர் கீழ சிந்திடாதா? சிந்தாது.
இப்போ, உங்க உள்ளங்கையை நேராக வச்சி இருக்கீங்க, அதுல தண்ணீர் ஊற்றுகிறோம்ன்னு வச்சிக்கோங்க, அந்தத் தண்ணீர் கீழ சிந்தக்கூடாதுன்னு உள்ளங்கையை உள் பக்கமாகக் குவிப்பீங்கதானே? அப்படித் தான், நேராக இருக்கிற இறகின் கடைசிப்பாகம், தண்ணீர் பட்டதும், உள் பக்கம் குவியும். இப்படி பின்னிக்கொள்ளும் அடிப்பாகக் கூரல் பிசிறு மற்றும் குவியும் கடைசிப் பாக கூரல் பிசிறால தான், sandgrouse பறவையால அதோட குஞ்சுகளுக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்குற தண்ணீரைச் சுமந்து வந்து, அதோட குஞ்சுகளுக்குக் கொடுக்க முடியுது.
இறகுகளில் தண்ணீரைச் சுமந்துகொண்டு வந்தால், எப்படி இறக்கையை விரிக்க முடியுங்குறிங்களா? அதுக்குத்தான், புத்திசாலித்தனமா இந்த sandgrouse பறவைகள், நீர்நிலையில் சுமார் 20-25 நிமிடங்கள் உட்கார்ந்து, அதோட வயிற்றுப் பகுதியில இருக்கும் இறகுகளில் மட்டும் தண்ணீரை எடுத்துட்டு வரும். பறக்கும் போது, அது எடுத்துக்கிட்டு வரும் பாதித் தண்ணீர் ஆவியாக மாறிடும். மீதம் உள்ள நீர் தான் குஞ்சுகளுக்கு!
இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எவ்வளவு வியப்பு இருக்கு பார்த்தீங்களா?