இப்ப நான் என்ன சொல்றது? பக்தர்களை மட்டும் தண்டித்த கடவுள்?
அப்போது எனக்கு வயது 18 அல்லது 19 இருக்கலாம்.
ஒருநாள்…
‘விசுக்’கென்று எழுந்து அமர்ந்தேன்.
“சட்டுபுட்டுன்னு குளிச்சுட்டு தயாராகப் பாருங்க”
என்னை எழுப்பி விட்டவரின் குரலை மட்டும்தான் கேட்க முடிந்தது. அதற்குள் அந்த கருக்கிருட்டில் மறைந்துவிட்டார். அந்த இருட்டை விரட்ட முடியாமல், இருந்த ஒன்றிரண்டு குழல் விளக்குகளும் தடுமாறின. இன்னும் விடியவே இல்லையே என்ற அயர்ச்சியுடன் திரும்பினேன். எனது அண்ணன், உறவினர்கள் சிலரும் எழுந்து அமர்ந்தபடி இருந்தனர். சுற்று முற்றும் பார்த்தேன்.
‘ஓ… இது நம்ம வீடில்லை! திருமூர்த்திமலை அடிவாரம்…’
எங்கள் ஊர்க் கடவுள் வெப்பத்தால் அவதிப்படுகிறாராம். அவரைக் குளிர்விப்பதற்காக பஞ்சலிங்க நதி தீர்த்தத்தை (தண்ணீர்) எடுத்துச் செல்வதற்காக 25 – க்கும் மேற்பட்டோர் வந்திருக்கிறோம்.
அதுசரி, நாத்திகனான நான் எப்படி இதில்?
தவிர்க்க முடியாத நேரங்களில் அந்தத் தீர்த்தச் (தண்ணீர்) சொம்பை (கும்பம்) கைமாற்றிக் கொள்ளலாம். இந்தக் கடுமையான நேர்த்திக் கடனைச் செய்ய முன் வருகின்றவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்ததால் அதைத் தவிர்ப்பதற்காக இப்படியொரு இடைச்செருகல் ஏற்பாடு. அந்த விதிவிலக்கில் அண்ணனுக்கு உதவியாளாக (Substitute) வந்தவன்தான் நான். என்னைப் போலவே இன்னும் சிலரும்.
கொளுத்தும் கோடையில் திருமூர்த்தி மலையிலிருந்து 21 கிலோ மீட்டர் தார்ச் சாலையில் நடக்க வேண்டும். அதுவும் வெறும் காலில்; தவறிக்கூட தீர்த்தச் சொம்பைத் தரையில் வைக்கக்கூடாது. அதிலிருக்கும் தீர்த்தமும் குறையக்கூடாது. இவற்றையெல்லாம் நேர்த்திக் கடனாளிகள் உண்ணா விரதமிருந்து கடுமையான கட்டுப்பாடுடன் நிறைவேற்றித் தர வேண்டும்.
இப்படி நேரிடையாக அருள் பெறுவதாகச் சொல்லப்படுகிறவர்கள் ஒரு வகை; நேர்த்திக்கடன் செய்கிறவர்களுக்கு உதவி செய்து மறைமுகமாக கடவுள் அருளைப் பெறுவதாகக் கருதப்படுகிறவர்கள் இன்னொரு வகை. இரண்டாம் வகையினர்தான் நடந்து வருகிறவர்களை வழியெங்கிலும் வரவேற்று மகிழ்வர். சில இடங்களில் வரவேற்பு மேளதாளத்துடன் இருக்கும். சிலர் சாமியாடுவார்கள். அப்போது உடன் வருகிறவர்கள் கும்பத்திலிருக்கும் தீர்த்தம் சிந்திவிடக்கூடாதே என்று பதறுவார்கள்.
பதற்றம் சரி! தண்ணீர் சிந்துமா? சிந்தாதா? என்றால், நிச்சயமாகச் சிந்தும். அப்புறம்? ம்… விழுப்புரம்! இருக்கவே இருக்கு புதிய விதிவிலக்கு!
பெண்களும் தங்கள் பங்குக்குக் குடங்களில் தண்ணீர் பிடித்து அதில் வேப்பிலைகளைப் போட்டு, சாமியாடிகளை மண்டியிட்டு அமரவைத்து அவர்கள் தலையிலும், மற்றவர்களுக்குப் பாதங்களிலும் குளிர்ந்த நீரை ஊற்றுவார்கள். நேர்த்திக் கடனாளிகளுக்கு அப்போது கடவுளுக்கு நிகராக மரியாதை கிடைக்கும். இப்படியொரு பயணத்திற்காகத்தான் நாங்கள் நேற்று மாலை ஊரிலிருந்து புறப்பட்டு வந்து இரவில் திருமூர்த்தி மலை முருகன் கோயில் மண்டபத்தில் தங்கியிருந்தோம்.
ஒருவழியாக எழுந்து சென்று எலும்புகளை ஊடுருவும் கடும் குளிரிலும் குளித்துவிட்டுக் கரையேறினோம். காலை 6 மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்கள். நான் அண்ணனின் செருப்பை ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டேன். முற்பகல் 11 மணிக்குப்பிறகு, தார்ச் சாலை தனது ஈர மனதைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதனால் சிறுநடை சிறு ஓட்டமானது. சில இடங்களில் சிறு ஓட்டம் பெரு ஓட்டமானது. சில இடங்களிலோ சாலையோரப் புளியமர நிழலில் தஞ்சமடைந்தோம். தார்ச் சாலையை விட்டுக் கீழே இறங்கினாலோ கொதிக்கும் புழுதி!
நண்பகல் 12 மணிக்கு ஒரு மண்டபத்தில் ஓய்வெடுத்தோம். நான் எனது அண்ணனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“உங்கள் பாதங்கள் இப்போதே சிவந்துவிட்டன. இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். ஆகவே, செருப்பு போட்டுக் கொள்ளுங்கள்” என்றேன்.
இதற்கெல்லாம் சுலபமாக விதிவிலக்குப் பெற்றுவிடலாம் என்று நான் உறுதியாக இருந்தேன். ஆனால், அண்ணன் மறுத்துவிட்டார்.
மீண்டும் பயணம் தொடர்ந்தது.
மூன்று மணிக்கு மேல் அடுத்த ஓய்வு கிடைத்தது. எண்ணியது போலவே அண்ணனின் பாதங்களில் சில கொப்புளங்கள் கனன்று கொண்டிருந்தன. மிகுந்த வேதனையுடன் கால்களைப் பக்கவாட்டில் சாய்த்து வைத்துதான் அவரால் நடக்க முடிந்தது. பிறகு, நானே சொம்பைத் தூக்கிச் சென்றேன். எண்ணியது போலவே சிலர் பேச முற்பட்டனர். ஆனால், அண்ணன் நிலையைப் பார்த்து நிறுத்திக் கொண்டனர்.
ஒருவழியாக மாலை 5 மணிக்கு மேல் ஊர் வந்து சேர்ந்து விட்டோம். சிலரின் சொம்புகளில் (கும்பம்) தீர்த்தம் (தண்ணீர்) குறைந்திருந்தது.
கடவுள் சிலைக்கு வழக்கம் போலவே எல்லாம் நடந்தது.
ஆனால், எனது அண்ணன்?
நடக்கவே முடியாமல் அவதிப்பட்டார்.
இன்றைக்கும் இந்தச் சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அன்றைக்கு நடந்தது போலல்ல; திருமூர்த்திமலை அடிவாரத்திலிருந்து ஒரு வாகனத்தில் பயணம் செய்து, ஊர் மாரியம்மன் கோயிலில் வந்து இறங்கி, அங்கிருந்து வெப்பம் தணிந்த மாலை நேரமாகப் பார்த்து, ஊர்க் கோயிலுக்கு நடந்து செல்கிறார்கள். காலம், 21 கிலோ மீட்டரை
2 கிலோ மீட்டராகச் சுருக்கிவிட்டது.
இந்தச் சுருக்கம் நமக்கு எதையோ சுட்டிக்காடுகிறதே!
ஆம், மாறுதல் ஒன்றுதான் மாறாதது!
(அடுத்த இதழில்…)