கதை கேளு கதை கேளு: “நான், உயரக் குதிக்க வேண்டும்”
குசகு அழுகையை நிறுத்தவில்லை. அதன் அம்மா முயல் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தது. குசகு வெள்ளை நிறத்தில் இருந்தது.
“அழாதே குசகு..”.
குசகுவிற்கு இரண்டு நீண்ட காதுகள்.
“அம்மா சொல்றேன் இல்ல, அழுகையை நிறுத்து”.
குசகுவிற்கு அழகான இரண்டு பற்கள்.
“கேரட் வேண்டுமா?”.
குசகுவின் முதுகில் கருப்பு நிறத்தில் வட்டம்.
“நண்பர்களுடன் சண்டை போட்டாயா?”.
குசகுவிற்கு பளபளக்கும் இரண்டு கண்கள்.
அழுகையை நிறுத்திவிட்டு, தனது விருப்பத்தைச் சொன்னது.
“நான், அதோ அந்த மரத்தைவிட உயரமாகக் குதிக்க வேண்டும்”
“என்னது”
குசகு மீண்டும் சொன்னது,
“நான், அதோ அந்த மரத்தைவிட உயரமாகக் குதிக்க வேண்டும்”
காட்டிலேயே மிக உயரமான மரம் அதுதான். அதன் மேலிருந்து காடு முழுவதையும் பார்த்துவிடலாம். பறவைகள், தூரத்து மலைகள், நீர்நிலைகள், அடர்த்தியான மரங்கள் என எல்லாமே அங்கிருந்து தெரியும் கிக்கிளியா கிளி அங்கிருந்து எல்லாவற்றையும் பார்த்தாக குசகுவிற்குச் சொன்னதால் வந்த வினை இது. அம்மா எவ்வளவோ விளக்கியது.
“நம்மாலே பறக்க முடியாது குசகு”
“நான் உயரக் குதிக்க வேண்டும்”
“நமக்கு இறக்கை இல்லை குசகு”
“நான் உயரக் குதிக்க வேண்டும்”
“மரம் ரொம்ப உயரமா இருக்கு”
“நான் உயரக் குதிக்க வேண்டும்”
சரி, என்ன செய்யலாம் என்று யோசித்தது. காட்டில் இருந்த உயரமான யானையிடம் சென்றன அம்மாவும் குசகுவும்.
“யானையாரே, குசகுவிற்கு மெனாரா மரத்தைவிட உயரமாகக் குதிக்க வேண்டுமாம்! உங்கள் தும்பிக்கையைத் தூக்கி வீசிப் பிடிக்க முடியுமா?” என்று கேட்டது. யானையார் வருத்தமுடன் “என் தும்பிக்கையில் சதை பிசகியுள்ளது. மருத்துவரிடம் போய்க்கொண்டு இருக்கேன். மன்னிக்கவும்” என்றது.
குசகுவும் அம்மாவும் காட்டிலே வேகமாகப் பாயும் சிறுத்தையிடம் சென்றனர். ”சிறுத்தையாரே, குசகுவிற்கு மெனாரா மரத்தைவிட உயரமாகக் குதிக்க வேண்டுமாம்; உங்கள் வாயால் கவ்வியபடி அவ்வளவு உயரத்திற்குப் பாய முடியுமா?” என்று கேட்டது. சிறுத்தையார் சோகமாக, “எனக்கு இரண்டு மாதமாக உயரம் என்றாலே மயக்கம் வருகின்றது. மருத்துவரிடம் போய்க்கொண்டு இருக்கேன். மன்னிக்கவும்” என்றது.
குசகுவும் அம்மாவும் காட்டிலே வேகமாக மரம் ஏறும் கரடியிடம் சென்றனர். ”கரடியாரே, குசகுவிற்கு மெனாரா மரத்தைவிட உயரமாகக் குதிக்க வேண்டுமாம்; உங்கள் வாயால் கவ்வியபடி மரத்தில் ஏறி, அங்கிருந்து தூக்கிப் போட முடியுமா?” என்று கேட்டது. கரடியார் சோக முகத்துடன், “தேன் நிறையச் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கு நீரிழிவு வந்துவிட்டது. மரத்திலேயே ஏறக்கூடாது, நிறைய நடக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். மன்னிக்கவும்” என்றது.
“நான் உயரக் குதிக்க வேண்டும்” – குசகு
காட்டில் வேறு யாருடைய உதவியைக் கேட்பது என்று யோசித்தது அம்மா. நீளமான கழுத்துடைய ஒட்டகச்சிவிங்கிகள் எல்லாம் சுற்றுலா சென்றுள்ளன. கொக்குகளால் குசகுவின் எடையைத் தாங்க முடியாது. இப்படியாக யோசித்துக் கொண்டிருக்கும்போது…
“எனக்கு உயரக் குதிக்க வேண்டும்” – குசகு
“அட, கொஞ்சம் பொறுமையாக இருக்கமாட்டாயா?” என அம்மா எரிச்சல் அடைந்தது. திடீரென ஒரு மெல்லிய குரல்- “இன்றைக்கு ஓர் இரவு மட்டும் எங்களுக்கு நேரம் தாங்க! நாங்க ஏற்பாடு செய்கின்றோம்” என்றது. அம்மாவிற்கு இவர்களால் என்ன செய்ய முடியும் என்று தோன்றியது. ஆனாலும் வேறு வழி அதற்கு அப்போது இல்லை.
காலையில் அம்மாவும் குசகுவும் அங்கே வந்தனர். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு சிலந்தி. அது தன் நண்பர்களை அழைத்து பெரிய வலையைப் பின்னி இருந்தது. வலிமையான வலையாக இருந்தது. “இப்ப குசகுவை இதில் தூக்கிப் போடுங்க” என்றன சிலந்திகள். போட்டதும் குதி குதி குதி எனக் குதித்தது குசகு. ‘ஏ.. ஏ ..ஏய்’ எனக் கத்திக்கொண்டே உயர உயரக் குதித்தது. பத்தாவது நிமிடத்தில் மெனாரா மரத்தைக் காட்டிலும் உயரமாகக் குதித்தது. “நான் குதிச்சிட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கத்தியது.
மேலே பறந்த பறவைகள் எல்லாம் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் பறந்தன. அம்மா முயலும் எல்லாச் சிலந்திகளுக்கும் உணவைப் பகிர்ந்து கொடுத்தது. அன்று இரவு முழுக்க “நான் குதிச்சிட்டேன்!” “நான் குதிச்சுட்டேன்!” என்று ஆனந்தக் கூச்சலிட்டது குசகு.
(மெனாரா என்பது மலேசிய நாட்டின் டானம் பள்ளத்தாக்கில் காணப்படும் 100 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு மரம்)