பிற இதழிலிருந்து…முடி நம் அடையாளமல்ல!
ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தொடர்ந்து ஆறு மாதங்கள் நாள்தோறும் இரண்டு மணி நேரம் கதை சொல்லல் நிகழ்வை நடத்தினேன்.
காலை நான்கு மணிக்கு எழுந்து இரவு 12 மணி வரை படிக்கும் பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கான மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
கதை வழியாக உரையாடலைத் தொடங்குவது வழக்கம். அப்படி உரையாடிக் கொண்டிருந்த போது, “உங்களுடைய அடையாளம் எது?” எனக் கேட்டேன். ஒவ்வொருவரும் கன்னம், கண், நிறம், உயரம், கை, நகங்கள், கால், மூக்கு, உதடு, தலை முடி இப்படிக் கூறிக்கொண்டே வந்தார்கள். தொலைக்காட்சியில் வந்த ‘எனது முடி எனது அடையாளம்’ என்கிற தேங்காய் எண்ணெய் விளம்பரம் ஞாபகம் வந்தது. “ஒரு பெண்ணின் அடையாளமாக முடி எப்படி இருக்க முடியும்?” எனக் கேட்டேன்.
“முடியைப் பராமரிக்க நேரத்தைச் செலவு பண்றது வேஸ்ட். அந்த முடியால நமக்கு எதுவுமே வரப்போவதில்லை. பசங்களைப் பாருங்க, அதுக்குன்னு ஏதாவது சிரத்தை எடுத்துக்குறாங்களா? ஆனா, நாம ஏன் இவ்வளவு நேரம் முடிக்காகச் செலவிடறோம்? காலங்காலமா முடிதான் அழகுன்னு சொல்லிச் சொல்லி வளர்த்துட்டாங்க. அம்மாக்கள்கூட ‘கல்யாணத்திற்குப் பிறகு நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. அதுவரைக்கும் முடிவெட்டக் கூடாது’ என்றுதான் சொல்லுவாங்க. என்னோட அம்மாவும் அப்படித்தான் சொன்னாங்க” என்றேன்.
மாணவர்கள் கூர்ந்து கவனித்தனர். ‘உனது அடையாளம் உனது திறமைதான்’ என்பதை நோக்கி அந்த விவாதம் நகர்ந்தது. மறுநாள் சென்றபோது ஒரு மாணவி ஓடிவந்து “அக்கா… நீங்கள் யாழினியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். “ஏன், என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். “இடுப்பு வரைக்கும் இருந்த முடியை இப்படி வெட்டிட்டா அக்கா” என்று கூறியவுடன், அவளது தலைமுடியைப் பார்த்தேன். தோள் வரை இருந்தது.
முடி வெட்டியதற்கான காரணத்தை யாழினியிடம் கேட்டேன்.
“அக்கா, நீங்க நேத்து ‘முடி அடையாளம் கிடையாது. திறமைதான் அடையாளம்’னு சொன்னீங்க. நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது. அதான், வெட்டிக்கிட்டேன்” என்றாள். “இன்னைக்குக் காலையில குளிச்சுக் கொஞ்ச நேரத்திலேயே தலை காஞ்சிருச்சு” என்று மகிழ்ச்சியாகக் கூறினாள்.
ஒரு மாதம் சென்றிருக்கும். “இப்போதெல்லாம் தலைவாரிப் பின்னல் போடும் நேரம் மிச்சமாகிறது. படிக்கவும் நேரம் கிடைக்கிறது. பொடுகுத் தொல்லை இல்லை. பேன் இல்லை வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் தலைக்குக் குளிக்கிறேன். முன்பெல்லாம் முடியை ஈரமாகப் பின்னிக்கொண்டு சென்றதால் தலைவலியால் அவதிப்பட்டேன். இப்போது அந்தத் தலைவலியும் போய்விட்டது. அம்மா கடந்த வாரம் என்னைப் பார்க்க நான் தங்கிப் படிக்கும் விடுதிக்கு வந்தார். அவரிடம் இது பற்றிச் சொன்னேன். ‘உனக்கு எப்படிப் பிடித்திருக்கிறதோ அப்படியே வைத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டார்” என்று மகிழ்வோடு கூறினாள்.
மெதுவாக அவள் தலையை வருடியபடி, “உனக்கான அடையாளத்தை உன் திறமையின் மூலமாக நீதான் உருவாக்க வேண்டும்” என்றேன். “இனி என்னோட அடையாளம் என்னுடைய திறமைதான்” என்றாள். வாரி அணைத்துக்கொண்டேன்.
(நன்றி: தமிழ் இந்து)
குறிப்பு: முடியை வளர்த்துக் கொண்டு பெண்கள் நேரம் விணாவதைப் பெரியார் தாத்தா தான் முதலில் கேள்வி கேட்டார். கிராப் வெட்டிக் கொள்பவர்களுக்குப் பரிசு அறிவித்தார். இந்த மாற்றம் இப்போது மிக எளிதாக நடந்து கொண்டிருக்கிறது.