எப்போ பழுக்கும்?
மே மாதம், ஆசையா மாம்பழம் சாப்பிடலாம்ன்னு நினைச்சி எடுத்து, (நவம்பர்ல மாம்பழத்தை வேற ஞாபகப் படுத்திட்டேனா? சரி, திட்டாதிங்க…) அந்த மாம்பழம் இன்னும் பழுக்காம இருக்குன்னு எடுத்துட்டுப் போய் எடுத்த இடத்துலயே திரும்பவும் வைச்சிட்டு வந்து இருக்கீங்களா? நானும் நிறையத் தடவை அப்படிச் செய்து இருக்கேன். பழம் சீக்கிரம் பழுக்க ‘trick’ சொல்லட்டா? கனியாத மாம்பழம், பப்பாளி, போன்ற பழங்களை எல்லாம் ஒரு காகிதப் பையில் போட்டுச் சுற்றி வைத்தால், ரொம்ப சீக்கிரமாவே பழுத்துடும். ஆனா, திராட்சையை அப்படி வைச்சா, பழுக்காது. அது ஏன் காகிதப் பையில் சுற்றி வைச்சா, சீக்கிரம் பழுக்குது?
பழங்களை ‘climacteric, non-climacteric fruits’ என இரண்டு வகையா பிரிக்கலாம். சில பழங்கள், செடியில இருந்தா மட்டும் தான் பழுப்பேன்னு அடம் பிடிக்கும். அது, இனிப்புத் தன்மையா மாறத் தேவையான அனைத்துச் சாரங்களையும் செடியில் இருந்து மட்டும் தான் எடுத்துக்கும். இதை ‘non-climacteric’ வகைப் பழம் என்று சொல்லுவோம். அதுவே சில வகைப் பழங்கள் செடியில் இல்லைன்னாலும் பழுக்கும். அவை சமர்த்து பழங்கள். இதை ‘climacteric’ வகைப் பழங்கள் என்று சொல்லுவோம்.
மாம்பழம், பப்பாளி எல்லாம் ‘climacteric’ வகைப் பழங்கள். ஆனால், திராட்சை, தர்பூசணி போன்றவை, ‘non-climacteric’ வகைப் பழங்கள். அதனால்தான் திராட்சையைக் கொடியில் இருந்து பறிச்சிட்டா, பழுக்க மாட்டேங்குது.
அது ஏன் காகிதப் பையில் சுற்றி வைச்சா சீக்கிரம் பழுக்குது? பழங்கள் பழுக்க, அவற்றில் ‘ethylene’ எனும் ஒரு ‘hormone’ சுரக்கும். சுரக்கும் அந்த ‘ethylene’ வாயு பழத்துக்கு வெளியேயும் பரவும். காயின் பச்சை நிறத்தை பழத்தோட நிறத்துக்கு மாற்ற இந்த ‘hormone’ உதவுது. அதோட நிக்காம, இந்த ‘ethylene’ பழத்தை இனிப்பாக்கவும் உதவுது.
இன்னொன்னும் இந்த ‘ethylene’ செய்யும். ‘ethylene’ வாயு, பழத்துக்கு வெளியே வந்து, பக்கத்துல இருக்குற ‘climacteric’ பழத்திடம் போய், “நண்பா, நீ பழுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஆரம்பி!” என்று சொல்லும். அது மட்டும் இல்லாமல், அந்த ‘ethylene’ வாயு, பக்கத்துல இருக்குற பழத்தைத் தொடர்ந்து பழுக்க வைக்க உதவிக்கிட்டே இருக்கும் இதனால, அந்த ‘climacteric’ பழமும், ‘ethylene’ வாயுவைச் சுரந்து, அதை சுற்றி இருக்கும் ethylene வாயுவின் உதவியோடும், சீக்கிரம் பழுத்திடும்.
இப்போ, காகிதப் பைக்கு வருவோம். ஒரு வாழைப்பழத்தைக் காகிதப் பையில் வைச்சு, அதை மூடி வைக்கும் போது, பழத்தில் இருந்து வெளியே வரும் ‘ethylene’ வாயு அந்தப் பைக்குள்ளையே இருக்கும். இந்த வாயு, மறுபடியும் அந்த வாழைப்பழத்தின் மேல்படும்போது, இன்னும் வேகமா பழம் பழுக்க ஆரம்பிக்கும். அதனால தான், ‘climacteric’ பழங்களான மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் எல்லாம், காகிதப் பையில் மூடி வைச்சா, சீக்கிரமா பழுத்துடுதுங்க!.